ஸ்கோச் விருது
புதுதில்லியில் செயல்பட்டு வரும் ஸ்கோச் குரூப் நிறுவனமானது (SKOCH GROUP) மக்களின் மேம்பாட்டிற்கு பயனளிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான அரசுத்துறை நிறுவனங்களுக்கான ஸ்கோச் தங்க விருதினை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இணையதள சேவையான ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மை திட்டத்திற்கு 29.03.2025 அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கியது.
திருக்கோயில்களில் அன்னதானம்
திருவரங்கம், பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம், மதுரை, இராமேசுவரம், திருவண்ணாமலை, பெரியபாளையம், மேல்மலையனூர், ஆனைமலை, கள்ளழகர், மருதமலை ஆகிய 13 திருக்கோயில்களில் இறையன்பர்களுக்கு நாள்முழுவதும் அன்னதானமும், 764 திருக்கோயில்களில் ஒரு வேளை அன்னதானமும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சுமார் 3.5 கோடி இறையன்பர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
உணவுத்தரச்சான்று
ஒன்றிய அரசால் திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் தரச்சான்றிதழ் 523 திருக்கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தரச்சான்றிதழ் பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மிகப் பயணம்
மானசரோவர் முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் இறையன்பர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் தற்போது உயர்த்தி வழங்கப்படுகிறது. அதேபோல, 60 முதல் 70 வயது வரையுள்ள மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் 2,000 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கும், 920 பக்தர்கள் இராமேசுரம் காசி ஆன்மிக பயணத்திற்கும் அரசு செலவில் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு 1003 பக்தர்களும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கு 1,008 பக்தர்களும் ஆன்மிக பயணமாக அழைத்து செல்லப்பட்டனர்.
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு
தமிழ் கடவுளாம் முருகப்பெருமானின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டினை முதலமைச்சர் தொடங்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார். இரண்டாம் நாள் துணை முதலமைச்சர் வாழ்த்துரை வழங்கினார்.
இம்மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் முருக பக்தர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் சுமார் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 1,003 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மாநாட்டு வளாகத்தில் அமைக்கப் பெற்றிருந்த கண்காட்சி அரங்கில் மெய்நிகர் காட்சிகள், முப்பரிமாணப் பாடலரங்கம், சிறப்புப் புகைப்படக் கண்காட்சி போன்றவற்றை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பார்வையிட்டனர்.