குஜராத்தில் ஷாம்ஜிபாய் எனும் விவசாயி பாரத ஸ்டேட் பேங்க் வங்கியில் ரூ.4.55 லட்சம் பயிர்க்கடன் பெற்றிருந்தார். ஷாம்ஜிபாய் கடந்த 2020-ல் அகமதாபாத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள தன்னுடைய நிலத்தை விற்க முடிவுசெய்தபோது, ராகேஷ், மனோஜ் வர்மா ஆகிய இருவர் ஸ்டேட் பேங்க்கில் ஷாம்ஜிபாயின் கடன் தொகையைச் செலுத்த முன்வந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு, ஷாம்ஜிபாயின் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றுவதற்காக ராகேஷ், மனோஜ் வர்மா ஆகியோர் வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்திருக்கின்றனர்.
ஆனால், ஷாம்ஜிபாயின் கடன்தொகை நிலுவையில் இருப்பதாகக் கூறி, அவர்களின் விண்ணப்பத்தை வருவாய்த் துறை நிராகரித்தது. அதைத்தொடர்ந்து, ஷாம்ஜிபாயின் பயிர்க்கடனிலிருந்து நிலுவைத் தொகையில்லா சான்றிதழ் வேண்டி ராகேஷ், மனோஜ் வர்மா இருவரும் வங்கியில் முறையிட்டிருக்கின்றனர். இருப்பினும் வங்கி தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வராததால், 2020-ல் குஜராத் உயர் நீதிமன்றத்தில் இருவரும் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை குஜராத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஷாம்ஜிபாயின் கணக்கில் இன்னும் 31 பைசா நிலுவையில் இருப்பதால், நிலுவைத்தொகையில்லா சான்றிதழ் வழங்கவில்லை என ஸ்டேட் பேங்க் தரப்பு வக்கீல் அறிக்கை சமர்ப்பித்தார். வங்கி தரப்பின் இத்தகைய அறிக்கையைப் படித்த நீதிபதி பார்கவ் கரியா, “50 பைசாவுக்கும் குறைவான எதையும் நிலுவைத் தொகையாகக் கணக்கிடக்கூடாது என்று வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் உள்ளது. ஆனால் இத்தகைய செயலானது வங்கி மேலாளரின் துன்புறுத்தலே தவிர வேறொன்றுமில்லை. 31 பைசா நிலுவைத் தொகைக்கு… நிலுவைத் தொகையில்லா சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கூறுகின்றனவா என்ன? தேசியமயமாக்கப்பட்ட வங்கியான பாரத ஸ்டேட் பேங்க் மக்களை இன்னும் தொடர்ந்து துன்புறுத்துகிறது” என வங்கியைக் கடுமையாகச் சாடினார்.
மேலும், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கின் அறிக்கையை நீதிமன்றத்தில் பதிவு செய்யுமாறு வங்கிக்கு உத்தரவிட்டு வழக்கை மே 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி பார்கவ் கரியா.