இரண்டு முக்கிய டிஃபண்டர்களை இழந்திருந்த ரியல் மாட்ரிட், ஒரு புதிய டிஃபண்டரை மட்டுமே ஒப்பந்தம் செய்தது. பேயர்ன் மூனிச் அணியிலிருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு வந்தார் ஆஸ்திரிய கேப்டன் டேவிட் அலாபா. போதாதற்கு டேனி கர்வாகல் வேறு அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டார். விளையாடிய போட்டிகளிலும் முன்பைப் போல் ஆட முடியவில்லை. இருந்தாலும், கார்லோ ஆன்சலோடி கைவசம் இருந்த வீரர்களை வைத்தே சமாளித்தார். லூகாஸ் வாஸ்கிஸ் வழக்கம்போல் டிஃபன்ஸின் வலது பக்கம் தேவையான நேரங்களில் சிறப்பாக செயல்பட்டார். எந்த இடத்தில் ஓட்டை விழுந்தாலும் அதை அடைக்கத் தயாராக இருந்தார் நாசோ. கிட்டத்தட்ட வெறும் 7 டிஃபண்டர்களை வைத்துக்கொண்டே இந்த சீசனைக் கடந்தது ரியல் மாட்ரிட்.
சரி நடுகளமாவது முன்பைப் போல் இருந்ததா என்றால் அதுவும் இல்லை. மார்டின் ஓடகார்டை ஆர்செனலுக்கு விற்றுவிட்டு எடுவார்டோ கமவிங்காவை வாங்கியது ரியல் மாட்ரிட். அந்த இளம் வீரர் மிகச் சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால், முன்னணி வீரர்கள் எதிர்பார்த்த செயல்பாட்டைக் கொடுக்கவில்லை. டோனி குரூஸ், கசமிரோ போன்றவர்களால் முன்பைப் போல் சிறப்பாக ஆட முடியவில்லை. பல போட்டிகளை மோட்ரிச் காப்பாற்றினாலும் அவரால் சீராக ஆட முடியவில்லை. ஃபெடரிகோ வெல்வர்டே மட்டும் தான் பெரும் நம்பிக்கையாகத் திகழ்ந்தார்.
அட்டாக்கிலும் அதே கதைதான். பேல், ஹசார்ட் இருவரும் இருந்தார்களே இல்லையே என்று தெரியாததைப் போலத்தான் இந்த சீசனும் இருந்தனர். ஆன்சலோட்டி திரும்ப வந்திருந்தாலும், இஸ்கோவால் கம்பேக் கொடுக்க முடியவில்லை. அசான்சியோ ஒரு போட்டியில் சிறப்பாக செயல்பட்டால், அடுத்த போட்டியில் சொதப்பினார். மரியானோ, ஜோவிச் இருவரைப் பற்றியும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இளம் வீரர்கள் ராட்ரிகோ, வினிசியஸ் ஜூனியர் இருவரும் தான் அட்டாக்கில் நம்பிக்கை கொடுத்தனர்.