புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பிறக்கும் குழந்தையில் இருந்து வயதானவர்கள் வரை இந்நோயால் பாதிக்கப்படாதவர்கள் இல்லை.
இந்நிலையில், `உலகளவில் 50 வயதிற்குட்பட்டவர்கள் புற்றுநோயால் புதிதாக பாதிக்கப்படுவது, 79 சதவிகிதம் அதிகரித்துள்ளது’ என பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட புற்றுநோய் குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்…
* உலகளவில் 1990-ல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1.82 மில்லியனாக இருந்தது. அதுவே 2019-ம் ஆண்டில் 3.26 மில்லியனாக அதிகரித்தது. புற்றுநோயின் விளைவால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் 28 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
* மரபணு காரணங்கள், அதிகளவு சிவப்பு இறைச்சி மற்றும் உப்பு எடுத்துக் கொள்வது, குறைந்தளவு பழங்கள் மற்றும் பால் உட்கொள்வது, மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவை 50 வயதுக்குட்பட்டவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன.
* 2022-ல், இந்தியாவில் சுமார் 14.6 லட்ச புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 2025-ல் இந்த எண்ணிக்கை 15.7 லட்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
* உலகளவில் 2019-ம் ஆண்டில் 50 வயதுக்குள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில், மார்பக புற்றுநோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறது.
* 1990களுக்கு பிறகு மூச்சுக்குழாய் புற்றுநோய் மற்றும் புராஸ்டேட் புற்றுநோய்கள் வேகமாக அதிகரித்துள்ளன.
*அதிலும் 40 வயதில் இருப்பவர்கள் பாதிக்கப்படுவதற்கான ஆபத்துகள் அதிகம் உள்ளது.

*`நோய்த் தடுப்பு மற்றும் முன்கூட்டியே நோயைக் கண்டறிதல் இரண்டும் அவசர தேவையாக உள்ளன. ஆரம்பகால புற்றுநோய்களுக்கான உகந்த சிகிச்சை உத்திகளை அடையாளம் கண்டு, இளம் நோயாளிகளின் பராமரிப்பு தேவைகளை நிவர்த்தி செய்யும் முழுமையான அணுகுமுறையை மருத்துவம் உள்ளடக்கியிருக்க வேண்டும்’ என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்தியா உட்பட 204 நாடுகள், பிராந்தியங்களில் உள்ள 29 வகையான புற்றுநோய்களை ஆய்வுசெய்து குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் (Global Burden of Disease) 2019-ல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தரவுகளின் பகுப்பாய்வு அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.