சூரத்: குஜராத்தில் 42 எம்எல்ஏக்களுக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில் அவர்களில் பலர் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளதால், அவர்களை பாஜக தலைமை சஸ்பெண்ட் செய்து வருகிறது. குஜராத்தில் வரும் டிச. 1, 5ம் தேதிகளில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. ஆளும் பாஜகவில் முக்கிய நிர்வாகிகள் பலருக்கு சீட் மறுக்கப்பட்டதால், அவர்கள் சுயேட்சையாக களம் கண்டுள்ளனர்.
இவர்களின் போட்டியில் பாஜகவால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் சுயேட்சை வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்த 12 பாஜக அதிருப்தி நிர்வாகிகளை அக்கட்சி தலைமை சஸ்பெண்ட் செய்துள்ளது. ஏற்கனவே 6 பாஜக அதிருப்தி வேட்பாளர்களை அக்கட்சி தலைமை சஸ்பெண்ட் செய்தது.
இதுகுறித்து மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல் வெளியிட்ட அறிக்கையில், ‘கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 12 அதிருப்தி வேட்பாளர்கள் 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்’ என்று கூறி அவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளார். குஜராத்தில் இந்த தேர்தலில் 42 எம்எல்ஏக்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனால், அந்த எம்எல்ஏக்களின் தூண்டுதலின் பேரில் பலர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.
இவர்கள் பெறும் வாக்குகள் பாஜகவுக்கு தோல்வியை ஏற்படுத்தி விடும் என்பதால், தொடர்ந்து அடுத்தடுத்து அதிருப்தி நிர்வாகிகளை பாஜக தலைமை சஸ்பெண்ட் செய்து வருவதாக கூறப்படுகிறது.