நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பல இடங்களில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒருசில இடங்களில் வெற்றி பெற்று பிற இடங்களில் முன்னிலையிலும் உள்ளது. விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, பாஜக, காங்கிரஸ், அமமுக போன்ற கட்சிகளும் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்றுள்ளன.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பேரூராட்சி 7 வது வார்டில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், 179 வாக்குகளை பெற்ற சுயேட்சை வேட்பாளர் பிரிதிவிராஜா வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பரூக் 149 வாக்குகளும் சுயேட்சை வேட்பாளர் அப்துல் கரீம் 135 வாக்குகளும் பெற்றனர்.
இதையும் படிங்க: ஒரு வாக்குக் கூட பெறாத மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்
மற்ற வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். நாம் தமிழர் சார்பில் போட்டியிட்ட பீர் முகமது 4 வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது இப்ராம்சா மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட தர்மராஜ் ஆகியோர் ஒரு வாக்கு கூட பெறவில்லை.
அதிமுக வேட்பாளர் முகமது இப்ராம்சாவின் அண்ணன் அதிமுகவில் கரம்பக்குடி நகர செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 19ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது இருவருமே வாக்கு செலுத்திய நிலையில், தற்போது அதிமுக வேட்பாளர் ஒரு வாக்குக் கூட பெறாது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: ரியாஸ் – புதுக்கோட்டை
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.