பட மூலாதாரம், Reuters/File photo
ரஷ்யா மற்றும் இரான் அதிபர்களுக்கு இடையிலான தொலைபேசி உரையாடல், கடந்த ஒரு வாரத்தில் இருமுறை நடந்து விட்டது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீதான தங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தன்னை ஒரு சர்வதேச அமைதி ஏற்படுத்துபவராக காட்டிக் கொள்கிறார்.
அது அவ்வளவு எளிதாக நம்பக்கூடிய ஒன்றல்ல.
எல்லாவற்றிற்கும் மேலாக, 2022-இல் ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட தேசத்தின் மீது ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு உத்தரவிட்டது இதே ரஷ்ய தலைவர்தான்.
அப்போது, யுக்ரேன் மீதான படையெடுப்பை ஐநா சாசனத்தை மீறும் செயல் என்று ஐநா பொதுச் சபை கண்டித்திருந்தது.
கிரெம்ளின் இப்போது “இரான் மோதலுக்கு ஒரு விரைவான பதற்றக் குறைப்பு மற்றும் அரசியல் தீர்வுக்கு” அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், ரஷ்யா யுக்ரேனுக்கு எதிரான தனது போரைத் தொடர்ந்து வருகிறது.
இரான் நாட்டுடன் ரஷ்யா ஒரு “விரிவான வியூக கூட்டாண்மை” ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது. இந்த வாரத்தில்தான் புதின், இரானுக்கு ரஷ்யாவின் “அசைக்க முடியாத ஆதரவை” மீண்டும் உறுதிப்படுத்தினார். ஆனால் அவர்களின் வியூக கூட்டாண்மை என்பது ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை விட மிகக் குறைவானதுதான்.
அதற்குப் பதிலாக, மோதலில் மத்தியஸ்தம் செய்ய ரஷ்யா முன்வந்துள்ளது.
திங்களன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நடத்திய தொலைபேசி உரையாடலில், ரஷ்யாவின் கூற்றுப்படி, புதின் “இரான் மோதலுக்கு விரைவான இராஜதந்திரத் தீர்வை நோக்கமாகக் கொண்ட பல கருத்துக்களைத் தெரிவித்தார்; இது வளைகுடா நாடுகளின் தலைவர்கள், இரான் அதிபர் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடனான தொடர்புகளின் அடிப்படையில் அமைந்தது”.
ரஷ்யாவைப் பொறுத்தவரை, இது வளைகுடா மற்றும் மத்திய கிழக்கில் தனது நற்பெயரை உயர்த்துவதற்கும் – செல்வாக்கு மிக்க ஒரு சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாகும்.
அமெரிக்காவுடனான தனது உறவை ஆழப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பு.
டிரம்ப்புடன் நல்ல உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள ரஷ்யா ஆர்வமாக உள்ளது. டிரம்ப் நிர்வாகத்துடனான தனது உறவு, யுக்ரேனில் ரஷ்யாவின் போர் நோக்கங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று அது கருதுகிறது.
அதனால்தான் இரான் போர் தொடர்பாக டிரம்ப்பை தனிப்பட்ட முறையிலும் பகிரங்கமாகவும் விமர்சிக்காமல் புதின் கவனமாக இருந்து வருகிறார்.
“புதின் உதவியாக இருக்க விரும்புகிறார்,” என்று புதினுடனான தனது தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு திங்களன்று டிரம்ப் கூறினார்.
“நான் சொன்னேன், ‘யுக்ரேன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் நீங்கள் இன்னும் உதவியாக இருக்க முடியும். அதுதான் அதிக உதவியாக இருக்கும்’ என்று சொன்னேன்.” என்றார் டிரம்ப்.
பட மூலாதாரம், Getty Images
இரான் விவகாரத்தில் ‘பதற்றக் குறைப்புக்கு’ ரஷ்யா அழைப்பு விடுத்தாலும், இந்த மோதல் ரஷ்யாவிற்கு பிற வாய்ப்புகளை வழங்குகிறது.
முதலாவது பொருளாதார வாய்ப்புகள்.
உலகளாவிய எண்ணெய் விலையில் சமீபத்திய உயர்வு ரஷ்ய அரசு வருவாய்க்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கிறது மற்றும் – நீண்ட கால உயர் விலைச் சூழலில் – ரஷ்யா யுக்ரேன் மீதான தனது போருக்குத் தொடர்ந்து நிதி திரட்ட இது உதவும்.
ரஷ்யாவின் மத்திய பட்ஜெட், நாடு ஒரு பேரல் எண்ணெயை 59 டாலருக்கு ஏற்றுமதி செய்வதை அடிப்படையாகக் கொண்டது.
சமீபத்திய மாதங்களில் எண்ணெய் விலை அந்த மட்டத்திற்கு கீழே சரிந்தது. இந்த வாரம், கச்சா எண்ணெய் விலை வியக்கத்தக்க வகையில் ஒரு பேரல் கிட்டத்தட்ட 120 டாலராக உயர்ந்தது. அவை அதன்பிறகு குறைந்துவிட்டன, ஆனால் எண்ணெய் விலைகள் இன்னும் 59 டாலர் என்ற அளவுக்கு மேலேயே உள்ளன.
அதுமட்டுமின்றி, இரான் போரினால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைப் போக்க “சில நாடுகளுக்கு” எண்ணெய் தொடர்பான தடைகளிலிருந்து அமெரிக்கா விலக்கு அளிக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீதான எண்ணெய் தடைகள் தளர்த்தப்பட்டால், ரஷ்யா இன்னும் பெரிய நிதி லாபத்தை எதிர்பார்க்கலாம். யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இது யுக்ரேனுக்கு ஒரு “கடுமையான அடியாக” இருக்கும் என்று கூறினார் மற்றும் அதற்கு எதிராக இருக்குமாறு டிரம்ப்பை வலியுறுத்தினார்.
ரஷ்ய ஆதரவு செய்தித்தாளான ‘கொம்சோமோல்ஸ்காயா பிராவ்தா’ நம்பிக்கையுடன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
“மேற்கு நாடுகள் ரஷ்யா மீதான தடைகளை ரத்து செய்வதற்கு எண்ணெய் விலை உயர்வு ஒரு காரணமாகும்,” என்று அதன் தலைப்பு அறிவித்தது.
புதின் அல்லது ரஷ்ய அரசு நேரடியாக அமெரிக்க அதிபரை விமர்சிக்காமல் இருக்கலாம், ஆனால் சில ரஷ்ய செய்தித்தாள்கள் டிரம்ப்பையும் இரான் போரையும் கடுமையாகச் சாடி வருகின்றன.
“‘அமைதி அதிபர்’ புத்தி சுவாதீனத்தை இழந்துவிட்டார்,” என்று செவ்வாயன்று வெளியான ‘மாஸ்கோவ்ஸ்கி கொம்சோமோலெட்ஸ்’ என்ற செய்தித்தாள் எழுதியிருக்கிறது.
பிபிசி தமிழுடன் பகிருங்கள்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு