பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஃபெர்னாண்டா பால்
- பதவி, பிபிசி உலக சேவை
-
இவை அனைத்தும் கோவிட் பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு தொடங்கின.
குறட்டைச் சத்தம் தாங்க முடியாமல் சிசிலியா* தூங்கவில்லை. கணவர் குறட்டை விடுவதனால், அந்தச் சத்தத்தில் இருந்து தப்பிக்க, தனது கணவரைத் திருப்பிப் படுக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார் சிசிலியா.
ஆனால் அந்த முயற்சி பயனளிக்கவில்லை.
அந்த 35 வயது பெண்மணியால் அதனைத் தாங்க முடியவில்லை. அதனால் இனி ஒரே அறையில் ஒன்றாக தூங்க வேண்டாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.
“என்னால் என் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. நான் நாள் முழுவதும் சோர்வாக இருந்தேன். நீங்கள் அதை இரண்டு இரவுகளுக்குத் தாங்கிக் கொள்ளலாம், ஆனால் நீண்ட காலத்திற்கு, அதனை தாங்கிக்கொண்டு உங்களால் வாழ முடியாது” என்று சிசிலியா லண்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து பிபிசியிடம் தெரிவித்தார். அங்கு அவர் சில ஆண்டுகள் வாழ்ந்தார்.
“இது எளிதான வழி அல்ல. இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் நாங்கள் தூங்க முடியும் என்பதை உணர்ந்தபோது, மகிழ்ச்சியாக உணர்ந்தேன்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
சிசிலியாவும், 43 வயதான அவரது துணையும், “ஸ்லீப் விவாகரத்து” என்ற நடைமுறையை ஏற்றுக்கொண்டனர்.
“பொதுவாக, ஸ்லீப் விவாகரத்து என்பது ஆரம்பத்தில் தற்காலிகமாக செய்யப்படும் ஒன்று. ஆனால் தம்பதிகள் தாங்கள் தனியாக இருக்கும்போது உண்மையில் நன்றாகத் தூங்குவதை உணர்ந்துகொள்கிறார்கள்,” என்கிறார் அமெரிக்காவில் உள்ள மெக்லீன் மருத்துவமனையின் மனநல மருத்துவர் ஸ்டெபானி கோலியர்.
“பொதுவாக, இதற்கான காரணங்கள் ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை. ஒரு நபர் குறட்டை விடுவது, தூங்கும்போது அடிக்கடி கால்களை நகர்த்திக் கொண்டே இருப்பது, தூக்கத்தில் நடப்பது அல்லது மருத்துவ காரணங்களுக்காக நிறைய முறை கழிவறைக்குச் செல்வதால் அவை ஏற்படுகின்றன. அதனால் அவர்கள் படுக்கையில் நகர்கிறார்கள், உருண்டு விடுகிறார்கள், அது அவர்களின் துணையைத் தொந்தரவு செய்கிறது, “என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.
நிச்சயமாக “இந்தப் போக்கு பிரபலமாகி வரும் ஒன்று தான்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
மில்லினியல் தலைமுறையிடம் வளர்ந்து வரும் போக்கு
கடந்த ஆண்டு இறுதியில், நன்கு அறியப்பட்ட அமெரிக்க நடிகை கேமரூன் டியாஸ், ‘லிப்ஸ்டிக் ஆன் த ரிம்’ எனும் போட்காஸ்டில் , அவரும் அவரது கணவரும் ஒரே அறையில் தூங்கவில்லை என்று கூறினார்.
“நாம் தனித்தனி படுக்கையறைகளை இயல்பாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
அவரது பேச்சு, சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான எதிர்வினைகள் உருவாக காரணமாக இருந்தது. மேலும் ஊடகங்களில் பல்வேறு கட்டுரைகளுக்கு வழிவகுத்தது.
அதன் மூலம் இந்த நடைமுறை அவரால் மட்டும் பயன்படுத்தப்படவில்லை என்று தெரிய வந்தது.
அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசின் (ஏஏஎஸ்எம்) 2023-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி, அமெரிக்காவில் மூன்றில் ஒரு பகுதியினர் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக தங்கள் துணையுடன் தூங்காமல், அவ்வப்போது அல்லது எப்போதும் தனித்தனி அறைகளில் தூங்குவதாக தெரிவித்தனர்.
இந்த முறையை “மில்லினியல்கள்” (தற்போது சுமார் 28 முதல் 42 வயது வரை உள்ளவர்கள்) அதிகளவில் பின்பற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது
மேலும் கணக்கெடுக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (43%) தங்கள் துணையிடம் இருந்து விலகி தனி படுக்கையறைகளில் தூங்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
1965 முதல் 1980 வரை பிறந்தவர்களைக் குறிப்பிடும் X தலைமுறையைச் சேர்ந்தவர்கள் 33 சதவீத பேரும்,1997 முதல் 2012 வரை பிறந்த தலைமுறை Z எனப்படுபவர்களில் 28 சதவீத பேரும் தனி படுக்கையறைகளில் தூங்குவதாக தெரியவந்துள்ளது
1946 முதல் 1964 வரை பிறந்த பேபி பூமர்ஸ் எனப்படும் தலைமுறையைச் சேர்ந்தவர்களில் 22 சதவீதமும் இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
“இளைய தலைமுறையினர் ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை என்றாலும், இதுகுறித்து சில கருத்துக்கள் உள்ளன. ஒன்று, தனித்தனியாக தூங்குவது இயல்பாக்கப்பட்டுள்ளது. இது ஒரு கலாசார மாற்றம். ‘நான் நன்றாக தூங்கினால், நான் நன்றாக உணர்கிறேன். எனவே ஏன் தனியாக தூங்க கூடாது ?’ என்று அவர்கள் நினைக்கிறார்கள்” என்கிறார் மருத்துவர் கோலியர்.
பட மூலாதாரம், Getty Images
வரலாறு முழுவதும், இது குறித்த கருத்துக்கள் மாறி வந்துள்ளன.
திருமணமான தம்பதிகளுக்கு இரட்டை படுக்கை என்ற கருத்து ஒப்பீட்டளவில் நவீனமானது. தொழில் புரட்சியின் போது மக்கள் அதிக ஜனத்தொகை உள்ள நகரங்களுக்குச் சென்றபோது இந்த முறை மிகவும் பிரபலமானது என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.
ஆனால் 19-ஆம் நூற்றாண்டிற்கு முன்பு, திருமணமான தம்பதிகள் தனித்தனி படுக்கைகளில் தூங்குவது பொதுவான நடைமுறையாக இருந்தது. குறிப்பாக செல்வந்தர்கள் மற்றும் அரச குடும்பங்கள் மத்தியில் இப்பழக்கம் பொதுவாக இருந்தது, என்கிறார் சிலியின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் தூக்கக் கோளாறுகளை ஆய்வு செய்யும் மருத்துவ நிபுணராக (சோம்னாலஜிஸ்ட்) உள்ள பாப்லோ ப்ரோக்மேன்.
தனியாகத் தூங்குவதன் நன்மைகள் என்ன?
தனித்தனி அறைகளில் தூங்கும் தம்பதியினருக்கு சில நன்மைகள் உள்ளதாக நிபுணர்கள் விளக்குகிறார்கள்.
“முக்கியமான நன்மை என்னவென்றால், அவர்கள் வழக்கமான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தை உருவாக்க முடியும். மேலும் நல்ல தூக்கம் பெறுவது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு மிகவும் அவசியம்” என்கிறார் மருத்துவர் கோலியர்
“ஒரு நபரால் நன்றாக தூங்க முடியாவிட்டால், அது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் செயல்பாடு வரை அனைத்தையும் பாதிக்கிறது. மேலும் நீங்கள் விரைவாக கோபப்படவும், பொறுமை இழக்கவும் அது காரணமாகலாம். உங்களுக்கு சில வகையான மனச்சோர்வை கூட தூக்கமின்மை உருவாக்கலாம்,” என்று அவர் கூறுகிறார்.
“ஸ்லீப் விவாகரத்து” என்பது ஒரு “ஆரோக்கியமான” உறவைப் பராமரிக்க உதவும் என்று மனநல மருத்துவராக உள்ள கோலியர் நம்புகிறார்.
“தம்பதிகள் நன்றாக ஓய்வெடுக்காதபோது, அதிகமாக வாதிடலாம். அதிகளவு எரிச்சல் ஏற்பட்டு, மற்றொருவர் நிலையை புரிந்துக்கொள்ளும் தன்மையை இழக்க நேரிடும்,” என்றும் கோலியர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
நுரையீரல் நிபுணரும் அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசினின் செய்தித் தொடர்பாளருமான சீமா கோஸ்லா இந்த கருத்தை ஒப்புக்கொள்கிறார்.
“மோசமான தூக்கம் உங்கள் மனநிலையை மோசமாக்கும் என்பதை நாங்கள் அறிவோம், மேலும் தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் துணையுடன் வாதிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தூக்கக் கலக்கத்தை ஏற்படுத்தும் நபர் மீது சில மனக்கசப்புகள் ஏற்படலாம். இது உறவுகளை எதிர்மறையாக பாதிக்கும்” என்று சீமா குறிப்பிட்டார்.
மேலும் அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசின், “ஸ்லீப் விவாகரத்து” பற்றிய ஆய்வை தொடங்கியதைக் குறித்தும் அவர் விளக்கினார்.
“ஒரு நல்ல இரவு தூக்கம் ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் முக்கியமானது. எனவே சில தம்பதிகள் தங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக தனியாக தூங்குவதைத் தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியமில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
சிசிலியாவிற்கு, அவரது தற்போதைய துணையை விட்டு தனியாக வேறு அறையில் தூங்குவது “அவருடைய வாழ்க்கையை மாற்றிவிட்டது” என்று கருதுகிறார்.
“இது மிகவும் வசதியான முறை. நன்றாகத் தூங்க முடியும், படுக்கையில் அதிக இடம் கிடைக்கும், மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் திரும்பிப்படுக்க முடியும்.” என்று அவர் கூறுகிறார்.
“மேலும், நீங்கள் உங்கள் துணையுடன் ஒரே நேரத்தில் எழுந்திருக்க வேண்டியதில்லை. உங்களுக்கு விருப்பமான நேரம் அல்லது தேவைப்படும் நேரத்தில் உங்களால் எழுந்து கொள்ள முடியும்” என்கிறார் சிசிலியா.
குறைகள் என்ன?
மிகவும் வெளிப்படையான குறைபாடு என்னவென்றால், இந்த முறைக்கு கூடுதல் படுக்கை மற்றும் ஒரு கூடுதல் அறை தேவைப்படுகிறது. எனவே பல தம்பதிகளுக்கு இது ஒரு தேர்வாக கூட இல்லை.
ஆனால் அவை சாத்தியமாக இருந்தால் கூட, இந்த முடிவு சில எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். பல தம்பதிகள் நெருக்கத்தை இழப்பதைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள்.
“எனது துணையுடன் உள்ள தொடர்பில் ஏதோ ஒன்று மாறியுள்ளது என நான் நினைக்கிறேன்,” என்று சிசிலியா ஒப்புக்கொள்கிறார்.
“உறவு, நெருக்கம் பாதிக்கப்படுகிறது. ஆனால் அதன் தாக்கம் தீவிரமாக இல்லை. அதன் நன்மைகள்தான் அதிகம் என்று நான் நினைக்கிறேன்,” என அவர் மேலும் கூறுகிறார்.
முழுநேர வேலை செய்யும் பலருக்கு, அவர்களைத் தங்கள் துணையுடன் இணைக்கும் தருணம் அவர்கள் தூங்கச் செல்லும் நேரம்தான்.
“எனவே, அவர்கள் ஒன்றாகச் செலவிடும் நேரத்தை மேம்படுத்த வேண்டும். அதுவே தீர்வுகளில் ஒன்றாகும்,” என்று மருத்துவர் கோலியர் விளக்குகிறார்.
பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில், “இந்த “ஸ்லீப் விவாகரத்து” நடைமுறை அனைத்து தம்பதிகளுக்கும் வேலை செய்யக்கூடிய ஒன்று அல்ல என்று கூறுகிறார் ப்ரோக்மேன்.
“தம்பதியுடன் தூங்குவதால் சில உயிரியல் நன்மைகள் உள்ளன. பலருக்கு, கனவின் மூலம் ஒரு இணைப்பு உருவாகிறது. இது மனித இனத்தில் பழமையானது. உதாரணமாக, தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் இந்த பிணைப்பு உருவாகி, இருவரும் ஓய்வெடுக்கும் வகையில் ஒரே மாதிரியான தூக்க சுழற்சிகளை தாயும் குழந்தையும் கொண்டிருப்பார்கள்” என்கிறார் மருத்துவர் ப்ரோக்மேன்.
“பல வருடங்களாக ஒன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் தம்பதிகள், அவர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டதிலிருந்து ஆழமான தூக்க நிலைகளை உருவாக்குகிறார்கள் என்பதை குறிப்பிடும் ஆய்வுகள் உள்ளன. இதன் மூலம் உங்களின் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறீர்கள்,” என்கிறார் மருத்துவர்.
இருப்பினும், ஒரு ஜோடி “ஸ்லீப் விவாகரத்து” செய்ய முடிவு செய்தால், சில பரிந்துரைகளைப் பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
“ஒருவர் விரும்பி மற்றவர் விரும்பாதபோது, இந்த முறை பயனளிக்காது மாறாக மனக்கசப்பை ஏற்படுத்தும், ” என்கிறார் டாக்டர் கோலியர்.
பிரிட்டனில் 2020 ஆம் ஆண்டில் ஒன்றாக வாழும் தம்பதிகளில் ஆறில் ஒருவர் (15%) தனியே உறங்குகிறார்கள். அவர்களில் 10ல் ஒன்பது பேர் (89%) தனித்தனி அறைகளில் அவ்வாறு உறங்குகிறார்கள் என்று நேஷனல் பெட் ஃபெடரேஷன் கண்டறிந்துள்ளது.
2009-ஆம் ஆண்டில், ஸ்லீப் கவுன்சில் கருத்துக்கணிப்பு 10 இல் ஒரு ஜோடிக்கும் குறைவானவர்களுக்கு (7%) தனி படுக்கைகள் இருப்பதை வெளிப்படுத்தியது. “கடந்த பத்தாண்டுகளில் தனித்தனியாக உறங்கும் விகிதம் இருமடங்காக அதிகரித்துள்ளதாக இது தெரிவிக்கிறது” என்று நேஷனல் பெட் பெடெரேஷன் அமைப்பு கண்டறிந்துள்ளது.
எனவே எங்கே தூங்குகுவது என்று வரும்போது, தம்பதிகளில் பலர் நல்ல இரவு தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாகத் தெரிகிறது.
*கருத்து தெரிவித்த நபர் தனது உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத காரணத்தால் செசிலியா என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு