ஹைதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 297 ரன்களை சேர்த்துள்ளது. இதில் 8 சிக்சர்களை விளாசி 111 ரன்களை சேர்த்து அதிரடி காட்டினார் சஞ்சு சாம்சன்.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் குவாலியரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புதுடெல்லியில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனர்களாக சஞ்சு சாம்சன் – அபிஷேக் சர்மா களமிறங்கினர். 2வது ஓவரில் தொடர்ந்து 4 போர்கள் அடித்து வெளுத்து வாங்கினார் சஞ்சு சாம்சன். மறுபுறம் இருந்த அபிஷேக் சர்மா 4 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் சிக்சர்களாக பறக்கவிட்டு சிறப்பித்தார். இதனால் இந்திய அணி பவர் ப்ளே முடிவில் 1 விக்கெட்டை இழந்து 82 ரன்களைச் சேர்த்தது. இதுதான் டி20 போட்டிகளில் பவர் ப்ளேவில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர்.
இருவரும் வங்கதேச அணியின் பந்துகளை அடித்து துவம்சம் செய்ய 22 பந்துகளில் சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்து அசத்தினார். இது சஞ்சு சாம்சனின் அதிவேக அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது. 10-வது ஓவரில் மட்டும் 5 சிக்சர்களை விளாசி தள்ளினர் சஞ்சு சாம்சன். ரிஷாத் ஹூசைன் வீசிய அந்த ஓவரில் மட்டும் 30 ரன்களைச் சேர்த்தார் சஞ்சு. 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களைச் சேர்த்தது. மறுபுறம் சூர்ய குமார் யாதவ் 23 பந்துகளில் அரைசதம் கடந்தார். சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். முஸ்தஃபிசுர் ரஹ்மான் வீசிய 14வது ஓவரில் 111 ரன்களுக்கு விக்கெட்டானார் சஞ்சு சாம்சன். 47 பந்துகளில் 8 சிக்சர்களை விளாசிய சஞ்சு சாம்சனுக்கு இது சிறப்பான இன்னிங்ஸ்.
அவரைத் தொடர்ந்து 5 சிக்சர்கள் விளாசிய சூர்யகுமார் யாதவ் 75 ரன்களில் கிளம்பினார். 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 252 ரன்களைச் சேர்த்தது. 4 சிக்சர்களை விளாசிய ரியான் ப்ராக் 34 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 18 பந்துகளில் 47 ரன்களைச் சேர்த்து சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா அரைசதமின்றி அவுட்டாகி களத்திலிருந்து கிளம்பினார்.அவரைத் தொடர்ந்து நிதிஷ்குமார் ரெட்டி டக் அவுட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய 297 ரன்களை குவித்தது. ரிங்கு சிங் 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வங்கதேச அணி தரப்பில் தன்ஜிப் ஹசன் சகீப் 3 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹமது, முஸ்தஃபிசுர் ரஹ்மான், மஹ்மதுல்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.