வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
ஐஸ்கிரீம் சொன்னாலே உள்நாக்கும்ம் ஜில்லென்று இருக்கிறது. இறந்து புதைந்த சில அழகிய நினைவுகள் மீட்டெடுக்கப்படுகிறது. ஆம் குச்சி ஐஸ் கிரீம், பால் ஐஸ் கிரீம், சேமியா ஐஸ்கிரீம், ஆரஞ்சு ஐஸ் கிரீம். நினைத்தாலே ஜில்லுனு காதல் வருகிறதே!
இன்று எத்தனையோ பெரிய பெரிய உணவகங்களில் ஐஸ்கிரீம்களை சுவைத்தாலும் சிறு வயதில் முனுசாமி தாத்தாவின் ஐஸ் வண்டியில் தலையை விட்டு தேடி பிடித்தெடுத்தகுச்சி /சேமியா ஐஸை சாப்பிட்டதற்கு ஈடு வருமா?
கோடை காலம் வந்தாலே போதும்.. தினமுமே மதியம் சரியாக 12 மணிக்கு ஒரு பித்தளை மணியை ஆட்டிய படியே முனுசாமி தாத்தா ஐஸ் வண்டியை தள்ளிக் கொண்டு வருவார். உழைப்பில் கருத்த தேகம்.. வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை தலையில் சிகப்பு கலரில் முண்டாசு கட்டிக்கொண்டு… வாயெல்லாம் பல்லாக..வருவார்.
வீட்டில் எந்த வேலை எப்படி இருந்தாலும் அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி எட்டணாவை வாங்கிக் கொண்டு அவர் பின்னாலேயே ஓடி ஐஸ் வண்டியின் அருகில் சென்று தலையை விட்டு தேடி, பிடித்த ஐஸை எடுத்து (அதுவும் குறிப்பாக சேமியா ஐஸை) அந்த சேமியா ஐஸ் கரைந்ததுக்கு அப்புறம் சாப்பிடுவதற்கு பொறுமை இல்லாமல் அதை கடித்தே சாப்பிட்டது… சாப்பிடும் போது எதிர்வீட்டு கஸ்தூரி வந்ததால் அவளுக்கும் ஒன்று வாங்கி கொடுத்து இருவரும் திண்ணையில் அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டு கதை பேசியதெல்லாம் பொற்காலம்.