பச்சிளம் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரையில் எல்லோருக்குமே இனிப்புகள் என்றால் அலாதி பிரியம் தான். சாதாரண மிட்டாய்களில் தொடங்கி, பலகார வகைகள், ஜூஸ் வகைகள், உணவுகள் என சர்க்கரை சேர்க்கப்பட்ட எல்லாமே நமக்கு பிடித்தமானதாக இருக்கும். ஆனால், இன்றைக்கு சர்க்கரை நோய் அபாயம் மற்றும் இதர உடல்நல பிரச்சினைகளால் பலரும் சர்க்கரையை ஒதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை தவிர்ப்பது கட்டாய தேவையாக இருப்பினும், மற்ற எல்லோரும் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லதல்ல. அதே சமயம், நாம் எவ்வளவு சர்க்கரை சாப்பிடுகிறோம் என்ற கட்டுப்பாடு வேண்டும். அதிலும் நிறைவூட்டப்பட்ட சர்க்கரை ஆபத்தானதாகும். இந்த நிலையில், சர்க்கரையை தேடும் நம் மனதை கட்டுப்படுத்துவது எப்படி? இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
எதனால் சர்க்கரை வேட்கை அதிகரிக்கிறது?
சர்க்கரை வேட்கை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு சீரற்ற நிலையில் இருப்பதால் இத்தகைய எண்ணம் மேலோங்குகிறது. சாப்பிட்ட பிறகு இனிப்புகளை எடுத்துக் கொண்டால் செரிமானத்திற்கு தேவையான ஆற்றலை அது வழங்கும். அதேபோல இனிப்புகளை சாப்பிடும்போது நம் உடலில் செரடோனின் என்னும் ஹார்மோன் அதிகரிப்பதால் நம் எண்ண ஓட்டங்கள் மேம்படும்.
போதிய தூக்கமின்மை காரணமாகவும் கூட இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால் சர்க்கரை வேட்கையை கட்டுப்படுத்தலாம்.
புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் நம் உடலில் இன்சுலின் தன்மை மாறுபடும். ஆக, புரத உணவுகளை உட்கொள்ளும்போது சர்க்கரை வேட்கை குறையும்.
செரடோனின் ஹார்மோன் சுரப்பை மேம்படுத்தக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். மாவுச்சத்து நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
மெக்னீசியம் நிறைந்த உணவுகளான நட்ஸ், பாலக்கீரை போன்றவற்றை உட்கொள்ளலாம். அவை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதாலும் சர்க்கரைக்கான வேட்கை அதிகரிக்கும். ஆகவே, போதுமான அளவுக்கு தண்ணீர் அருந்த வேண்டும்.
உணவுக்குப் பிறகு லவங்க பட்டை நீர் அருந்துவது நல்ல பலனை தரும்.
குடல் நலனை மேம்படுத்தக் கூடிய இட்லி, தோசை, தயிர் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
உணவை பிரித்து கொஞ்சம், கொஞ்சமாக அவ்வபோது சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
வெந்தய நீர் அருந்தினால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படும்.
தினந்தோறும் கொஞ்சமாக நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்தியாவசியமான ஃபேட்டி ஆசிட் உற்பத்தி இதனால் அதிகரிக்கும். அது சர்க்கரை வேட்கையை தணிக்கும்.
உடலில் விட்டமின் டி சத்து நிறைவாக இருப்பின், இனிப்புகள் மீது அதிக நாட்டம் ஏற்படாது. ஆகவே, தினசரி காலை அல்லது மாலை வேளையில் 15 நிமிடங்களாவது சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sugar, Sugar intake, Sweets