கடந்த 1915-ஆம் ஆண்டில், 29 வயதான இந்திய தொழிலதிபர் ஜமந்தாஸ் வாடுமுல், தனது பங்குதாரர் தரம்தாஸுடன் இறக்குமதி தொழிலில் தனது சில்லறை விற்பனைக் கடையை அமைப்பதற்காக ஹவாயின் ஒஹாஹு தீவுக்கு சென்றார்.
இருவரும் ஹொனலுலு ஹோட்டல் தெருவில் வாடுமுல் & தரம்தாஸ் என்ற பெயரில் தொழிலை தொடங்கினர். அவர்கள் கிழக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட பட்டு, தந்தம் ஆகியவற்றால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், பித்தளைப் பொருட்கள் மற்றும் பிற வித்தியாசமான அரிய பொருட்களை அங்கு விற்பனை செய்தனர்.
கடந்த 1916- ஆம் ஆண்டில் காலரா நோயால் தரம்தாஸ் இறந்தார். இதனால் ஜமந்தாஸ் , தனது சகோதரர் கோபிந்த்ரம் என்பவரை ஹொனலுலு கடையை நிர்வகிப்பதற்காக அழைத்து வந்தார்.
ஜமந்தாஸ் அப்போது மணிலாவில் இருந்த அவர்களின் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். அடுத்த பல ஆண்டுகள், அந்த சகோதரர்கள் இந்தியா, ஹவாய் இடையே பயணம் செய்து, தங்கள் வியாபாரத்தை உறுதியாக வளர்க்கத் தொடங்கினர்.
இன்று, வாடுமுல் என்ற பெயர் ஹவாய் தீவுகளில் நன்கு பரவியுள்ளது. ஆடை உற்பத்தி, ரியல் எஸ்டேட் தொடங்கி, கல்வி மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளிப்பது வரை, இந்தக் குடும்பம் ஹவாயின் பண்பாட்டு வரலாற்றுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இந்தத் தீவுக்கு குடிபெயர்ந்த முதல் தெற்காசியர்களான ஜமந்தாஸ் வாடுமுல் குடும்பம், இப்போது அந்தத் தீவின் பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாக உள்ளது.
“மெல்ல மெல்ல முன்னேறினோம், அப்படித்தான் தொழிலில் வெற்றி பெற்றோம்” என்று 1973-ஆம் ஆண்டு ஒரு உள்ளூர் ஹவாய் நாளிதழில் ஜமந்தாஸ் தெரிவித்தார்.
ஜமந்தாஸ், சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பிறந்தவர். அவர், சிந்து மாகாணத்தின் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஹைதராபாத்தில் உள்ள ஒரு செங்கல் ஒப்பந்ததாரரின் மகனாகப் பிறந்தார்.
அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் படித்திருந்தாலும் பணக்காரர்கள் இல்லை. அவரது தந்தை ஒரு விபத்தில் சிக்கிய பிறகு, ஜமந்தாஸின் தாய் அவரை பிலிப்பைன்ஸுக்கு அனுப்பினார். ஜமந்தாஸ், அங்கு ஜவுளி ஆலைகளில் பணிபுரியத் தொடங்கினார். 1909-ஆம் ஆண்டில், அவரது பங்குதாரர் தரம்தாஸுடன் இணைந்து மணிலாவில் தனது சொந்தத் தொழிலைத் தொடங்கினார்.
ஹவாயில் ஒரு வணிக சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய இந்திய குடும்பம்
அந்த நேரத்தில் பிலிப்பைன்ஸை ஆக்கிரமித்திருந்த அமெரிக்கா, வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் உடனான தனது உறவைக் குறைத்தது. இதனால் ஜமன்தாஸ் மற்றும் தரம்தாஸின் மணிலா தொழில் வீழ்ச்சியடைந்த பிறகு, ஹவாய்க்கு குடிபெயர்ந்ததாக அவரது பேரன் ஜே.டி. வாடுமுல் கூறுகிறார்.
ஜமந்தாஸ் மற்றும் கோபிந்த்ரம் வாடுமுல், ஹவாயில் தொடங்கிய வியாபாரம், கோபிந்த்ரம் நிர்வகிக்கத் தொடங்கிய பிறகு, “ஈஸ்ட் இந்தியா ஸ்டோர் (East India Store)” எனப் பெயர் மாற்றப்பட்டது.
அதற்கடுத்த ஆண்டுகளில், இந்த வியாபாரம் ஆசியாவின் பல பகுதிகளிலும், ஹவாயிலும் பல கிளைகளுடன் ஒரு பெரிய பல்பொருள் அங்காடியாக விரிவடைந்தது என்று தெற்காசிய அமெரிக்க வரலாற்றின் டிஜிட்டல் காப்பகமான எஸ்.ஏ.ஏ.டி.ஏ (SAADA) கூறுகிறது.
கடந்த 1937ஆம் ஆண்டு கோபிந்த்ரம் வாடுமுலால் கட்டப்பட்ட வாடுமுல் கட்டடம், அவர்களின் வணிகத்திற்கான தலைமையகமாக மாறியது. 1957-ஆம் ஆண்டு, அவர்களின் நிறுவனம் 10 கடைகள், ஒரு அடுக்குமாடி வீடு மற்றும் பல்வேறு தொழில் வளர்ச்சிகளை உள்ளடக்கிய விரிவாக்கத்தைச் செய்தது.
வாடுமுல் கடையில் உள்ள தயாரிப்புகளான துணிகள், உள்ளாடைகள், பித்தளை மற்றும் தேக்கு மரப் பொருட்களை, “அழகாகவும் கவர்ந்திழுக்கும் வகையிலும்” உருவாக்கப்பட்டவை எனவும், அவை அந்த அழகின் மூலமாக ஒருவரை “தூர தேசங்களுக்கும், கற்பனைக் காட்சிகளுக்கும்” கூட்டிச் செல்கின்றன எனவும் ஸ்டார்-புல்லட்டின் நாளிதழ் விவரித்தது.
அலோஹா சட்டைகள்
கடந்த 1930களில் ஹவாய், பணக்கார சுற்றுலா பயணிகளுக்காக ஒரு பிரபலமான இடமாக மாறியது. தீவைக் குறிக்கும் உருவங்கள் பொறிக்கப்பட்ட, பிரகாசமான வண்ணங்களில் ஆன ‘அலோஹா சட்டை’ என்றழைக்கப்படும் சட்டைகள் மிகவும் விரும்பப்படும் நினைவுப் பரிசாக உருவெடுத்தது.
வாடுமுலின் ஈஸ்ட் இந்தியா கடையானது, அங்கு ஹவாய் தீவின் உருவங்களைக் கொண்ட பொருட்களை விற்பனை செய்த முதல் கடைகளில் ஒன்றாக இருந்தது என்று ஹவாய் ஜவுளி மற்றும் வடிவ நிபுணரான டேல் ஹோப்பின் தெரிவித்தார்.
முதன்முதலில் 1936-ஆம் ஆண்டில், கோபிந்த்ரம்மின் பரிந்துரையின் பெயரில் அவரது உறவினரான எல்சீ ஜென்சன் என்பவரால் இந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டது.
“மவுண்ட் ஃபுஜிக்கு பதிலாக, அவர் டயமண்ட் ஹெட் வைத்திருப்பார். கோயிக்கு பதிலாக வெப்பமண்டல மீன்களை வடிவமைத்திருப்பார். செர்ரி பூக்களுக்கு பதிலாக கார்டேனியாக்கள் மற்றும் செம்பருத்தி மலர்கள் கொண்ட ஒரு செடியையும், மேலும் எங்களுக்குத் தெரிந்த அனைத்து விஷயங்களையும் அவரது வடிவமைப்பில் கொண்டு வந்திருப்பார்” என்று ஹோப் கூறினார்.
அந்த வடிவமைப்புகள் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவை பட்டுத்துணி மீது பதிக்கப்பட்டன என்று “ஹவாய் சட்டை வடிவமைப்புகள்” எனும் தனது புத்தகத்தில் நான்சி ஷிஃபர் எழுதுகிறார்.
“இந்த நுட்பமான மலர் வடிவங்கள், நவீன மற்றும் துடிப்புமிக்க ஐடியாவாக இருந்தது. வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட முதல் ஹவாய் வடிவமைப்பு இது” என்று ஷிஃபர் குறிப்பிடுகிறார்.
அவை படகுகளின் மூலமாக விற்கப்பட்டதாகவும், லண்டனில் கூட காட்சிக்கு வைக்கப்பட்டதாகவும் வில்லியம் டெவன்போர்ட் பாரடைஸ் ஆஃப் தி பசிபிக் புத்தகத்தில் கூறுகிறார்.
இந்த சட்டைகளை வாங்குவதற்கு அமெரிக்க திரைப்பட நட்சத்திரங்களான லோரெட்டா யங், ஜாக் பென்னி, லானா டர்னர், எடி “ரோசெஸ்டர்” ஆண்டர்சன் ஆகியோர் வாடுமுலின் ஸ்டோருக்கு வந்துள்ளதாக கோபிந்த்ரமின் மகள் லீலா, ஹோப்பிடம் தெரிவித்துள்ளார்.
“வாடுமுல் என்பது இப்போது ஹவாயி நாகரிகத்தின் விளக்கமாக மாறிவிட்டது என்பதை நாங்கள் தொடர்ச்சியாக அறிந்து வருகிறோம்,” என்று 1966-ஆம் ஆண்டு ஹோனலுலு ஸ்டார் – புல்லெட்டின் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குலாப் வாடுமுல் கூறினார்.
வாடுமுல், விரைவில் ராயல் ஹவாயியன் உற்பத்தி நிறுவனத்தை வாங்கியது. அங்கு முதன்முதலில் அனைத்து குடும்பத்தினருக்கும் பொருத்தமான அலோஹா ஆடைகள் தயாரிக்கப்பட்டன.
குடியுரிமைக்கான நீண்ட போராட்டம்
அவர்களின் வணிக வெற்றிக்கு பின்னாலும், வாடுமுல் சகோதரர்கள் ஜமந்தாஸ் மற்றும் கோபிந்த்ரம், அமெரிக்க குடியுரிமையைப் பெற பல ஆண்டுகள் ஆனது. அமெரிக்காவில், பாகுபாடு மற்றும் கடினமான குடியேற்றச் சட்டங்களால் அவர்கள் குடியேறிய தொடக்க காலத்தில் இனவெறியின் விளைவுகளை எதிர்கொண்டதாக ஹவாய் பிசினஸ் பத்திரிகை குறிப்பிட்டது.
கடந்த 1922-ஆம் ஆண்டில், கோபிந்த்ரம், எலன் ஜென்சன் என்ற அமெரிக்கரை மணந்தார், அமெரிக்க குடியுரிமைக்கு தகுதியில்லாத ஒருவரை திருமணம் செய்ததற்காக கேபிள் சட்டத்தின் கீழ் அவரது குடியுரிமை பறிக்கப்பட்டது. 1931இல் சட்டத்தை சீர்திருத்தவும் குடியுரிமையை மீண்டும் பெறவும் ஜென்சன், லீக் ஆஃப் வுமன் வோட்டஸ் அமைப்புடன் இணைந்து பணியாற்றினார்.
கடந்த 1946இல் இந்தியர்கள் குடியுரிமையைப் பெறுவதற்கான சட்டம் இயற்றப்பட்டபோது கோபிந்த்ரம் குடியுரிமை பெற்றார். இதற்கிடையில், அவரது சகோதரர் ஜமந்தாஸ், இந்தியாவிற்கும் ஹவாய்க்கும் இடையில் தனது பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டார்.
இந்தியாவின் 1947 பிரிவினையின்போது, வாடுமுல் குடும்பம் சிந்துவில் இருந்து பம்பாய்க்கு (இப்போது மும்பை) குடிபெயர்ந்தது. மேலும் அவர்களின் சொத்துகளில் பெரும்பகுதியை அக்குடும்பம் அங்கு விட்டுச் சென்றதாக எஸ்.ஏ.ஏ.டி.ஏ கூறுகிறது.
ஜமந்தாஸின் மகன் குலாப் இறுதியில் ஹவாய் தீவுக்கு வந்து தனது குடும்பத் தொழிலில் ஈடுபட்டு அதன் தலைவரானார். 1955-ஆம் ஆண்டில், சகோதரர்கள் தொழிலை பிரித்தனர்
ஜமந்தாஸும்,குலாபும் சில்லறை விற்பனையை தங்களுடன் வைத்திருந்தனர். கோபிந்த்ரமின் குடும்பம் அதன் ரியல் எஸ்டேட் பிரிவை எடுத்துக் கொண்டது.
ஜமந்தாஸ் 1956இல் ஹவாய்க்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்தார். அவருடைய மனைவி மற்றும் அவர்களது மகன்களில் ஒருவர் மரணித்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஜமந்தாஸ் 1961இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார்.
இந்தியத் தொடர்பு
பல ஆண்டுகளாக, அந்தக் குடும்பம் இந்தியா மற்றும் அதன் மக்கள் நலனில் முதலீடு செய்தது. கோபிந்த்ரம் இந்தியாவின் சுதந்திரத்திற்கான குழுவின் உறுப்பினராக இருந்தார். மேலும் இந்தியாவின் சுதந்திரத்திற்கான வழக்கை ஆதரிப்பதற்காக அடிக்கடி வாஷிங்டனுக்கு சென்றார் என்று எலியட் ராபர்ட் பார்கன், தனது மேக்கிங் இட் இன் அமெரிக்கா என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கோவிந்த்ரமின் இல்லம் “இந்திய சுதந்திரத்தில் அக்கறை கொண்ட மக்களுக்கான ஒரு புனித தலமாக அமைந்தது” என்று சசீந்திர நாத், ‘அமெரிக்காவில் இந்தியா’ (India in the United States) என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
கடந்த 1946-ஆம் ஆண்டில் வாடுமுல் அறக்கட்டளையானது, அமெரிக்க பல்கலைக் கழகங்களில் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணனால் வழங்கப்பட்ட தொடர் விரிவுரைகளுக்கு நிதியுதவி அளித்தது. பின்னர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன், இந்தியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
ஹவாய் மற்றும் இந்தியாவிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குதல், ஹொனலுலுவில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கான நன்கொடை அளித்தல் மற்றும் இந்திய-ஹவாய் பரிமாற்றத்தை ஊக்குவித்தல் போன்றவற்றை இக்குடும்பம் தொடர்ந்து செய்து வருகிறது.
வாடுமுல் சகோதரர்களின் பேரக் குழந்தைகள் பலர் இப்போது ஹவாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணி புரிகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளில், அவர்களது குடும்ப வணிகம் ரியல் எஸ்டேட்டில் கவனம் செலுத்தியதால், கடைசியாக வாடுமுல் சில்லறை விற்பனை நிறுவனம் 2020இல் மூடப்பட்டது.
மேலும் “பல ஆண்டுகளாக அவர்களது தொழிலுக்கு ஆதரவளித்ததற்கும் நல்ல நினைவுகளுக்கும்” தனது வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் நன்றி தெரிவித்தது.
வாடுமுல் நிறுவனம் கடந்த ஆண்டு ஹவாயில் 19,045 சதுர மீட்டர் சந்தையை வாங்கியது. அந்த நிறுவனத்தின் தலைவர் ஜே.டி. வாடுமுல் கூறும்போது, “தற்காலத்திலும், எதிர்காலத்திலும் எங்கள் குடும்பத்தின் கவனம் ஹவாய் தீவுகளின் மீது எப்போதும் குவிந்திருக்கும்” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.