
எவ்வளவுதான் திறமையான, கிரியேட்டிவ் நபராக இருந்தாலும் வேலையைத் தள்ளிப்போடும் பழக்கம் (Procrastination) இருந்தால் நம் முன்னேற்றத்துக்குத் தடையாக அமையும். இதை கைவிடுவதற்கான சில டிப்ஸ்.

தள்ளிப்போடும் மனநிலையை மாற்ற முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, இந்த நேரத்துக்குள் வேலைகளை முடித்திருக்க வேண்டும் என வேலைக்கான நேர அட்டவணையை வகுத்துக்கொள்வது.

ஏன் வேலையை தள்ளிப்போட வேண்டும், இதனால் உண்டாகும் பிரச்னைகள், நஷ்டங்கள் என்ன? வேலையை நேரத்துக்கு முடித்துவிட்டால் கிடைக்கும் மகிழ்ச்சி என்ன என உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள்.

ஒரு செயலை முடிக்க, ஒரு வீரனைப்போல உணராமல், வழக்கத்துக்கு மீறிய செயல்களைச் செய்யாமல், இயல்பாக இருங்கள். சாதாரணமாகவே அதை செய்து முடிக்க இயலும் என நம்புங்கள்.

ஒரு பெரிய வேலையை, முதலில் செய்ய வேண்டியது, அடுத்து செய்ய வேண்டியது, இறுதி வடிவம் என்று சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். சிறிது சிறிதாகச் செய்யும்போது, தள்ளிப்போடும் எண்ணம் குறையும்.

`எனக்கு நேரமே இல்லை’, ‘மன அழுத்தமாக இருக்கிறது’, `இதை செய்வதற்கான மனநிலையில் நான் இல்லை’ என்று உங்களுக்கு நீங்களாகவே சொல்லி கொள்ளும் சாக்குபோக்குகளைக் குறையுங்கள்.

நீங்கள் ஒரு செயலை செய்ய முடிவெடுத்த நேரத்தில், மற்ற தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதைக் குறைத்துக்கொள்வது முக்கியம். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது, டேட்டாவை ஆஃப் செய்வது, தேவைப்பட்டால் செல்போனையே ஆஃப் செய்வது என கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு செயலைக் குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிட்டால், உங்களுக்குப் பிடித்த ஒரு செயலை செய்து உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்

ஒரு செயலை நீங்கள் செய்யாமல் இருப்பதால் பெரிதும் பாதிக்கப்பட இருப்பது நீங்கள்தான். சரியான நேரத்தில் செய்து முடிக்காத பணியால் உங்களுக்கு ஏற்படப் போகும் பிரச்னைகள் குறித்து முன்கூட்டியே யோசியுங்கள்.

`நான் முன்பே தொடங்கியிருக்க வேண்டும்’, `நான் ஏன் எப்போதும் தள்ளிப்போடுகிறேன், `என்னால் ஏன் எதையுமே சரியாகச் செய்ய முடிவதில்லை’ என்ற குற்றவுணர்வுக்கு ஆளாவதை நிறுத்துங்கள்.

கஷ்டமான வேலையை முதலில் எடுத்து முடித்துவிட்டால், மனதில் இருக்கும் பிரஷர் நீங்கி உற்சாகம் ஏற்படும். மற்ற வேலைகளை அந்த வேகத்திலேயே செய்து முடித்துவிடலாம்.