தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 34,384 பேருக்கு மட்டும் தான் அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்குப் பிந்தைய மூன்றாண்டுகளில் வழங்கப்பட்ட பணிகளையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை 40,000 என்ற அளவை எட்டக்கூடும். இதுதவிர 33,655 பேருக்குத் தற்காலிக அரசு வேலை வழங்கப் பட்டுள்ளன. எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாட்டு இளைஞர்களின் தேவைகளை இவை நிறைவேற்றாது.

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காளியாகக் கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அதன்படி ஐந்தாண்டுகளில் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, கடந்த மூன்றரை ஆண்டுகளில் அரசுப் பணிகளிலிருந்து ஒன்றரை லட்சம் பேர் ஓய்வு பெற்றிருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்தால் மொத்தம் 7 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும். அதற்காக ஆண்டுக்கு 1.40 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாகச் சேர்த்தே 40 ஆயிரம் பேருக்குத்தான் அரசு வேலைகளைத் திராவிட மாடல் அரசு வழங்கியிருக்கிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு மன்னிக்கவே முடியாத அளவுக்குப் பெரும் துரோகத்தைத் தமிழக அரசு செய்திருக்கிறது.