- எம். மணிகண்டன்
- பிபிசி தமிழ்

பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி, பெரிய அளவிலான போராட்டங்கள் என இலங்கை ஒரு திசையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இறுதிப் போர் படுகொலைகளுக்கு பழிவாங்கும் விதமாக தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக வெளியான செய்தி வேறொரு பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.
ஆனால் இந்தச் செய்திக்கு மையப்புள்ளியாகக் கருதப்படும் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகள் எவ்வித பரபரப்பும் இல்லாமல் அமைதியாகக் காணப்படுகின்றன. இங்கு இப்போது கஞ்சி வாரம் அனுசரிக்கப்படுகிறது.
உப்பு, நீர், அரிசி ஆகியவற்றை மட்டும் கலந்து கொதிக்க வைத்த கஞ்சியை விநியோகிக்கும் நிகழ்வு முல்லைத்தீவைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக நடந்து கொண்டிருக்கிறது. இதை முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் என்கிறார்கள்.
கஞ்சி வாரத்தின் பின்னணி, இலங்கை இறுதி யுத்தத்தின் வலி மிகுந்த பல கதைகளைக் கொண்டிருப்பதை, இந்த நிகழ்வுகளில் பங்கேற்றோரிடம் பேசும்போது கேட்க முடிகிறது.
“2009-ஆம் ஆண்டு இறுதி நாள்களில் மருந்துகள் இல்லை, மருத்துவர்கள் இல்லை, உணவுப் பொருள்கள் இல்லை. ஒரு வீட்டில் 100 கிராம் அரிசி கிடைத்தாலே அதை கஞ்சியாகக் காய்ச்சி 10 பேர் வரை குடிக்கும் நிலை இருந்தது. இந்த நிலையை மறக்கக்கூடாது என்பதற்காகத்தான் அதே போன்ற கஞ்சியைக் காய்ச்சி விநியோகிக்கும் இந்த நிகழ்வை தொடர்ந்து நடத்துகிறோம்,” என்கிறார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தைச் சேர்ந்த மரியசுரேஷ் ஈஸ்வரி.
முல்லைத் தீவுக்கு பிபிசி தமிழ் குழு சென்ற போது, முள்ளியவிளையில் கஞ்சி காய்ச்சி விநியோகிக்கும் நிகழ்வில் பங்கேற்றோரிடம் பேசியது.
“போரில் எத்தனையோ பேர் உடல் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள். பலர் கடத்தப்பட்டு காணாமல் போய் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். காயப்பட்ட பலர் மருத்துவ வசதி இல்லாமல் ரத்தம் சிந்தித்தான் இறந்து போனார்கள். நாங்கள் காலில் விழுந்தோம். கையேந்திக் கும்பிட்டோம். ஆனால், யாரும் காப்பாற்றவில்லை,” என்று போரின் கடைசி நாள்களை நினைவுகூர்ந்தார் ஈஸ்வரி.
ஈஸ்வரி
“ஒரு பகுதி மக்கள் குண்டுகளால் இறந்து கொண்டிருந்தபோது, இன்னொரு புறம் மக்கள் பட்டினியால் இறந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதை அரசு தடுத்தது” என்கிறார், வட மாகாணத்தில் விவசாய அமைச்சராகப் பணியாற்றிய கந்தையா சிவநேசன்.
பொருளாதார நெருக்கடியிலும், அரசியல் குழப்பத்திலும் இலங்கை சிக்கியிருக்கும் நிலையில் இறுதிப் போர் படுகொலைகளின் நினைவேந்தல் நிகழ்வு மே 18-ஆம் தேதி அனுசரிக்கப்பட இருக்கிறது. இதற்கு முந்தைய ஒரு வாரத்துக்குத்தான் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படுகிறது.
கொழும்பில் நடப்பதைப் போன்ற அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஏதும் இங்கு இல்லை. கொழும்பிலும் பல்வேறு பிற நகரங்களிலும் நீண்ட வரிசையில் பெட்ரோலுக்காக வாகனங்கள் காத்திருப்பதைப் போன்ற காட்சியையும் இங்கு காண இயலவில்லை.
அப்படியானால் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பெரிய பாதிப்பு இல்லையா என்ற கேள்வி எழக்கூடும்.
“முல்லைத் தீவு மாவட்டம் விவசாயத்தையும் மீன் பிடித்தலையும் நம்பியிருக்கிறது. உரம் இல்லாததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எரிபொருள் இல்லாமல் படகுகள் மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை. ஆனால், இது வளமான மாவட்டம் என்பதால் வீடுகளிலேயே காய்கறிகள் போன்றவை விளைவிக்கப்படுகின்றன. அதனால் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் அதிகமாக உணரப்படவில்லை” என்கிறார், சிவநேசன்.
பட மூலாதாரம், AFP
கந்தையா சிவநேசன்
முள்ளியவிளையில் நடந்த நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கஞ்சி காய்ச்சி விநியோகித்தனர். வாகனங்கள், பேருந்துகளில் செல்வோர் என அனைவருக்கும் விநியோகிக்கப்படுகிறது.
இத்தகைய கஞ்சி காய்ச்சி வழங்கும் நிகழ்வுக்கு காவல்துறையின் அனுமதி இல்லை. அதே நேரத்தில், இந்த நிகழ்வுகளை காவல்துறையினர் தடுப்பதும் இல்லை என்று இதை ஏற்பாடு செய்தவர்கள் கூறுகிறார்கள்.
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலைச் சுற்றியுள்ள பல சாலைகளில் குறைந்தது 10 இடங்களில் ராணுவத்தின் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு வரும் வழியில் பல ராணுவ முகாம்களும், கூடவே சாலைத் தடுப்புகளும் காணப்படுகின்றன. பல இடங்களில் அடையாள அட்டையைக் காட்டிய பிறகே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
முல்லைத் தீவில் இருந்து முள்ளிவாய்க்காலுக்குச் செல்லும் வழியில் இருக்கும் குறுகிய பாலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. வழக்கமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடக்கும் இடத்தில் ஒரு சிலரைத் தவிர, பெரிய கூட்டம் ஏதுமில்லை. ஆனால் சுற்றிலும் காவலர்களும் ராணுவ வீரர்களும் என சுமார் 50 பேர் வரை கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் நினைவிடம்
“போரில் சொந்தங்களை இழந்த தெற்குப் பகுதி மக்களுக்கு அவர்களது உறவுகளை எந்தத் தடையும் இல்லாமல் நினைவுகூர முடிகிறது. அதேபோன்ற உரிமை எங்களுக்கும் வேண்டும்” என்கிறார் நிகழ்வில் பங்கேற்ற ஆறுமுகம் ஜோன்சன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :