கிரிக்கெட் வரலாற்றில் இந்த 21-ம் நூற்றாண்டில் தென்னாப்பிரிக்காவில் எந்தவொரு அணியும் செய்யாத சாதனையைப் பாகிஸ்தான் அணி நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. இதில், முதலில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசன் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றியது. மூன்றாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில், அதே ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை முதல் போட்டியில் வீழ்த்தி பதிலடி தந்தது. பின்னர், பாகிஸ்தான் அணி அதே வேகத்துடன், இரண்டாவது போட்டியிலும் தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி தந்து ஒருநாள் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.
இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் (80), பாபர் அசாம் (73), கம்ரான் குலாம் (63) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 49.5 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் குவித்தது. அதையடுத்து, 330 ரன்கள் என்ற இலக்கை நோக்கிக் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், ஹென்ரிச் கிளாசனுக்கு (97) யாரும் பக்கபலமாக ஆடாததால், 43.1 ஓவரில் 248 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது தென்னாப்பிரிக்கா. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷகீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளும், நசீம் ஷா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம், 21-ம் நூற்றாண்டில் தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி, மூன்று முறை ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய முதல் அணி என்ற சாதனையைப் பாகிஸ்தான் படைத்திருக்கிறது. இதற்கு முன்னர் 2013, 2021-ல் தென்னாப்பிரிக்காவில் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றால், தென்னாப்பிரிக்காவை ஒருநாள் தொடரில் அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்த முதல் அணி என்ற சாதனையையும் வரலாற்றில் பதிவுசெய்யும்.
ஒருநாள் தொடர் முடிந்ததும், ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்ல தென்னாப்பிரிக்க அணிக்கு இது முக்கியமான தொடர். இதில், தென்னாப்பிரிக்கா இரண்டு டெஸ்டில் ஒன்றில் வெற்றிபெற்றாலே இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…