44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்: 3-வது நாளிலும் இந்திய அணி அசத்தல் வெற்றி | 44th International Chess Olympiad Indian team wins on Day 3

Share

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3-வது நாளிலும் இந்திய அணி ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தியது. இரு பிரிவிலும் 6 அணிகளுக்கு எதிரான இந்திய அணி வெற்றி கண்டது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று ஓபன் பிரிவில் இந்திய ஏ அணியானது கிரீஸை எதிர்த்து விளையாடியது. இந்திய ஏ அணியில் ஹரிகிருஷ்ணா பென்டலா, விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி, சசிகிரண் ஆகியோர் இடம் பெற்றனர்.

ஹரி கிருஷ்ணா, மாஸ்ட்ரோவாசிலிஸ் டிமிட்ரியோஸை வென்றார். விதித் குஜராத்தி, தியோடோரோ நிகோலாஸுடனான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

மாஸ்ட்ரோ வாசிலிஸ் அதானசியோஸை அர்ஜுன் எரிகைசி வென்றார். சசிகிரண் கிருஷ்ணன், அயோனி டிஸ் எவ்ஜெனியோஸுடன் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் இந்திய ஏ அணி 3-1 என்ற கணக்கில் கிரீஸை தோற்கடித்தது.

இந்திய பி அணி தனது 3-வது சுற்றில் சுவிட்சர்லாந்தை எதிர்த்து விளையாடியது. இந்திய அணியில் டி.குகேஷ், சரின் நிகில்,பிரக்ஞானந்தா, ரவுனக்சத்வானி இடம் பெற்றனர். இதில் வெள்ளை நிறகாய்களுடன் விளையாடிய ரவுனக் சத்வானி 38-வது காய் நகர்த்தலின் போது பென்சிகர் ஃபேபியனை சாய்த்தார்.

குகேஷ் 37வது நகர்த்தலில் ஜார்ஜியாடிஸ் நிகோவையும், சரின் நிகில் 27-வது நகர்த்தலில் போக்னர் செபாஸ்டியனையும் பிரக்ஞானந்தா 38-வது நகர்வின்போது, பெல்லடியர் யானிக்கையும் தோற்கடித்தனர். இதன் மூலம் இந்திய பி அணி 4-0 என்ற கணக்கில்சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.

இந்திய சி அணியானது, ஐஸ்லாந்துடன் மோதியது. இதில்கங்குலி சூர்யா சேகர், கிரெடார்சன் ஹஜோர்வர் ஸ்டெய்னுக்கு எதிரான ஆட்டத்தை 54வது நகர்வின் போது டிராவில் முடித்தார்.

எஸ்.பி.சேதுராமன் 36-வதுநகர்த்தலின் போது ஸ்டீபன்சன் ஹான்ஸையும், குப்தா அபிஜீத் 36-வதுநகர்த்தலின் போதுஜர்தான்சன் குட்முண்டூரையும் தோற்கடித் தனர். அபிமன்யு, கிரெடார்சன் ஹெல்டிகிக்கு எதிரான ஆட்டத்தை 75-வது நகர்வில் டிரா செய்தார். இதன் மூலம் இந்திய சி அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் ஐஸ்லாந்தை தோற்கடித்தது.

மகளிர் பிரிவில் இந்திய ஏ அணியானது இங்கிலாந்தை எதிர்கொண்டது. நிறைமாத கர்ப்பிணி யான ஹரிகா, ஹவுஸ்கா ஜோவாங் காவை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 40வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

ஆர்.வைஷாலி 65வது நகர்த்தலின்போது டோமா கதர்சினாவை தோற்கடித்தார். தானியாசச்தேவ்,யவோ லானுக்கு எதிரானஆட்டத்தை 51வது காய் நகர்த்தலில் டிரா செய்தார்.

பக்தி குல்கர்னி 59வது காய் நகர்த்தலின் போது , கலையழகன் அக்சயாவை தோற்கடித்தார். இதன் மூலம் இந்திய ஏ அணி 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்திய பி அணியானது இந்தோனேஷியாவை எதிர்த்து விளையாடியது. இதில் வந்திகா அகர்வால் 45வது காய் நகர்த்தலின் போது சுகந்தர் ஐரின் கரிஸ்மாவை தோற்கடித்தார்.

பத்மினி ரவுத், ஆலியா மதீனாவுக்கு எதிரான ஆட்டத்தை 28வது நகர்த்தலின் போது டிராவில் முடித்தார். சவுமியா சாமிநாதன், 75வது நகர்த்தில் மரிரோ ஃபரிஹாவை தோற்கடித்தார். மேரி அன் கோம்ஸ்,சித்ரா தேவி அர்தியானி அனஸ்தேசியாவுக்கு எதிரான ஆட்டத்தை 43வது நகர்த்தலின் போது டிரா செய்தார். இதன் மூலம் இந்திய பி அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியது.

இந்திய சி அணி, ஆஸ்திரி யாவை எதிர்கொண்டது. இதில் ஈஷா கர்வாடே, நெவார்க் கத்தரினாமோதிய ஆட்டம் டிரா ஆனது. சாஹிதி வர்ஷினி 46வது நகர்த்தலின் போது மேர்ஹுபர் நிகோலாவிடம் தோல்வியடைந்தார். பிரதியுஷா போதா, ஹபாலா எலிசபெத்தை வீழ்த்தினார்.

பி.வி.நந்திதா, சியாராவுக்கு எதிராக விளையாடுவதாக இருந் தது. ஆனால் சியாரா கடைசி நேரத்தில் விலகினார். இதனால் நந்திதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி 2.5-1.5 என்ற கணக் கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது.

நார்வே தோல்வி

3-வது சுற்றில் உலக சாம்பியன்மேக்னஸ் கார்ல்சன் இடம்பெற்றுள்ள நார்வே அணி, இத்தாலி அணியை எதிர்த்து விளையாடியது. இதில் இத்தாலி 3-1 என்ற கணக் கில் நார்வேயை வென்றது.

பிரக்ஞானந்தா வருத்தம்…

இந்திய வீரர் பிரக்ஞானந்தா கூறும்போது, “3-வது சுற்று ஆட்டத்தை நான் சிறப்பாக விளையாடினேன் என கூறமாட்டேன். 25-வது நகர்வின் போது ஆட்டத்தை டிராவில் முடித்துவிடலாம் என்று எண்ணினேன். நடுப்பகுதியிலும் சிறப்பாக செயல்படவில்லை. கடைசியாக எதிரணி வீரரின் கடிகார நேரம் பூஜ்ஜியத்துக்கு வந்துவிட்டது. இதன் காரணமாகவே வெற்றி பெற்றேன். வரும் ஆட்டங்களிலும் தீவிர கவனம் செலுத்துவேன்” என்றார். பயிற்சியாளர் ரமேஷ் கூறும்போது, “பிரக்ஞானந்தா தடுமாறிதான் வெற்றி கண்டார். அவரது ஆட்டத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம்.இன்னும் 8 சுற்றுகள் உள்ளன. முடிந்த ஆட்டங்களை பற்றி நினைத்துக்கொண்டே இருக்கக்கூடாது” என்றார்.

ஆட்டம் கடினமாக இருந்தது ஏன்?

ஹரி கிருஷ்ணா கூறும்போது, “முதல் 15 நகர்வுகள் வரை ஆட்டம் எளிதாக இருந்தது. அதன் பின்னர் மாஸ்ட்ரோவாசிலிஸ் டிமிட்ரியோஸ் சவால் கொடுக்க ஆரம்பித்தார். இறுதிக்கட்டத்தில் சில சிறப்பான நகர்வுகளால் வெற்றி பெற முடிந்தது. ஒவ்வொரு வெற்றியும் அணிக்கு முக்கியமானதுதான். 2-வது சுற்று ஆட்டம் எளிதான நகர்வுகளாக அமைந்தது. ஆனால் 3-வது சுற்றில் சில நகர்வுகளை தியாகம் செய்ய வேண்டியது இருந்தது.

போட்டியை வெல்லக்கூடிய நாடுகள் என கருதப்பட்ட சில முன்னணி அணிகள் தடுமாறுகின்றன என இப்போதே கூற முடியாது. ஏனெனில் 3 சுற்றுகள்தான் முடிவடைந்துள்ளன. இன்னும் இரு சுற்றுகள் சென்றால்தான் அதுகுறித்து கூறமுடியும். பொதுவாக செஸ் ஒலிம்பியாட்டில் பின்னடைவு சந்திக்கும் முன்னணி அணிகள் பின்னர் மீண்டு வரும்” என்றார்.

மகிழ்ச்சி தராத வெற்றி

இந்திய மகளிர் அணியின் சி பிரிவில் இடம் பெற்றுள்ள பி.வி.நந்திதா ஹாட்ரிக் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் ஹாங் காங்கின் டி ஜிங் ஜின் கிறிஸ்டலையும், 2-வது சுற்றில் சிங்கப்பூர் வீராங்கனை இமானுவலையும், தோற்கடித்திருந்தார் நந்நிதா.

நேற்று 3-வது சுற்றில் நந்திதாவை எதிர்த்து விளையாட இருந்த ஆஸ்திரியாவின் சியாரா கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். இதனால் நந்திதா ஹாட்ரிக் வெற்றி பெற்றார். இதுகுறித்து நந்நிதா கூறும்போது, “சியாரா எதற்காக விலகினார் என்பது எனக்கு தெரியவில்லை. இந்த ஆட்டத்துக்கு முழு அளவில் தயாராகி வந்திருந்தேன். விளையாடாமல் புள்ளியை பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. எனினும் அணியின் ரீதியாக பார்க்கும் போது இந்த புள்ளி, மற்ற வீராங்கனைகள் அழுத்தம் இல்லாமல் விளையாட உதவும். முதல் இரு ஆட்டங்களிலும் கிடைத்த வெற்றி குறித்து கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை. எனினும் முதல் இரு வெற்றிகளும் அடுத்து வரும் ஆட்டங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்று கருதுகிறேன். போட்டியின் தினத்தில் எப்படி செயல்படுகிறோம், ஆட்டத்தை எந்த வகையில் ஆழமாக கொண்டு செல்கிறோம் என்பதை பொறுத்துதான் வெற்றி அமையும். எங்கள் அணி மீது நம்பிக்கை உள்ளது. ஒவ்வாரு ஆட்டத்திலும் சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம். வரும் சுற்றுகள் கடினமாக இருக்க வாய்ப்புள்ளது” என்றார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com