நன்றி குங்குமம் டாக்டர்
நாற்பது வயதை மானுடத்தின் வசந்த காலம் எனலாம். பதின்ம வயதின் குழப்பங்கள் இப்போது முற்றிலும் இருக்காது. மேலும், முப்பதுகளின் பொருளாதாரப் போராட்டங்கள், தன்னுடைய அடையாளத்தைத் தக்கவைப்பதற்கான போராட்டங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து தனக்கான வழியில் ராஜநடை போட்டுக்கொண்டிருக்கும் காலம். வீட்டிலும் வேலைச் சூழலிலும் உறவினர் நண்பர்களிடையேயும் சமூகத்திலும் ஒருவரின் இடம் ஸ்தூலமாக நிறுவப்பட்டிருக்கும். குடும்பம், வீடு, வாசல், வாகன வசதிகள் என அழகாக செட்டிலாகி வாழ்க்கை எனும் ஓடம் அசையாமல் அசைந்தாடி நகரும் இனிமையான காலமும் நாற்பதுகள்தான்.
ஆனால், நாற்பதில்தான் நம் உடல் ஆரோக்கியம் ஒரு கொண்டை ஊசி வளைவில் திரும்பி முதிர்ச்சி, முதுமை என்ற வேறொரு திசையில் பயணத்தைத் தொடங்கியிருக்கும். இதனைப் பலரும் உணர்வதேயில்லை. மனம் சொல்லும் வேகத்துக்கு உடல் செல்லவியலாத ஒரு விலகலை நாற்பதுகளிலேயே உணரத் தொடங்குகிறோம். நவீன விஞ்ஞானம் நாற்பத்திரண்டு அல்லது நாற்பத்து மூன்று வயது வரை ஒரு மனித உடல் அவர் சொல்வதைக் கேட்டு நடக்கும். பிறகு, அவரது உடல் சொல்வதைத்தான் கேட்டு நடக்க வேண்டும் என்று சொல்கிறது. ஒரு காலத்தில் மனிதனின் சராசரி ஆயுள் காலமே நாற்பது வயதுதான் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். நவீன மருத்துவ வசதிகளின் பெருக்கம் நம்மை மேலும் சில தசமங்கள் நோயற்று வாழச் செய்திருக்கிறது என்பதுதான் எதார்த்தம்.
எனவே, ஆணோ பெண்ணோ யாராய் இருந்தாலும் நாற்பதைக் கடந்ததும் உடல் சொல்லும் பதிலைக் கவனிக்க வேண்டியது அவசியம். 40+ வயதினர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன…
உணவு
இதுவரை கன்னாபின்னாவென சாப்பிட்டிருப்போம். இனி அதெல்லாம் ஒத்து வராது உணவு முறையை ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டியது அவசியம். சமச்சீரான சத்துக்களைக் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து, புரோட்டின் எனும் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள், நுண்ணூட்டச்சத்துகள், நார்ச்சத்து என ஒவ்வொருவகையான சத்துக்கும் ஓர் உடலியல் செயல்பாடு உண்டு. எனவே, இந்த ஒவ்வொன்றும் அதற்கான சரியான விகிதத்தில் இருக்கிறதா என்பதைத் தேடிப் பிடித்து உண்ண வேண்டும்.
அசைவத்தையும் அரிசி சாதத்தையும் அதிகமாகச் சாப்பிடும் வழக்கம் நம் சமூகத்தில் தற்போது உள்ளது. இதனை நாற்பது வயதுக்கு மேல் ஒழுங்குபடுத்த வேண்டும். அரிசி சாதத்துக்குப் பதிலாக கோதுமை, பார்லி போன்ற மாற்று கார்ப்போ நிறைந்த உணவுகளையும் கம்பு, கேழ்வரகு, பனிவரகு, குதிரைவாலி, சாமை, சோளம், தினை போன்ற சிறுதானியங்களை தினசரி உணவில் ஏதேனும் ஒருவேளையாவது சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அன்றாட உணவில் கீரைகள், காய்கறிகள் இருப்பது மிகவும் நல்லது. நார்ச்சத்து உடலுக்கு மிகவும் முக்கியம். இதனால் செரிமானம் மேம்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் நீங்கி உடல் நச்சுநீக்கம் அடைகிறது.பழங்கள், நட்ஸ் போன்றவற்றை தினசரி எடுத்துக்கொள்ளலாம். மிட் மார்னிங் நேரத்திலும் மாலையிலும் பஜ்ஜி, போண்டா, மிக்சர் போன்ற நொறுக்குத்தீனிகளை உண்பதை விடுத்துவிட்டு நட்ஸ், சாலட், முளைகட்டிய தானியங்கள், சுண்டல் போன்ற ஹெல்த்தி நொறுக்ஸ்களுக்கு மாறுவது நல்லது.
காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்க வேண்டாம். மதிய உணவில் சோற்றின் அளவுக்கோ அதைவிட அதிகமாகவோ காய்கறிகள், கீரைகள் இருக்க வேண்டியது அவசியம். இரவு உணவாக மிதமான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி நாற்பது வயதினக்கு மிக அவசியமான ஒன்று. அதற்காக ஜிம்முக்குப் போய் மாங்கு மாங்கென பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. குறைந்தபட்சம் நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும். தினசரி பத்தாயில் தப்படிகள் நடக்க வேண்டும். மூன்று கிலோ மீட்டர் தூரம் என்று கணக்கில் கொள்க. நடைப்பயிற்சி போலவே ஜாகிங், ஓட்டம், நீச்சல், ஸ்கிப்பிங், ட்ரெட் மில் போன்ற கார்டியோ பயிற்சிகளும் மிகவும் சிறந்தவை. ஏதேனும் ஒரு கார்டியோ பயிற்சியை தினசரி ஒரு மணி நேரமாவது மேற்கொள்ள வேண்டியது மிகவும் நல்லது. ஜிம்முக்குப் போவாது, யோகா, ஜும்பா பயிற்சிகள் செய்வதும் மிகவும் நல்லது. பேட்மிண்டன், கிரிக்கெட், டென்னிஸ் என ஏதேனும் ஒரு விளையாட்டுகளில் ஈடுபடுத்திக்கொள்ளலாம். இதனால் பொழுதும்போகும் உடலும் ஃபிட்டாக இருக்கும்.
உறக்கம்
தினசரி எட்டு மணி நேர உறக்கம் இன்றியமையாதது. எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் எட்டு மணி நேர உறக்கம் என்பதை விட்டுத் தராதீர்கள். ஏனேனில் உறக்கமின்மைதான் உயர் ரத்த அழுத்த, சர்க்கரை நோய் போன்ற பலவிதமான வாழ்க்கைமுறை நோய்களை அழைத்துவருபவை. மேலும், இதய நோய்கள் முதல் பக்கவாதம் வரை மிகப் பெரிய நோய்களுக்கும் பட்டுக்கம்பளம் விரிப்பவை. எனவே, உறக்க விஷயத்தில் எதற்காகவும் விட்டுக்கொடுக்காதீர்கள்.
மாஸ்டர் ஹெல்த் செக்கப்
நாற்பது வயதானதும் வருடத்துக்கு ஒருமுறையேனும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்ய மறக்காதீர்கள். ரத்தப் பரிசோதனை மூலம் சர்க்கரை மற்றும் கொழுப்பு விகிதம் ஆகியவற்றை அறியலாம், ரத்த அழுத்தப் பரிசோதனை, ட்ரெட் மில் இசிஜி ஆகிய பரிசோதனைகள் மூலம் மூளை, இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், ரத்த ஓட்டம் ஆகியவற்றின் நிலையை அறியலாம். இன்று அரசு மருத்துவமனைகளிலேயே மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யப்படுகிறது. எனவே, தயங்காமல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
மூட் ஸ்விங்
அடிக்கடி எரிச்சலும், திடீரென்று நார்மலாகவும் மாறி மாறித் தோன்றி, உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படுவது மூட் ஸ்விங். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சுரப்பிலும் ஆண்களுக்கு ஆண்ட்ரோஜென் சுரப்பிலும் ஏற்படும் மாற்றங்களே இவை. சோகம், கவனமின்மை, பயம், அதீத இயக்கம், சோர்வு, பதற்றம், டென்ஷன், மகிழ்ச்சி போன்ற அனைத்து உணர்வுகளும் மாறி மாறி வரலாம். மனம் தொடர்பான பிரச்னைகள் இருப்பதால், தூக்கமின்மைப் பிரச்னையும் சேர்ந்தே வரும். மனதை அமைதிப்படுத்தும் கலைகளில் ஈடுபடலாம். சீரான உணவுப் பழக்கத்தையும் வாழ்வியல் முறைகளையும் கடைப்பிடிக்கலாம். அவசியம் புகை, மதுப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம்
இன்று 40+ வயதினருக்கு சர்க்கரை நோயும் உயர் ரத்த அழுத்தமும் இருப்பது ஒரு புதிய எதார்த்தம் என்ற நிலையை எட்டிவிட்டது. எனவே, இந்தப் பிரச்சனைகள் இருந்தால் பயப்பட வேண்டாம். முறையான சிகிச்சைகளும் ஆரோக்கியமான வாழ்வியல் முறையும் இருந்தால் இந்த நோய்களை வைத்துக்கொண்டு நாற்பது வருடங்களாக நல்லவிதமாக வாழ்பவர்கள் எல்லாம் நிறைய பேர் இருக்கிறார்கள். மருத்துவர் பரிந்துரைப்படி மருந்து, மாத்திரைகள், உணவுகள், உடற்பயிற்சி என ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தால் அனைத்தும் நலமே.
தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்