தினமும் காலையில் தண்ணீரில் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து குடித்தால் எடை குறையும் என்பது உண்மையா?
– ஆதிரா (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.
“ஆப்பிள் சைடர் வினிகர் என்பது ஆப்பிளில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றை புளிக்க வைத்துத் தயாரிக்கப்படுவது. ஆப்பிளில் உள்ள சர்க்கரையானது பாக்டீரியா அல்லது ஈஸ்டுடன் ரியாக்ட் செய்யும். அதன் பிறகு அது ஆல்கஹாலாகவும் வினிகராகவும் மாறும். சுருக்கமாகச் சொன்னால் ஆப்பிள் சைடர் வினிகர் என்பது புளிக்க வைக்கப்பட்ட ஆப்பிள் ஜூஸ்.
ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து தினமும் காலையில் குடிப்பது மட்டுமே எடைக்குறைப்புக்கு உதவும் என்று சொல்ல முடியாது. ஆப்பிள் சைடர் வினிகரில் ஏராளமான நல்ல விஷயங்கள் உள்ளன. சாப்பாட்டுக்கு முன் இதை எடுத்துக் கொள்வதன் மூலம் பசி உணர்வு மட்டுப்படுவதாக சில ஆய்வுகள் சொல்கின்றன.
ஆனால் எடைக்குறைப்பு என்று வரும்போது இதை மட்டுமே நம்பி எடுத்துக்கொள்வது சரியானதல்ல. எடைக்குறைப்பு என்பது சரிவிகித உணவு, உடற்பயிற்சி, நல்ல தூக்கம், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது என பல விஷயங்களை உள்ளடக்கியது.