கோவை: கோவையில் நிர்வாகிகளுடன் பாஜ தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆலோசனை நடத்தினார். ஆபாச ஆடியோ லீக், அண்ணாமலை ரபேல் வாட்ச் விவகாரம், பாஜவினர் என்ஐஏ அதிகாரி போல் நடித்து ரூ.2 கோடி கொள்ளையடித்தது என தமிழக பாஜவும், மாநில தலைவர் அண்ணாமலையும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளனர். இதனால் பாஜ மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு, சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது, பாஜ தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கவும், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கவும் 2 நாள் பயணமாக பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்தார்.
பின்னர் கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் கோவை, நீலகிரி மாவட்ட பாஜ நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பாஜவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் விவரங்கள், தேர்தல் பணிகளை தொடங்குவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் கார் மூலம் மேட்டுப்பாளையத்திற்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, காரமடை அருகே தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் நடந்த வாஜ்பாய் பிறந்த நாள் நல்லாட்சி தின பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசுகையில், தமிழகம் பழமையான மொழி, கலாசாரம் கொண்ட நிலம்.
இப்பகுதி இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாற்றத்தை இக்கூட்டம் ஏற்படுத்தும். பிரதமர் மோடி தலைமையில் இந்தியா முன்னேறி வருகிறது. நமது நாடு, பாதுகாப்பான தலைவர் கைகளில் உள்ளது.
ராகுல்காந்தி, பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் நாட்டை பிளவுபடுத்த நடைபயணம் மேற்கொண்டுள்ளார். நாம் ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறோம் என்றார். மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர், அன்னூர் அடுத்த நல்லிசெட்டிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் கட்சி தொண்டர் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டார். தொடர்ந்து கோவை ஈஷா யோகா மையத்துக்கு சென்று தங்கினார். இன்று காலை 10 மணிக்கு விமானத்தில் ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் செல்கிறார்.
* நீலகிரியில் எல்.முருகன் போட்டியா?
பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், ‘தேசிய தலைவர் நட்டா தனது தேர்தல் பயணத்தை தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்காக முதன்முதலாக கோவையில் தொடங்கி உள்ளார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் கவனம் செலுத்தி வருகிறார். இப்பகுதி மக்கள் பாஜவை சார்ந்து இருக்கும் மக்கள். தேசியம் அதிகம் இருக்கும் பகுதி. அதனால், தேசிய தலைவரின் வருகையின் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜ மிகுந்த எழுச்சி பெறும்’ என்று தெரிவித்தார். அமைச்சர் எல்.முருகன், தற்போது மாநிலங்களவை எம்பியாக உள்ளார். இதனால், வரும் தேர்தலில் மக்களவை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.