`13 வயதுக்குட்பட்ட 50% குழந்தைகள் மொபைலில் ஆபாசப்படம் பார்க்கிறார்கள்…' ஆய்வில் பகீர் தகவல்!

Share

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனின் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றியிருக்கிறது. மொபைல் போன்களின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல், இன்னமும் பட்டன் போனை உபயோகப்படுத்துபவர்களும், போன் வந்தால் அதை அட்டெண்ட் செய்ய மட்டும் தெரிந்தவர்களும் உண்டு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள்கூட இலகுவாக மொபைல் போனை கையாள்கிறார்கள்.

மொபைல்

இந்த வளர்ச்சியானது, வயதுக்கு மீறிக் காணக்கூடாத சில விஷயங்களைப் பார்க்க வைக்கிறது, அடிமையாக்க வைக்கிறது. உடல் நலத்தைத் தாண்டி, மனநலத்தை மொபைல் போன்கள் இன்றைய தலைமுறையிடத்தில் களவாடியிருக்கின்றன. 

2022 செப்டம்பர் மாதத்தில், `காமன் சென்ஸ் மீடியா’ என்ற நிறுவனம் `இளம் வயதினர் மற்றும் ஆபாசப் படங்கள்’ என்ற தலைப்பில், 13 முதல் 17 வயதுடைய 1,350 பேரிடம் ஆய்வு நடத்தியது. 

ஆய்வில் வெளியிடப்பட்ட தகவல்கள்…

* 13 வயதிலேயே 50 சதவிகிதத்திற்கும் அதிகமான இளம் பருவத்தினர் ஆபாசப் படங்களைக் கண்டிருக்கின்றனர்.

* இவர்களில் 58 சதவிகிதத்தினர் தற்செயலாகக் கண்டிருக்கின்றனர். 44 சதவிகிதத்தினர் ஆபாசப் படங்களைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகப் பார்த்தாக கூறியுள்ளனர். இவர்களில் 38 சதவிகிதத்தினர் இன்ஸ்டா, டிக் டாக் போன்ற சமூக வலைதள பக்கங்களில் பார்ப்பதாகக் கூறியுள்ளனர். 

* பலருக்கும் தங்களின் நண்பர்கள் மூலமாகவே ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதுவும் ஆன்லைனில் மல்டி ப்ளேயர் கேம்களை விளையாடும்போது ஏற்பட்டிருக்கிறது.

* 44 சதவிகித பங்கேற்பாளர்கள் ஆபாசப் படங்களுக்கான உண்மையான வலைதளங்களில் பார்த்துள்ளனர். 34 சதவிகிதத்தினர் யூடியூப் போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.  

Social Media

* 16 சதவிகிதத்தினர் சந்தா தளங்களைப் பயன்படுத்தியும், 18 சதவிகிதத்தினர் ஆபாசப் படங்களை ஆன்லைனில் நேரடியாகவும் பார்க்கின்றனர்.

* ஆபாச படத்தைத் தற்செயலாக மற்றும் வேண்டுமென்று பார்த்தவர்களில் சிலர் தாங்கள் அது குறித்து வெட்கப்படுவதாகவும், 67 சதவிகிதத்தினர் அதற்காக வெட்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 

இந்த ஆய்வு குறித்து காமன் சென்ஸ் மீடியாவின் நிறுவனர் ஜிம் ஸ்டெயர் கூறுகையில், “சில பட்டன்களை கிளிக் செய்வதிலேயே ஆபாசப் படங்கள் கிடைக்கின்றன. இந்த நிலைமை ஆபத்தானது. குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பி உள்ளது.

பேசுவதற்கு சங்கடமாக இருப்பதால் இந்தத் தலைப்பை புறக்கணிக்க முடியாது. ஆபாசம் முன்பு எப்போதும் இல்லாத வகையில், டிஜிட்டலை உபயோகிக்கும் குழந்தைகளின் வாழ்வில் ஒரு பெரிய பகுதியாக இருக்கிறது. அதை பற்றி நாம் தேசிய உரையாடல் ஒன்றை நிகழ்த்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். 

குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் கைகளில் இருப்பது வெறும் தொலைபேசி அல்ல, அவர்களின் எதிர்காலம் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com