30 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து அமெரிக்காவில் வரலாறு படைத்தார் இந்திய தடகள வீரர்

Share

அமெரிக்காவில் இந்திய தடகள வீரர் அவினாஷ் சேபிள் 30 ஆண்டு கால தேசியச் சாதனையை முறியடித்து வரலாறு படைத்து உள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் 1500மீ தங்கம் வென்ற நார்வே தடகள வீரர் ஜாகோப் இங்க்ப்ரிக்ட்சன் 13:02.03 வினாடிகளில் இலக்கை எட்டி இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்றார்.

அமெரிக்காவின் சான் ஜுவான் கேபிஸ்டிரேனோ நகரில் நடந்த தடகள போட்டியில் இந்திய தடகள வீரர் அவினாஷ் சேபிள் கலந்து கொண்டார். அவர் 5 ஆயிரம் மீட்டர் பிரிவில் 13:25.65 நிமிடங்களில் பந்தய தொலைவை கடந்து புதிய சாதனை படைத்து உள்ளார்.

கடந்த 1992ம் ஆண்டில் பகதூர் பிரசாத் என்ற இந்தியர் 13:29.70 நிமிடங்களில் இலக்கை அடைந்து இருந்ததே சாதனையாக இருந்தது. அதற்கு பின்னர் இந்தியர் யாரும் இதனை முறியடிக்கவில்லை. இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு சேபிள் இந்த சாதனையை முறியடித்து வரலாறு படைத்து இருக்கிறார்.

எனினும், இந்த ஓட்ட போட்டியில் சேபிள், 12வது இடம் மட்டுமே பிடித்து உள்ளார். அடுத்து வர இருக்கிற சர்வதேச போட்டிகளுக்காக அமெரிக்காவிலேயே பயிற்சி பெற்று வருகிறார்.

இதற்கு முன் கேரளாவின் கோழிக்கோடு நகரில் நடந்த மூத்த தடகள பெடரேசன் கோப்பை சாம்பியன்ஷிப்புக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்ட போட்டியில் அவர் 13:29.70 நிமிடங்களில் இலக்கை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3000மீ ஸ்டீப்பிள் சேஸ் தடகளப் போட்டியில் தேசியச் சாதனையை தன் வசம் வைத்திருக்கிறார் சேபிள். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கு பெற்றார். சேபிள் தனது சொந்த 3000மீ ஸ்டீபிள்சேஸ் தேசிய சாதனையை பலமுறை முறியடித்திருக்கிறார். மார்ச் மாதம் திருவனந்தபுரத்தில் நடந்த இந்தியன் கிராண்ட் ப்ரீ- 2 இன் போது அவர் ஏழாவது முறையாக 8:16.21 வினாடிகளில் சாதனையை முறியடித்தார்.

சேபிள் டோக்கியோ ஒலிம்பிக்கின் போது 8:18.12 வினாடிகளில் அப்போதைய தேசிய சாதனையையும் படைத்திருந்தார். அவர் ஏற்கனவே ஜூலை 15 முதல் 24 வரை அமெரிக்காவின் யூஜினில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com