சில எடை குறைப்பு டயட்களில், `முழுதானியங்களைச் சேர்க்க வேண்டாம்’ என்பார்கள். ஆனால், முழுதானியங்களில் பி – காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் உள்ளிட்ட முக்கியமான உயிர்ச்சத்துகள் நிறைந்துள்ளன என்பதால், வீகன் டயட்டில் ஓரளவு அவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
வீகன் டயட் பிரமிடில் முழுதானியங்கள் ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து கப் என்று இருந்தால், எடை குறைக்க விரும்புபவர்கள் குறைந்தபட்ச அளவான மூன்று கப்களையே எடுத்துக்கொள்ள வேண்டும்.
தீட்டப்பட்ட தானியங்களோடு ஒப்பிடும்போது, முழுதானியங்களில் பலன்கள் அதிகம். முழுதானியங்களில், ஆரோக்கியமான காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்கள் உள்ளன. இவை ரத்தத்தில் மெதுவாகக் கலந்து, உடலுக்குத் தேவையான குளுக்கோஸை சிறிது சிறிதாகவே அளிக்கின்றன. இதனால், ரத்த சர்க்கரை அளவு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு, எடை குறைப்பு நிகழ்வதோடு, செரிமானமும் மேம்படும்.
முட்டைகோஸ் போன்ற இலைக்காய்கறிகளை நிறையவே எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றில் நிறைந்துள்ள கால்சியம் எடை குறைப்புக்கு மிகவும் அவசியம்.
தினசரி 6 -12 டம்ளர் தண்ணீர் பருகுங்கள். உணவில் உள்ள நார்ச்சத்து முழுமையாகச் செயல்படத் தண்ணீர் மிகவும் அவசியம். நீர்ச்சத்து நிறைந்த பூசணிக்காய், செளசெள, சுரைக்காய், தர்பூசணி போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லது. உடலுக்கு நட்ஸ் மிகவும் அவசியம். அவற்றில் வீகன் புரோட்டீன் நிறைந்துள்ளது.
வறுக்கப்பட்ட நட்ஸ் சுவையானது மட்டும் அல்ல… உடலில் புரதத்தையும் சற்று அதிகரிக்கும். எனவே, வறுக்கப்பட்ட, வறுபடாத நட்ஸ் இரண்டையுமே சாப்பிடலாம்.
எடை குறைப்புதான் இலக்கு எனில், தினசரி கால் கப் நட்ஸுக்கு மேல் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வீகன் டயட்டில் எடை குறைப்பு என்பது உடற்பயிற்சி இல்லாமல் முழுமையடைவது இல்லை. தினசரி அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது எடை குறைப்புக்கு உதவக்கூடிய சரியான வழி.
10 நிமிடங்கள் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி, 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது ஏதேனும் உடற்பயிற்சி செய்வது நல்லது. ஏரோபிக்ஸ், சைக்கிளிங், டிரெட் மில் பயிற்சிகளும் செய்யலாம்.