அவள் விகடன் நடத்தும் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் 11 ஊர்களில் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டியின் நடுவராக, தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா பொறுப்பேற்றுள்ளார். மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, கும்பகோணம், சேலம், புதுச்சேரியைத் தொடர்ந்து… வேலூரில் நவம்பர் 24-ம் தேதி இப்போட்டி நடைபெற்றது.
வேலூர், காட்பாடி மற்றும் அருகேயுள்ள ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை மற்றும் திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து பதின் வயதினரில் தொடங்கி 70 வயது முதியோர் வரை, ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பரவலாக சமைக்கப்படும் பாரம்பர்ய, சத்தான, விருப்பமான, ஆரோக்கியம் தரக்கூடிய உணவு வகைகளை அவர்கள் காட்சிப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. 80-க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்ற இப்போட்டியில், விதிமுறைப்படி முதல் சுற்றுக்கு வீட்டிலிருந்தே வகை வகையாக சமைத்துக் கொண்டு வந்திருந்திருந்தனர்.
அரங்கம் கமகமக்க வஞ்சிரம் மீன் புட்டு, வொயிட் சிக்கன் கிரேவி, ஷெஸ்வான் சிக்கன், பள்ளிபாளையம் சிக்கன், செட்டிநாடு சிக்கன், அசத்தலான இறால் தொக்கு, நெத்திலி கருவாடு தொக்கு, காடை வறுவல், மட்டன் ஷமி கபாப், கயிறு கட்டி மட்டன் கோலா உருண்டை, ருமாலி ரொட்டி, சீரக சம்பா மட்டன் பிரியாணி, கொங்குநாடு மட்டன் வெள்ளை பிரியாணி மற்றும் குடும்பத்தில் வழி வழியாகப் பின்பற்றப்படும் கம்மஞ்சோறு, கம்பங்களி, சாமை மோர் களி, பழையக் கஞ்சி, சாமை அரிசிப் பொங்கல், நவதானிய தோசை, உருளைக்கிழங்கு அல்வா, வெற்றிலை லட்டு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு சோமாஸ், வெந்தயக்கீரை சப்பாத்தி, பருப்பு பாயாசம், காஞ்சிபுரம் இட்லி, சம்பா இட்லி, பலாக்காய் வால்நட் சட்னி, பைனாப்பிள் ரசம், பைனாப்பிள் அல்வா, பீட்ரூட் சேமியா அல்வா, கயிறு கட்டி சைவ கோலா உருண்டை, நாவூறும் சுவையிலான உக்காரை ஸ்வீட், பன்னீர் கோவா ஜாமுன், தேங்காய்ப்பால் வெஜ் பிரியாணி, ராகி ஃபலூடா மட்டுமின்றி கொள்ளுப் பொடி, தேங்காய் இட்லி பொடி, பூண்டு பருப்புப் பொடி ஆகியவையும் முக்கிய இடம் பிடித்தன.