வித்தியாசமான சுவைகளில் பொங்கல்! – இல்லத்தரசி பகிர்வு | My Vikatan

Share

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

பொங்கல்..

குழையக் குழைய, நெய்யும் மிளகு சீரகமும் மணக்க, முந்திரி மிதக்க பொங்கல் சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது ? பொங்கல் செய்வது என்பது ஒரு கலை.. கஞ்சி மாதிரி ரொம்ப குழையக் கூடாது. அதேசமயம் பிரைட் ரைஸ் மாதிரி உதிரி உதிரியாகவும் இருக்கக் கூடாது வாழை இலையில் சுடச்சுட வைத்தால் ஓடக்கூடாது .மொத்தத்தில் பொங்கல் பொங்கலாக(வெண்ணெய் போல்) இருக்க வேண்டும் சரியான அளவில் தண்ணீர் ஊற்றி வேகவிட்டு .. (லேசா மசித்து )வாணலியில் மிளகு சீரகம். பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை முந்திரி எல்லாம் தாளித்துக் கொட்டி , (தேங்காய் சட்டினி அல்லது தேங்காய் துவையல் , கத்தரி கொத்ஸூடன்) வீட்டில் உள்ளவர்களுக்கு பிடித்த சைட் டிஷ் உடன் அன்போடு பரிமாற பொங்கல் கடகடவென்று உள்ளே செல்லும்.

பொங்கல் பிடிக்கிறது என்பதற்காக எப்பவும் ஒரே விதமான அரிசி பொங்கல் தான் செய்ய வேண்டும் என்பதில்லை விதவிதமாக பொங்கல் செய்யலாம் இதோ சில வித்தியாசமான சுவைகளில் பொங்கல் ..

பொங்கல்

*கோதுமை ரவை ஒரு கப்

பாசிப்பருப்பு அரை கப்

இரண்டையும் தனித்தனியே ஒரு டீஸ்பூன் நெய் விட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை தனியே வேக வைக்கவும் . பருப்பு மலர வந்ததும் அதில் உள்ள தண்ணீர் ஒன்றரை கப் மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் .

சிறிதளவு நெய்யை காய வைத்து தேவையான அளவு(பொடித்த) முந்திரியை சேர்த்து சிவந்ததும், பருப்பு (தண்ணீருடன்) 2கப் பால் சேர்க்கவும். கொதிக்கும் பொழுது ரவையை சேர்க்கவும். ஐந்து நிமிடம் நன்கு கிளறி தீயைக் குறைத்து மூடி போட்டு நன்கு வேக விடவும் .

நன்கு வெந்ததும் 2கப்(சுத்தமான)பொடித்த வெல்லம் சேர்த்து தீயை அதிகரிக்கவும். இது இளகினாற்போல் தளதளவென்று ஆகி மீண்டும் சேர்ந்தாற் போல் வரும் பொழுது கால்டீஸ்பூன் ஏலக்காய் தூள் சிறிதளவு நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையில் அசத்தும் இந்த கோதுமை ரவை பொங்கல்.

*வெஜிடபிள் பொங்கல்

பச்சரிசி- ஒரு கப், பாசிப்பருப்பு- அரை கப் விருப்பமான காய்கறிகள் பொடியாக நறுக்கியது -ஒரு கப், பெரிய வெங்காயம்- ஒன்று, தக்காளி- ஒன்று, இஞ்சி -சிறு துண்டு ,கறிவேப்பிலை சிறிதளவு ,நெய் ஒரு டேபிள் ஸ்பூன் பெருங்காயம் அரை டீஸ்பூன் உப்பு தேவையான அளவு.

தாளிக்க: மிளகு ,சீரகம் தலா- ஒரு டீஸ்பூன் ,பட்டை -ஒரு துண்டு ,லவங்கம் ஒன்று ,ஏலக்காய்- ஒன்று ,நெய் -இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சிறிதளவு.

பொங்கல்

அரிசி மற்றும் பருப்பை ஒன்றாக கழுவி ஆறரை கப் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் சேர்க்கவும் .சிறு தீயில் நன்கு வேக விடவும். பாதி அளவு வெந்ததும் நெய், பெருங்காயம் தேவையான உப்பு ,கறிவேப்பிலை சேர்த்து நன்கு வேக விடவும். வெங்காயம் ,தக்காளி ,இஞ்சியை பொடியாக நறுக்கவும் .நெய் எண்ணெய் காய வைத்து மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி காய்கறி கலவையை சேர்க்கவும் .(சிறிது உப்பு சேர்த்துகொள்ளவும்) நன்கு வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். இரண்டு நிமிடம் நன்கு வதக்கி காய் வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி சுட சுட பரிமாறவும்.

சுவையில் அசத்தும் இந்த வெஜிடபிள் பொங்கல். வயிறும் மனசும் நிரம்பும்.

*இளநீர் பொங்கல்

ஒரு கப் பச்சரிசி ,கால் கப் பாசிப்பருப்பு இரண்டையும் நன்கு கழுவி மூன்று கப் பாலுடன் மூன்றுகப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். நன்கு கொதி வந்ததும் அரிசி, பருப்பை சேர்த்து குழைய வேக வைக்கவும். நன்கு வெந்ததும் ஒன்றரைகப் சர்க்கரை, ஒரு கப் தேங்காய் பால் சேர்க்கவும். சற்று இளகி ,மீண்டும் சேர்ந்தாற் போல் வரும் வரை நன்கு கிளறவும். பிறகு பொடியாக நறுக்கிய இளநீரிலுள்ள வழுக்கை அரைக்கப், நெய் 2டேபிள்ஸ்பூன், கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும். வித்தியாசமான சுவையில் அசத்தும் இந்த இளநீர் பொங்கல்.

இளநீர்

*அன்னாசி பொங்கல்
பச்சரிசி -ஒரு கப், பால்- நான்கு கப், சர்க்கரை -ஒரு கப், அன்னாசிப்பழத் துண்டுகள் -அரைக்கப் (பொடியாக நறுக்கியது )கன்டன்ஸ்டு பால்- கால் கப் பைனாப்பிள் எசென்ஸ் -ஒரு டீஸ்பூன் நெய்- 2 டேபிள் ஸ்பூன்.
அரிசியை நன்கு கழுவி கொள்ளவும் பாலுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு கொதித்ததும் அரிசியை சேர்க்கவும். சிறு தீயில் குறைய வேக விடவும் .பொடியாக நறுக்கிய அன்னாசி பழத்துண்டுகளை சிறிது சர்க்கரை சேர்த்து பிசறி வைக்கவும். வெந்த சாதக் கலவையில்இந்த பழத்துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும். அத்துடன் கண்டன்ஸ்டு பால்+நெய்+பைனாப்பிள் எசென்ஸ் சேர்த்து நன்கு கிளறி இறக்கி சூடாக பரிமாறவும்.

செம டேஸ்டாக இருக்கும் இந்த பொங்கல்.
*பச்சரிசி குருணை மசால் பொங்கல்
பச்சரிசி குருணை- ஒரு கப் ,பாசிப்பருப்பு -அரை கப் ,பால்- 2 கப் பெரிய வெங்காயம்- ஒன்று, இஞ்சி- சிறு துண்டு, பூண்டு- நாலு பல், பச்சை மிளகாய் -இரண்டு, மிளகு, சீரக பொடி- ஒரு டீஸ்பூன் ,கறிவேப்பிலை -ஒரு ஆர்க்கு. தாளிக்க :கடுகு -அரை டீஸ்பூன் கறிவேப்பிலை- சிறிதளவு, நெய் 2 டேபிள் ஸ்பூன்.

பச்சரிசி

பச்சரிசி குருணையையும், பாசிப்பருப்பையும் தனித்தனியே வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு 5 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் குருணையையும், பருப்பையும் சேர்த்து சிறு தீயில் நன்கு வேக விடவும் .குருணை நன்கு வெந்த பிறகு பாலை சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பூண்டு ,கீறிய பச்சை மிளகாய் ,உப்பு சேர்த்து நன்கு வேக விடவும் .அதில் மிளகு சீரகப் பொடியைப் போட்டு கிளறி, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கி சூடாக பரிமாறவும். எளிதில் ஜீரணிக்கும் அருமையான பொங்கல் இது.தொட்டுக்கொள்ள கத்தரி, முருங்கை, மாங்காய், போட்டு செயத சாம்பார்…செம காம்பினேஷன்.
இப்படி தினம் தினம் வித்தியாசமாக பொங்கல் செய்து அசத்துங்கள்.

வாழ்க்கையை மகிழ்ச்சியாக  வாழுங்கள்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com