பட மூலாதாரம், Telegram
ஓமரின் பாஸ்போர்ட்டின் முனைகளில் தீ படர்வதையும், “இது நன்றாக எரிகிறது,” என்று ஒரு பெண் ரஷ்ய மொழியில் கூறுவதையும் அந்த வீடியோவில் கேட்க முடிகிறது.
சிரியாவை சேர்ந்த 26 வயதான ஓமர் ஒரு கட்டுமானத் தொழிலாளி. யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் முன்களத்தில் சுமார் ஒன்பது மாதங்களாக பணியில் இருந்தபோது தான் இந்த வீடியோ அவரது கைபேசிக்கு வந்தது.
அந்தப் பெண்ணின் குரல் அவருக்கு பரிச்சயமானதாக இருந்தது. அவர்தான் பொலினா அலெக்ஸாண்ட்ரோவ்னா அசார்னிக், அதிக ஊதியம் தரும் வேலை மற்றும் ரஷ்ய குடியுரிமை தருவதாக வாக்களித்து, ரஷ்யாவிற்காகப் போரிட தன்னை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தவர் என்று ஓமர் கூறுகிறார். ஆனால் இப்போது அவர் கோபமாக இருக்கிறார்.
யுக்ரேனிலிருந்து அனுப்பும் தொடர்ச்சியான குரல் பதிவுகளில் புனைப்பெயரில் பேசுகிறார் (பாதுகாப்பிற்காக). தான் எப்படி அந்தப் போர் மண்டலத்திற்குள் சிக்கினார் என்பதையும், அங்கு தான் அச்சத்தில் தவிப்பதையும் அவர் விவரிக்கிறார்.
3,000 டாலர் பணம் கொடுத்தால், போர் நடவடிக்கைகளில் ஈடுபடாத ஒரு பணியை உறுதி செய்வதாக அசார்னிக் தன்னிடம் வாக்களித்ததாக விவரிக்கும் ஓமர், வெறும் 10 நாட்கள் பயிற்சிக்குப் பிறகு தான் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டதாக கூறுகிறார். தான் பணம் கொடுக்க மறுத்தபோது, தனது பாஸ்போர்ட்டை அசார்னிக் எரித்துவிட்டதாகக் கூறுகிறார்.
போர் நடவடிக்கையில் பங்கேற்க மறுத்தபோது, தன்னைக் கொல்லப்போவதாகவோ அல்லது சிறையில் அடைப்பதாகவோ தனது தளபதிகள் மிரட்டியதாக அவர் விவரிக்கிறார்.
“நாங்கள் ஏமாற்றப்பட்டோம்… இந்தப் பெண் ஒரு மோசடிக்காரி மற்றும் பொய் பேசுபவர்,” என்கிறார் ஓமர்.
பட மூலாதாரம், Telegram
40 வயதான முன்னாள் ஆசிரியையான அசார்னிக், டெலிகிராம் சேனலைப் பயன்படுத்தி, ஏழ்மையான நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை ரஷ்ய ராணுவத்தில் சேர எவ்வாறு தூண்டுகிறார் என்பதை ‘பிபிசி ஐ’ புலனாய்வு பின்தொடர்ந்து ஆராய்ந்தது.
புன்னகை பூத்த முகத்துடன் வீடியோ செய்திகள் மற்றும் உற்சாகமான பதிவுகள் மூலம் அந்த முன்னாள் ஆசிரியை, “ராணுவச் சேவைக்காக” “ஓராண்டு ஒப்பந்தங்களை” வழங்குகிறார்.
ரஷ்ய ராணுவத்தில் சேர அந்த நாட்டிற்குள் நுழைவதற்கான “அழைப்பிதழ்” எனப்படும் ஆவணங்களை சுமார் 500 பேருக்கு அவர் வழங்கியுள்ளதை பிபிசி உலக சேவை கண்டறிந்துள்ளது. ராணுவத்தில் சேருவதற்காகத் தங்கள் பாஸ்போர்ட் விவரங்களை அவருக்கு அனுப்பிய – பெரும்பாலும் சிரியா, எகிப்து மற்றும் ஏமன் நாடுகளைச் சேர்ந்த – ஆண்களுக்கு இந்த ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
போர்முனைக்குச் செல்வதைத் தவிர்க்கலாம் என்று கூறி அசார்னிக் தங்களை தவறாக வழிநடத்தியதாகவும், ஓராண்டுக்குப் பிறகு பணியிலிருந்து வெளியேற முடியாது என்பதைத் தெளிவுபடுத்தத் தவறிவிட்டதாகவும், தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை அவர் மிரட்டியதாகவும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களும் அவர்களின் உறவினர்களும் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். பிபிசி அசார்னிக்-ஐ தொடர்பு கொண்டு இது பற்றி கேட்டபோது, அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
அவரால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு, தற்போது இறந்துவிட்ட அல்லது காணாமல் போன 12 இளைஞர்களின் குடும்பத்தினர் எங்களிடம் இது குறித்துப் பேசியுள்ளனர்.
பட மூலாதாரம், ANDREY BORODULIN/AFP via Getty Images
யுக்ரேனில் ராணுவ நடவடிக்கையைத் தொடர்வதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், ரஷ்யா தனது நாட்டிற்குள் கட்டாய ராணுவச் சேவையை விரிவுபடுத்தியுள்ளது, கைதிகளை ராணுவத்தில் சேர்ப்பதுடன், ராணுவத்தில் சேருபவர்களுக்கு அதிகப்படியான ஊக்கத்தொகைகளை வழங்கி வருகிறது.
நேட்டோ அமைப்பின் கூற்றுப்படி, 2022-இல் தொடங்கிய ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு 10 லட்சத்திற்கும் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர். இதில் 2025 டிசம்பர் மாதத்தில் மட்டும் 25,000 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மரண அறிவிப்புகள் மற்றும் பொதுவெளியில் கிடைக்கும் பிற இறப்புப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு ‘பிபிசி நியூஸ் ரஷ்யன்’ மேற்கொண்ட ஆய்வு, கடந்த ஆண்டில் யுக்ரேனில் ரஷ்யப் படைகளின் இழப்பு முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றது.
வெளிநாட்டைச் சேர்ந்த எவ்வளவு பேர் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்துள்ளனர் என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது கடினம். எனினும், உயிரிழந்த மற்றும் காயமடைந்த வெளிநாட்டினரின் எண்ணிக்கையை ஆய்வு செய்த ‘பிபிசி ரஷ்யன்’, கியூபா, நேபாளம் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளையும் சேர்த்து குறைந்தபட்சம் 20,000 பேர் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறது.
ரஷ்யாவைப் போலவே, யுக்ரேனும் குறிப்பிடத்தக்க அளவில் தனது படை வீரர்களை இழந்துள்ளது. மேலும், அதுவும் தனது படையில் வெளிநாட்டு வீரர்களைச் சேர்த்துக் கொண்டுள்ளது.
‘எங்கும் சடலங்கள்’
2024 மார்ச் மாதத்தில், ஓமர் மற்றும் சிரியாவை சேர்ந்த 14 பேர் மாஸ்கோ விமான நிலையத்தில் கையில் பணமின்றித் தவித்துக் கொண்டிருந்தபோதுதான் அசார்னிக்குடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.
சிரியாவில் வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பது மற்றும், குறைவான ஊதியம் காரணமாக இளைஞர்கள் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புகின்றனர். சிரியாவில் இருந்த ஒரு ஏஜென்ட், ரஷ்யாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களைப் பாதுகாக்கும் சிவிலியன் வேலை என்று கூறி இவர்களை மாஸ்கோவுக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால், அவர்கள் மாஸ்கோவிற்கு வந்த பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாக ஓமர் கூறுகிறார்.
ஏமாற்றப்பட்டவர்கள், வேறு வழிகளை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது, அந்தக் குழுவில் இருந்த ஒருவர் அசார்னிக்கின் டெலிகிராம் சேனலைக் கண்டு, அவருக்குச் செய்தி அனுப்பினார்.
சில மணிநேரங்களிலேயே விமான நிலையத்திற்கு வந்து அவர்களைச் சந்தித்த அசார்னிக், அவர்களை மேற்கு ரஷ்யாவின் பிரையன்ஸ்க் நகரில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு மையத்திற்கு ரயிலில் அழைத்துச் சென்றதாக ஓமர் கூறுகிறார்.
அங்கு, அவர்களுக்கு ரஷ்ய ராணுவத்துடன் ஓராண்டு காலம் பணியாற்றுவதற்கான ஒப்பந்தங்களை வழங்கினார். அதன்படி மாதச் சம்பளமாக சுமார் 2,500 அமெரிக்க டாலர் மற்றும் ஆரம்ப ஊக்கத்தொகையாக 5,000 அமெரிக்க டாலர் தருவதாகக் கூறினார். இந்த அளவுத் தொகையை சிரியாவில் அவர்களால் கனவில் கூட நினைக்க முடியாது.
தங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் ரஷ்ய மொழியில் இருந்ததாகவும், அங்கிருந்த யாருக்கும் ரஷ்ய மொழி புரியவில்லை என்றும் ஓமர் கூறுகிறார். ரஷ்ய குடியுரிமைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறிய அசார்னிக் அவர்களின் பாஸ்போர்ட்டுகளை வாங்கிக்கொண்டார். மேலும், அவர்களுக்குக் கொடுக்கப்படும் 5,000 டாலர் ஊக்கத்தொகையிலிருந்து தலா 3,000 டாலரை அவருக்குக் கொடுத்தால், அவர்கள் போர்முனைக்குச் செல்லாமல் தவிர்க்கலாம் என்று அவர் வாக்குறுதி அளித்ததாகவும் ஓமர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Roman Chop/Global Images Ukraine via Getty Images
ஆனால், பணியில் சேர்ந்த ஒரு மாதத்திற்குள்ளேயே, வெறும் 10 நாட்கள் மட்டுமே பயிற்சி கொடுக்கப்பட்டு, எந்தவிதமான ராணுவ அனுபவமுமின்றியும் தான் போர்முனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறுகிறார்.
பிபிசி புலனாய்வுக் குழுவிற்கு அவர் அனுப்பிய குரல் பதிவு ஒன்றில், “நாங்கள் இங்கே இறக்கப்போகிறோம் என்பது 100% உறுதி” என்று கூறுகிறார்.
“நிறைய காயங்கள், நிறைய வெடிப்புகள், இடைவிடாத எறிகணைத் தாக்குதல்களை சந்திக்கிறோம். வெடிப்பினால் இறக்கவில்லை என்றாலும், எங்கள் மீது வந்து விழும் வெடிப்புச் சிதறல்களால் இறந்துவிடுவோம்,” என்று 2024 மே மாதத்தில் அவர் தெரிவித்தார்.
அதற்கடுத்த மாதம் அவர் அனுப்பிய குரல் பதிவில், “எங்கு பார்த்தாலும் பிணங்கள்… நான் நடக்கும்போது சடலங்களை மிதித்துக் கொண்டு நடக்க வேண்டியிருக்கிறது, கடவுள் என்னை மன்னிக்கட்டும்,” என்று கூறுகிறார்.
“இங்கு யாராவது இறந்துவிட்டால், அவரை ஒரு பையில் போட்டு மரத்திற்கு அருகில் வீசிவிடுவார்கள். இதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்,” என்றும் அவர் கூறுகிறார்.
கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து, அசார்னிக் தன்னிடம் சொல்லாமல் விட்ட முக்கியமான விஷயம் ஒன்றை ஓமர் கண்டறிந்தார். 2022-ஆம் ஆண்டின் ரஷ்ய அரசாணைப்படி, போர் முடியும் வரை வீரர்களின் ஒப்பந்தங்களைத் தானாகவே நீட்டிக்கும் அதிகாரம் ரஷ்ய ராணுவத்திற்கு உள்ளது.
“அவர்கள் ஒப்பந்தத்தைப் புதுப்பித்தால், நான் அவ்வளவுதான் – கடவுளே,” என்று அவர் தெரிவித்திருந்தார். அவர் பயந்தது போலவே, அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.
‘பல்கலைக்கழகத்திலிருந்து ஆட்சேர்ப்பு’
அசார்னிக்கின் டெலிகிராம் சேனல் 21,000 சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. ரஷ்ய ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தங்கள் பாஸ்போர்ட்டின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைத் தனக்கு அனுப்புமாறு அவர் அடிக்கடி தனது பதிவுகளில் பதிவிட்டுள்ளார்.
அதன் பிறகு அவர் “அழைப்பிதழ்” ஆவணங்களை அந்த சேனலில் பதிவிடுவார்; சில நேரங்களில் அந்த ஆவணங்கள் யாருக்கானவை என்ற ஆண்களின் பெயர்ப் பட்டியலையும் அவர் வெளியிடுவார்.
கடந்த ஓராண்டில் ஏமன், சிரியா, எகிப்து, மொராக்கோ, இராக், ஐவரி கோஸ்ட், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆண்களுக்கு அவர் அனுப்பிய இது போன்ற 490-க்கும் மேற்பட்ட அழைப்பிதழ்களை பிபிசி கண்டறிந்துள்ளது.
அவரது பதிவுகள் “உயர்தர சர்வதேச பட்டாலியன்” ஒன்றிற்கான ஆட்சேர்ப்பு பற்றி குறிப்பிடுகின்றன. மேலும், விசா காலம் முடிந்தவர்கள் உட்பட ரஷ்யாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களும் இதில் சேரத் தகுதியுடையவர்கள் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பட மூலாதாரம், Telegram
அசார்னிக் மூலமாக ரஷ்ய ராணுவப் பணியில் சேர்ந்த ஓமர் உள்ளிட்ட 8 வெளிநாட்டினரிடமும், அதேபோல் காணாமல் போன அல்லது உயிரிழந்த 12 வீரர்களின் குடும்பத்தினரிடமும் பிபிசி பேசியது.
அசார்னிக் தங்களை தவறாக வழிநடத்தியதாக அல்லது சுரண்டியதாகப் பலர் உணர்ந்தனர். தாங்கள் ராணுவத்தில் சேருகிறோம் என்பது அந்த வீரர்களுக்குத் தெரிந்திருந்தது, ஆனால் போர்முனையில் பணியாற்ற வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் எங்களிடம் கூறினர். ஓமரைப் போலவே பலரும் தங்களுக்குப் போதுமான பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும், ஓராண்டில் ராணுவத்தில் இருந்து வெளியேறிவிடலாம் என்றும் நினைத்தனர்.
எகிப்தைச் சேர்ந்த யூசுப் (பாதுகாப்பு கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபிசியிடம் பேசுகையில், தனது மூத்த சகோதரர் முகமது 2022-ஆம் ஆண்டு ரஷ்யாவின் எகடெரின்பர்க்கில் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடங்கியதாகக் கூறினார்.
ஆனால் அவரால் கல்விக்கட்டணம் செலுத்த முடியாதபோது பொலினா (பொலினா அலெக்ஸாண்ட்ரோவ்னா அசார்னிக்) என்ற ரஷ்யப் பெண் இணையம் வழியாக அவருக்கு உதவிகள் வழங்கியதாகக் கூறுகிறார். ரஷ்ய ராணுவத்தில் இணையலாம் என்றும் அந்தப் பெண் சொன்னதுடன், வேலை பார்த்துக் கொண்டே தனது படிப்பைத் தொடரலாம் என்று முகமது நம்பியதாகவும் அவர் கூறுகிறார்.
“தங்குமிடம், குடியுரிமை மற்றும் மாதச் செலவுகளை முகமது பெறலாம் என்று அந்தப் பெண் உறுதியளித்தார்… ஆனால் திடீரென்று அவர் யுக்ரேனுக்கு அனுப்பப்பட்டார். தான் போர்க்களத்தில் இருப்பதை அங்குதான் அவர் உணர்ந்தார்,” என்கிறார் யூசுப்.
கடைசியாக ஜனவரி 24, 2024 அன்று முகமது தன்னை அழைத்ததாக யூசுப் கூறுகிறார். கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பிறகு, ரஷ்ய எண் ஒன்றில் இருந்து டெலிகிராமில் வந்த செய்தியில் முகமதுவின் உடலின் புகைப்படங்கள் இருந்தன என்று கூறும் அவர், தனது சகோதரர் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே கொல்லப்பட்டார் என்ற உண்மை அப்போது தான் குடும்பத்திற்கு தெரிய வந்தது என்று கூறுகிறார்.
‘மனநிலை பாதிப்பு’
“ரஷ்ய ராணுவத்தின் மிக முக்கியமான ஆள்சேர்ப்பு செய்பவர்களில் ஒருவராக அசார்னிக் மாறினார்,” என்று ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய மற்றொரு சிரிய நாட்டவரான ஹபீப் கூறுகிறார். வீடியோவில் பேச ஒப்புக்கொண்டாலும், பின்விளைவுகளுக்கு அஞ்சிய அவர் ஒரு புனைப்பெயரில் பேசினார்.
தானும் அசார்னிக்கும் “சுமார் மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவிற்கான விசா அழைப்பிதழ்களைத் தயாரிப்பதில் இணைந்து பணியாற்றினோம்” என்று ஹபீப் கூறுகிறார். இது குறித்து கூடுதல் விவரங்களை அவர் அளிக்கவில்லை, மேலும் அந்தச் செயல்பாட்டில் அவரது பங்கு என்ன என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. 2024 ஆம் ஆண்டு சமூக ஊடகங்களில் வெளியான ஒரு புகைப்படம், அவர் அசார்னிக்குடன் இருப்பதைக் காட்டுகிறது.
ரஷ்யாவின் தென்மேற்கு வோரோனேஸ் மாகாணத்தைச் சேர்ந்த அசார்னிக், 2024-இல் தனது டெலிகிராம் சேனலைத் தொடங்குவதற்கு முன்பு, அரபு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் மாஸ்கோவிற்கு வந்து படிப்பதற்கு உதவும் பேஸ்புக் குழு ஒன்றை நடத்தி வந்தார்.

பெரும்பாலான வெளிநாட்டு ஆட்கள், கட்டடங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது அல்லது சோதனைச் சாவடிகளில் நிற்பது போன்ற பணிகளை எதிர்பார்த்தே இங்கு வருவதாக கூறும் ஹபீப், “இங்கு வரும் அரேபியர்களில் பலர் உடனடியாக இறந்துவிடுகிறார்கள். பிணங்களைப் பார்ப்பது மிகவும் கடினமான ஒன்று – இதனால் சிலருக்கு மனநிலை பாதிப்பு ஏற்படுகிறது,” என்று தெரிவித்தார்.
ராணுவ பயிற்சி தளம் ஒன்றில் ஓமரையும், சிரிய நாட்டைச் சேர்ந்தக் குழுவையும் சந்தித்ததாக ஹபீப் கூறுகிறார். “அவர் (அசார்னிக்) அவர்களுக்குக் குடியுரிமை, கணிசமான சம்பளம் மற்றும் பாதுகாப்பு கிடைக்கும் என்று உறுதியளித்திருந்தார். ஆனால், இங்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டால், எந்த வழியிலும் வெளியேற முடியாது,” என்கிறார் ஹபீப்.
“அவர்களில் யாருக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தத் தெரியாது. அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டாலும், அவர்கள் திருப்பிச் சுடமாட்டார்கள்… திருப்பிச் சுடாவிட்டால், கொல்லப்படுவீர்கள்,” என்று அவர் கூறுகிறார். “அவர்கள் இறக்கப்போகிறார்கள் என்று தெரிந்தே பொலினா அவர்களை அழைத்து வந்தார்.”
மேலும் அவர் கூறுகையில், “ஒருவரை ராணுவத்தில் சேர்த்துவிட்டால் அதற்கு $300 தொகையை ராணுவம் வழங்கும்” என்கிறார். அசார்னிக்கின் மூலம் பணியமர்த்தப்பட்ட பலரும், அவர் தங்களை வேலைக்கு சேர்த்துவிட்டதற்காக பணம் பெற்றதாக நம்புவதாக எங்களிடம் கூறினாலும், பிபிசியால் இதைத் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.
பட மூலாதாரம், Telegram
‘எதுவும் இலவசமாக கிடைப்பதில்லை’
2024-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து அசார்னிக் பதிவிடும் தகவல்களில், ஆட்சேர்ப்பு செய்யப்படுபவர்கள் போரில் நேரடியாக ஈடுபடுவார்கள் என்றும், போரில் உயிரிழந்த வெளிநாட்டு வீரர்களைப் பற்றியும் அவர் குறிப்பிடத் தொடங்கினார்.
2024 அக்டோபரில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், “போருக்கு செல்கிறீர்கள் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஒன்றுமே செய்யாமல் ரஷ்ய பாஸ்போர்ட்டைப் பெற்றுக்கொண்டு, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வாழலாம் என்று நினைத்தீர்களா? இலவசமாக எதுவும் கிடைப்பதில்லை,” என்று அவர் கூறுகிறார்.
ராணுவத்தில் பணியாற்றிய வீரர் ஒருவரின் தாயாருக்கு அசார்னிக் அனுப்பிய குரல் பதிவை பிபிசி கேட்டது. அதில் அந்தத் தாய் “ரஷ்ய ராணுவத்தைப் பற்றி மோசமாக ஏதோ பதிவிட்டதாக” அசார்னிக் கூறுகிறார். தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி, அந்த மகனின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பதோடு, “உன்னையும் உனது மற்ற குழந்தைகளையும் நான் கண்டுபிடிப்பேன்” என்று அந்தப் பெண்ணை எச்சரிக்கிறார்.
அசார்னிக்கைத் தொடர்பு கொள்ள பிபிசி பலமுறை முயற்சித்தது. ஆரம்பத்தில், ரஷ்யாவிற்கு நேரில் வந்தால் பேட்டி அளிப்பதாக அவர் கூறினார், ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பிபிசி அதை மறுத்துவிட்டது.
பின்னர், ஒரு தொலைபேசி அழைப்பின் போது, ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு ‘போர் அல்லாத பணிகள்’ தருவதாக உறுதியளித்தது குறித்தக் குற்றச்சாட்டுகளைக் கேட்டபோது, அவர் அழைப்பைத் துண்டித்துவிட்டார்.
அதன் பிறகு அனுப்பிய குரல் பதிவுகளில், எங்களது பணி “தொழில்முறை சார்ந்தது அல்ல” என்றும், அவதூறு வழக்குப் போடப்போவதாகவும் மிரட்டினார். மேலும், “அந்த அரேபியர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளைத் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளட்டும்” என ஆபாசமான தொனியில் கூறினார்.
பிபிசி இது குறித்துக் கருத்து கேட்க ரஷ்ய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களைத் தொடர்பு கொண்டது, ஆனால் எந்தப் பதிலும் வரவில்லை.
முன்னதாக, 2022 மார்ச் மாதத்தில் ரஷ்ய அதிபர் புதின் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஆட்களைச் சேர்ப்பதை ஆதரித்துப் பேசினார். அவர்கள் பணத்திற்காக வரவில்லை, கொள்கை ரீதியாக வருகிறார்கள் என்று வாதிட்ட அவர், “பணத்திற்காக அல்லாமல், தாமாக முன்வந்து உதவி செய்ய விரும்பும் மக்கள் இருக்கிறார்கள்,” என்றார்.

‘பண ஊக்கத்தொகைகள்’
இந்த விவகாரத்தைப் பின்தொடரும் பத்திரிகையாளர்களும் ஆராய்ச்சியாளர்களும், அசார்னிக் போன்ற நபர்கள் ஒரு பெரிய முறையற்ற ஆட்சேர்ப்பு வலையமைப்பின் ஒரு அங்கமே என்று கூறுகின்றனர்.
ரஷ்ய ராணுவத்தில் சேர இதேபோன்ற சலுகைகளை வழங்கும் அரபு மொழியிலான மேலும் இரண்டு டெலிகிராம் கணக்குகளை பிபிசி கண்டறிந்துள்ளது. ஒன்றில் அழைப்பிதழ் ஆவணங்கள் மற்றும் பெயர்ப் பட்டியல்கள் உள்ளன, மற்றொன்று, உயர்தர பட்டாலியனில் சேருவதற்குப் பெரும் ஊக்கத்தொகைகள் தரப்படுவதாக விளம்பரப்படுத்துகிறது.
செப்டம்பர் மாதம், “மனிதக் கடத்தல் கும்பல்” ஒன்றை முறியடித்ததாக கென்ய காவல் துறை கூறியது. அந்தக் கும்பல் கென்யர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி, அவர்களை யுக்ரேனில் போரிட அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
போர் குறித்த ஆய்வுக்கான நிறுவனம் (Institute for the Study of War) அமைப்பின் ஆய்வாளர் கத்ரினா ஸ்டெபனென்கோ பிபிசியிடம் கூறுகையில், ரஷ்யாவில் உள்ள சில உள்ளூர் அதிகார அமைப்புகள், வெளிநாட்டினரையோ அல்லது ரஷ்யர்களையோ ராணுவத்தில் சேர்க்கும் மனிதவள நிபுணர்கள் அல்லது உள்ளூர்வாசிகளுக்கு நபர் ஒருவருக்கு 4,000 டாலர் வரை ஊக்கத்தொகை வழங்குவதாகத் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் வாக்னர் போன்ற தனியார் ராணுவக் குழுக்கள் மற்றும் சிறைச்சாலை அமைப்புகள் மூலம் ரஷ்ய அரசு ஆட்களைச் சேர்த்தது. 2024 முதல் உள்ளூர்வாசிகளையும் சிறிய நிறுவனங்களையும் ராணுவத்திற்கு ஆள் சேர்க்க பயன்படுத்தத் தொடங்கியுள்ளது என்று அவர் கூறுகிறார். “இதன் மூலம் பழைய ஆட்சேர்ப்பு முறைகள் தற்போது போதுமான பலனைத் தருவதில்லை என்பதை என்னால் உணர முடிகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஹபீப் தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதற்காக மேலும் பல தளபதிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு தற்போது மீண்டும் சிரியா திரும்பியுள்ளார். ஓமர் இறுதியில் ரஷ்ய குடியுரிமையைப் பெற்றதோடு, அவரும் எப்படியோ சிரியா திரும்பியுள்ளார். அவருடன் பணியாற்றிய சிரிய நாட்டினர் இருவர் உயிரிழந்துவிட்டதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
“அசார்னிக் எங்களை வெறும் எண்களாகவோ அல்லது பணமாகவோ மட்டுமே பார்க்கிறார் – மனிதர்களாக பார்க்கவில்லை. அவர் எங்களுக்குச் செய்தவற்றை நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்,” என்கிறார் ஓமர்.
கூடுதல் அறிக்கை: ஓல்கா இவ்ஷினா, கெஹாத் அப்பாஸ், அலி இப்ராஹிம், விக்டோரியா அரகேலியன், ரேயன் மரூஃப்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு