வெற்றியை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்துவோம்: ராமதாஸ் கடிதம்

Share

சென்னை: பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டு அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாகவும், மக்களுக்கான உரிமைகளை வென்றெடுத்துக் கொடுப்பதை முழு நேரப் பணியாகவும் கொண்டிருக்கும் கட்சியாகவும் திகழும் பா.ம.க, வரும் 16ம் தேதி 33 ஆண்டுகளை நிறைவு செய்து 34வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்கத் தருணத்தில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் முதன்மை நோக்கம் என்பது ஆட்சியைக் கைப்பற்றுவதும், அதன் மூலம் கிடைக்கும் அதிகாரத்தின் வழியாக மக்களுக்கு நன்மை செய்வதும் தான். பல கட்சிகள் ஆட்சிக்கு வந்திருக்கலாம்; ஆனால், வரலாற்றில் நிலைக்கும் அளவுக்கு அவர்களின் கணக்கில் சாதனைகள் இல்லை. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவில்லை; அதே நேரத்தில் அதன் கணக்கில் சாதனைகள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்களைக் கொண்ட இயக்கமும் பா.ம.க தான். பா.ம.க 34வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில் உங்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், ‘‘மக்களை சந்தியுங்கள், அவர்களின் தேவைகளை அறியுங்கள், அவர்களுக்காக போராடி கோரிக்கைகளை நிறைவேற்றித் தாருங்கள்’’ என்பதைத் தான். மக்களின் ஆதரவைப் பெறாமல் வெற்றி சாத்தியமல்ல. திண்ணைப் பிரசாரத்தின் மூலம் மக்களை அவர்கள் இடத்திற்கே சென்று சந்தியுங்கள். பா.ம.கவின் சாதனைகளை எடுத்துக் கூறி, அவர்களின் ஆதரவை உறுதி செய்யுங்கள். அவ்வாறு செய்தால், 2024 மக்களவைத் தேர்தலில் நமது வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com