எதிர்கால இந்திய அணிக்கான திட்டமிடல்
உலகக்கோப்பையை வென்றது தோனியின் மாபெரும் சாதனையாக இருந்தாலும் அதற்கு பின் அணிக்குள் தோனி செய்த பணிகள்தான் இன்னும் பாராட்டப்பட வேண்டியவை. அணியின் சீனியர்கள் அத்தனை பேரையும் மெது மெதுவாக ஓரங்கட்டி விட்டு அணிக்குள் இளம் வீரர்களைக் கொண்டு வந்தார். அடுத்தத் தலைமுறைக்கான அணியை கட்டமைக்கத் தொடங்கினார். அந்தக் காலக்கட்டத்தில் தோனியின் மீது கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது. ஆனால், அந்த 2011 உலகக்கோப்பைக்குப் பிறகு தோனி அணிக்குள் செய்த மாற்றங்கள்தான் இன்றைக்கும் இந்திய அணியை தொய்வில்லாமல் ஓட வைத்துக் கொண்டிருக்கிறது. தான் கட்டமைத்த இளம் அணியை வைத்தே 2013 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றார்.
எவ்வளவு உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் அவர்களும் தன்னுடைய நிலை கீழே இறங்கும் சமயத்தில் சரியாக கணித்து விடைபெற வேண்டும். அதையும் தோனி செய்தார். தனக்குப் பின் கோலி மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறார் என்பதை உணர்ந்தவுடன் கேப்டன்சியை அவர் கைக்கு மாற்றிவிட்டார். அதேமாதிரி, 2019 உலகக்கோப்பைக்கு பின் இந்திய அணி தன்னைக் கடந்து யோசிக்க ஆரம்பிக்கும் என்பதை யூகித்து தானாகவே அணியிலிருந்து வெளியேறி ஓய்வையும் அறிவித்தார்.
‘நான் மரபார்ந்த கிரிக்கெட்டை ஆடவில்லை. நான் ஆடும் விதத்தைப் பார்த்து எல்லாராலும் ஆட முடியும். அதனால்தான் மக்கள் என்னை அவர்களில் ஒருவராக தொடர்புப்படுத்திக் கொள்கிறார்கள்.’ என தோனி ஒரு முறை பேசியிருந்தார். கிரிக்கெட் ஆடும் விதத்தில் மட்டுமில்லை. குறிப்பிட்ட சாரார் மட்டுமே வெல்ல முடியுமென்றிருந்த ஒரு துறையில் தடைகளையெல்லாம் தாண்டி ஒரு சாமானியனும் வெல்ல முடியும் என்கிற நம்பிக்கையை கொடுத்ததற்காகவும் தான், தோனியை மக்கள் தங்களில் ஒருவனாகப் பார்க்கிறார்கள்.
தோனி ஆட்டம் மற்றும் கேப்டன்சி குறித்த உங்களின் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடுங்கள்!