அண்மைய்ல், மதுரையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்தில் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில், “எனக்கு 69 வயதாகிறது. இன்றும் 25 வயது இளைஞனாகத்தான் இருக்கிறேன். இன்னும் 150 வயது வரை வாழ்வேன். இத்தனை நாள்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான வித்தைகளைக் கற்று வைத்துள்ளேன். அந்த வித்தையை 2026-ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அரியணையில் ஏறும்போது சொல்வேன்” என்று பேசியுள்ளார். நடிகர் சரத்குமாரின் இந்தக் கருத்து சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஒரு மனிதன் தன் வாழ்நாளை எத்தனை வருடங்கள் வரை ஆரோக்கியமாகக் கடக்கலாம்… 150 வயது வரை மனிதன் வாழ்வது என்பது சாத்தியமா என்பது பற்றி விளக்கம் அளிக்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்.
“நம் உணவுப்பழக்கங்கள் தொடங்கி நமது வாழ்க்கைமுறை வரையிலும் பல மாற்றங்கள் வந்துவிட்டன. இளம் தலைமுறையினரே அதிகம் நோய்வாய்ப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஒரு மனிதன் 70 வயது வரை ஆரோக்கியமாக இருப்பது என்பதே ஆச்சர்யம்தான். இரண்டு தலைமுறைக்கு முன்பிருந்த நம் முன்னோர்கள் வேண்டுமானால் அதிகமான வயது வரை வாழ்ந்திருக்கலாம். இந்தக் காலகட்டத்தில் 150 வயது வரை வாழ்வது என்பது சாத்தியமில்லாத ஒன்றுதான். மேலைநாடுகளில் ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் இருக்கும் இடங்களில் 90 வயது வரை இருப்பது சாத்தியமாகலாம். நாம் இருக்கும் சூழலில் அது கடினமானதுதான்.
சிறு வயதில் இருந்தே ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி போன்றவற்றை முறையாகப் பின்பற்றியிருந்தால் தோராயமாக 80 வருடங்கள் ஆரோக்கியமாக வாழலாம். இந்த வயது வரைதான் வாழ முடியும் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. தற்போது இருக்கும் சூழலில் ஆரோக்கியமான உணவு கிடைக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. சிலர் அதிக வயதுவரை வாழ்ந்தார்கள் என்றால் அவர்கள் நோயுடன் வாழ்நாள்களைக் கடக்கிறவர்களாகக்கூடஇருக்கலாம். தற்போது, 50 வயதுக்கு மேல் உள்ள பலர் நோயுடன்தான் வாழ்கிறார்கள்.

உணவு, உடற்பயிற்சி இவற்றையெல்லாம்விட மனஅழுத்தம் இல்லாமல் இருப்பது என்பது ஆரோக்கிமான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. மன அழுத்தம் இருந்தாலும் அதனை எப்படிக் கையாள்வது என்பது தெரிந்திருந்தால் போதுமானது. நமக்கு மகிழ்ச்சியைத் தருவது எது என்று தெரியாமலே பலர் வாழ்நாள்களைக் கடந்து கொண்டிருக்கிறார்கள். அதனை தெரிந்து கொண்டு நாம் மகிழ்ச்சியாக இருந்தால் உடலில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் அதிகளவில் சுரக்கும். இதனால் வாழ்நாளை நீட்டிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
மன அழுத்தம் இல்லாத சூழல் நம் வாழ்நாளை நிச்சயமாக அதிகரிக்கச் செய்யும். நமக்கு முந்தைய தலைமுறையில் மாரடைப்பு என்பது 70-80 வயதுகளில்தான் வந்தது. இந்தத் தலைமுறையில் 35 வயதிலேயே வரத்தொடங்கிவிட்டது. இதற்கு காரணம் நம்மைச் சுற்றி உள்ள சூழல், முறையற்ற உணவுப் பழக்கம் போன்றவைதான்.
வயது அதிகமாகிவிட்டாலே இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்ள முயற்சி செய்யலாம். வயதாகிவிட்டால் உடம்பில் செரிமானத்தன்மை குறைந்துவிடும். இதனால், எளிமையான உணவுகளை (இடியாப்பம், இட்லி) எடுத்துக் கொள்ளலாம். செரிமான சிக்கல் இல்லாதவர்கள் சிறுதானியங்களை எடுத்துக் கொள்ளலாம். கஞ்சி உணவை எடுத்துக்கொண்டால் செரிமானமும் நன்றாக இருக்கும். மலச்சிக்கல் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதை வாரத்தில் மூன்று நாள்கள் எடுத்துக் கொள்ளலாம்.
வயதாகும்போது இதயத்துடிப்பின் (Pumping Capacity) தன்மை குறையத் தொடங்கிவிடும். அதைக் குறையவிடாமல் உடலியக்கம் இருக்கும்படியான செயல்களில் ஈடுபட்டால் 100 வயது வரை கூட வாழலாம். இது தோராயமாகச் சொல்லப்படுவதுதான்.

70 வயதைக் கடக்கும் நபர்கள் எளிய யோகாசன முறைகளைப் பின்பற்றலாம். எந்த வயது நபராக இருந்தாலும் மூச்சுப்பயிற்சி செய்யலாம். இது ஆக்ஸிஜன் உட்கிரகிப்பை அதிகரிக்கும்.
மனிதனின் ஆயுட்காலத்தை யாரும் தீர்மானிக்க முடியாது. 70 வயதில் ஆரோக்கியமாகவும், மனரீதியாக எந்தத் தொந்தரவும் இல்லாமலும் மகிழ்ச்சியாக இருக்கும் காரணத்தினால் நீண்ட நாள்கள் உயிருடன் இருப்பேன் என்று சொல்லலாமே தவிர இது அடிப்படையில் சாத்தியமில்லை” என்றார்.
ஜப்பானை சேர்ந்த ஜிரோமான் கிமுரா (116) உலகிலேயே வயதான நபர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். இதனை முறியடிக்கும் விதமாக சிவானந்தா என்ற 126 வயது நபர் இந்தியாவில் உள்ள வாரணாசியில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.