விரும்பிய உணவை அனைவராலும் வாங்கிவிட முடிவதில்லை. இன்னும் பல இடங்களில் மூன்று வேளை உணவு என்பது பலருக்கும் கிடைக்காமல் இருக்கிறது. ஆரோக்கியமான உணவை பெறப் பணம் முக்கிய தேவையாக உள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, `கடந்த 2021-ம் ஆண்டில் 74.1 சதவிகித இந்தியர்களால் ஆரோக்கியமான உணவைப் பெற முடியவில்லை’ என்று கூறியுள்ளது.
இது குறித்து உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்…
“ஆரோக்கியமான உணவைப் பெற முடிந்தவர்களின் எண்ணிக்கை 2020-ல் 76.2 சதவிகிதமாக இருந்தது. அதுவே இந்த எண்ணிக்கை 2021-ல் 74.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள 82.2 சதவிகித மக்களும், வங்கதேசத்தில் உள்ள 66.1 சதவிகித மக்களாலும் ஆரோக்கியமான உணவை பெற முடிவதில்லை.
சமீப காலங்களில் உணவுப் பொருள்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள் மீதான விலைவாசி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைச் சமாளிக்கக் கூடிய அளவிற்கு போதிய ஊதியம் இல்லாதிருப்பதும் ஆரோக்கியமான உணவை பெற முடியாததற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
இன்னும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆசியா, பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 370.7 மில்லியன் மக்கள் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் அவதியுற்றனர். உணவு, கால்நடைகளுக்கான தீவனம், எரிபொருள், உரங்கள் மற்றும் நிதி ஆகிய ஐந்து விஷயங்களில் கடும் நெருக்கடியை சந்தித்தனர்.