2கே கிட்ஸும் ஈஸியாக செய்யலாம்; தீபாவளி லேகியம் எளிமையான செய்முறை! |#DeepavaliRecipe

Share

தீபாவளி நெருங்கிவிட்டதால் கடைவீதிகள் எல்லாம் களைகட்டி இருந்தன. மக்கள் கூட்டம் ஜவுளிகளை வாங்க, கடைகளை மொய்த்துக் கொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் சிக்கி அவதிப்படாமல் இருக்க, முன்பே பர்சேஸ் செய்துவிட்ட திருப்தியில் இருந்த சுபிக்‌ஷா, பிரதோஷம் என்பதால் சிவன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்ப தயாராக இருந்தார்.

கோயிலில், தற்செயலாக சுசீலா ஆன்ட்டியை பார்த்த சுபிக்‌ஷா, “என்ன ஆன்ட்டி! தீபாவளி பர்சேஸ் ஆயிடுச்சா?” என்று கேட்டார். “இல்லம்மா! நாளைக்குத்தான் டி. நகர் போகணும். நீ தீபாவளி ஜவுளி எடுத்துட்டியா?” என்று பதிலுக்கு சுசீலா கேட்டார். “கடைசி வாரத்தில் கூட்டம் இருக்கும்ல. அதனால போன வாரமே ஜவுளி எடுத்தாச்சு ஆன்ட்டி. எனக்குன்னு சில டிரெஸ் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிட்டேன்” என்றார் சுபிக்‌ஷா.

“ஓ.. அப்படியா? உங்க வீட்ல தீபாவளி ஸ்வீட்ஸ், பலகாரங்கள் செய்ய ஆரம்பிச்சாச்சா? ” என்று சுசீலா கேட்க, “அதெல்லாம் இனிமேதான் ஆன்ட்டி ஆரம்பிக்கணும்” என்ற சுபிக்‌ஷா, “ஸ்வீட்ஸ் செய்யறதில நீங்கதான் எக்ஸ்பர்ட் ஆச்சே. உங்க கைப்பதம், அனுபவம் ஊருக்கே தெரியுமே” என்று புகழ்ந்து தள்ள, சுசீலா ஆன்ட்டி முகத்தில் பெருமிதம் பொங்கியது.

தீபாவளி ஸ்வீட்ஸ்

“ஸ்வீட்ஸ் செய்யற மாதிரியே, மறக்காம தீபாவளி லேகியமும் செய்யணும் சுபிக்‌ஷா. நாம சாப்பிடற இனிப்புகள், பலகாரங்கள் வயிற்றில செரிக்கணுமில்ல?” என்ற சுசீலாவின் பேச்சில் அக்கறை வெளிப்பட, “நாங்கெல்லாம் 2K கிட்ஸ் ஆன்ட்டி. தீபாவளி லேகியம் பத்தி எதுவும் தெரியாது. அதை எப்படிச் செய்யணும்னு நீங்களே சொன்னா, இந்தமுறை நான் ட்ரை பண்றேன்” என்று ஆர்வமுடன் கேட்டார் சுபிக்‌ஷா.

“தீபாவளி லேகியம் செய்யறது ரொம்ப ஈஸி சுபிக்‌ஷா! இதை தீபாவளி மருந்துன்னுகூட சொல்வாங்க. பண்டிகை நாள்ல கணக்கு வழக்கில்லாம எண்ணெய்ப் பலகாரங்கள், ஸ்வீட்ஸ், தடபுடல் சாப்பாடுன்னு வயித்துக்குள்ள நாம தள்றோம். அதனால அஜீரணக்கோளாறு, வயிறு மந்தம்னு அவஸ்தைகள் இருக்கும். இந்த பிரசனை வரக்கூடாதுன்னுதான் தீபாவளி அன்னிக்கு காலையிலேயே தீபாவளி லேகியத்தை மொதல்ல சாப்பிட்டணும்” என்றார்.

“ஓ அப்படியா? தீபாவளி லேகியம் தயாரிக்க என்னென்ன வேணும்? சொன்னீங்கன்னா, என்னோட மொபைல்ல நோட் பண்ணிக்கிறேன்” என்றவர் தனது மொபைல்போனை எடுத்தார்.

“தீபாவளி லேகியம் செய்ய என்ன வேணும்னு சொல்றேன், குறிச்சுக்கம்மா…

சித்தரத்தை – 10 கிராம்

சுக்கு – 1 துண்டு

ஏலக்காய் – 2

நெய் – ஒரு கப்

நல்லெண்ணெய் – ஒரு கப்

வெல்லம் – 100

ஜீரகம் – 2 1/2 டேபிள் ஸ்பூன்

மிளகு – 2 டேபிள் ஸ்பூன்

தனியா (மல்லி) – 2 1/2 டேபிள் ஸ்பூன்

ஓமம் – 25 கிராம்

கிராம்பு – 2

கண்டந்திப்பிலி – ஒரு டேபிள்ஸ்பூன்

அரிசித்திப்பிலி – ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துக்கணும்…”

– என்று ஒரு பட்டியலையே சுசீலா ஆன்ட்டி சொல்லி முடிக்க, அதை நோட்பேடில் குறித்துக் கொண்டார் சுபிக்‌ஷா.

தீபாவளி லேகியம்

“சரி ஆன்ட்டி… இப்ப எப்படிச் செய்யணும்? செய்முறையும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க…” என்று ஆர்வமாகக் கேட்க, சுசீலா தொடர்ந்தார்…

“இதுல நெய், எண்ணெய், நெய் தவிர மத்ததை நல்லா காய வைக்கணும். பிறகு அதையெல்லாம் நைஸா பொடியாக்கி வெச்சுக்கணும். இதில் தண்ணிய ஊத்தி 15 நிமிடம் ஊற வைக்கணும். அதேபோல வெல்லத்தை நசுக்கிப் போட்டு, ஒரு கப் நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி வெச்சு, வடிகட்டணும். இல்லாட்டி அதில் கல், மண்ணு இருக்கும் சுபிக்‌ஷா” என்றவர் தொடர்ந்தார்…

“வடிகட்டினத்துக்கு அப்புறம் அதைத் திரும்பவும் அடுப்பில வெச்சு வெல்லம் பாகாகும் வரை கொதிக்க வைக்கணும். அப்புறம், நல்லெண்ணெய் ஊத்தணும். ஏற்கெனவே நாம பொடிச்சு வெச்சிருக்கிற பொடிகளை அதுல தூவணும். நடுவுல கொஞ்சம் கொஞ்சமா நெய் விட்டுக் கிளறிட்டே இருக்கணும்…”

“சூப்பர் ஆன்ட்டி ! எவ்ளோ நேரம் இப்படிக் கிளறணும்?” என்று சுபிக்‌ஷா கேட்க,“கையில் எடுத்து உருட்டற பதம் வர்ற வரைக்கும் கிளறணும் சுபி! அதுக்கப்புறம் இறக்கி வெச்சுட்டு, அதிலே தேன் விட்டு, திரும்பவும் எல்லாத்தையும் நல்லா கிளறி இறக்கி வெச்சா, தீபாவளி லேகியம் ரெடி சுபிக்‌ஷா!” என்றார் சுசீலா.

மேலும் தொடர்ந்த சுசீலா ஆன்ட்டி, “இது நம்ம தாத்தா, பாட்டிங்க காலத்துக்கு முன்னாடில இருந்தே காலங்காலமா இருக்கற பாரம்பர்யமான ஒரு மருந்துதான். தீபாவளி அன்னிக்கு காலையில குளிச்சிட்டு வந்ததும், பலகாரங்களை சாப்பிடறதுக்கு முன்னாடியே, தீபாவளி லேகியத்தை நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து வாயில போட்டுக்கணும்” என்றார் சுசீலா.

சமையல்

“சூப்பர் ஆன்ட்டி… நல்லா சொன்னீங்க! எதிர்ப்புசக்தி தர்ற இயற்கையான ஒரு மருந்தா தீபாவளி லேகியம் இருக்குன்னுஉங்க மூலமா தெரிஞ்சுகிட்டேன். வர்ற தீபாவளியை இந்த லேகியத்துல இருந்தே ஆரம்பிக்கிறேன் ஆன்ட்டி. உங்களுக்கு அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துகள்!” என்று சொல்லி விடைபெற்ற சுபிக்‌ஷாவுக்கு, சுசீலாவும் பதிலுக்கு “ஹேப்பி தீபாவளிம்மா!” என்று சொல்லிப் புறப்பட்டார்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com