வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படம், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், நடிகர் சூரியின் நடிப்பைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஒரு நடிகராக சூரி வேறொரு பரிமாணத்திற்குச் சென்றுவிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் நேர்மறையான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும், பத்திரிக்கையாளர்களும்கூட சூரியின் நடிப்பு குறித்து மிகவும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
”இந்தப் படத்தில் நடித்திருக்கும் சூரி, திரையுலக வாழ்வில் வேறொரு படிநிலை பாய்ச்சலுக்கு சென்றிருக்கிறார்,” என சீமான் கூறியுள்ளார்.
படத்தின் கதை என்ன?
அருமபுரி என்ற மலைக்கிராமத்தில் சுரங்கம் அமைக்க அரசு திட்டமிடுகிறது. ஆனால், அந்தச் சுரங்கத்தை எதிர்த்து பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதி தலைமையிலான மக்கள் படை என்ற அமைப்பு ஆயுதம் தாங்கிப் போராடுகிறது.
அந்த அமைப்பை வழிநடத்தும் விஜய் சேதுபதியைக் கைது செய்யச் செல்லும் காவல்துறை குழுவில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றுகிறார் குமரேசன் கதாப்பாத்திரத்தில் வரும் சூரி.
உயரதிகாரியின் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் சூரிக்கு, அவரது உயரதிகாரியால் மெமோ கொடுக்கப்படுகிறது. தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் பணியில் இருக்கப் போராடும் சூரிக்கு என்ன ஆனது? விஜய் சேதுபதி பிடிபட்டாரா? சூரிக்கும் விஜய் சேதுபதிக்கும் என்ன தொடர்பு? இதுதான் படத்தின் மீதிக் கதை.
அரசியல் தலைவர்கள் பாராட்டு
விடுதலை திரைப்படம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ உலக சினிமா அளவிற்கு படம் எடுப்பதற்கு, நம்மிடமும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தத் திரைப்படம் நிரூபித்திருக்கிறது. இதுவொரு திரைக்கதை மட்டுமல்ல, நெடுங்காலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் சுமக்கும் ஒரு கனத்த உணர்வு என்றுதான் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்தப் படத்தில் நடித்திருக்கும் சூரி, திரையுலக வாழ்வில் வேறொரு படிநிலை பாய்ச்சலுக்கு சென்றிருக்கிறார். இதற்கு முன்னால் நீங்கள் பார்த்த சூரியை இந்த திரைப்படத்தில் காண முடியாது” என்று சூரியின் நடிப்பு குறித்தும் பாராட்டினார்.
அதேபோல் இத்திரைப்படம் குறித்து தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் விசிக தலைவர் திருமாவளவன், “அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது,” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், “வெற்றிமாறன் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார்.
மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரை நட்சத்திரங்கள் என்ன சொல்கிறார்கள்
“இந்தத் திரைப்படத்தில் நடிகர் சூரியிடம் வெளிப்பட்டிருக்கும் நடிப்பு ஒரு சாதாரண மாற்றம் அல்ல, அது ஒரு பரிணாம வளர்ச்சி” என்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவர் ட்விட்டர் பதிவில், “இதை சாதாரண மாற்றம் என்று மட்டும் கூறிவிட முடியாது. இது சூரியின் பரிணாம வளர்ச்சி. அவர் மீது நம்பிக்கை வைத்து இத்திரைப்படத்தை உருவாக்கியதற்கும், அவருக்கு இப்படியான ஒரு பாதையை வகுத்துக் கொடுத்ததற்கும் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியை குறிப்பிட்டு, “அண்ணா நீங்கள் இல்லாமல் தமிழ் சினிமா ஒரு அடி முன்னால் செல்லாது என்ற நிலையை உருவாக்கியதற்கு உங்களுக்கு ஒரு சல்யூட்” என்றும் கூறியுள்ளார்.
குணச்சித்திர நடிகரான கயல் தேவராஜ், “விடுதலை திரைப்படத்தினுடைய கதையின் நாயகனாக சூரியின் முகவரி சொல்லும்,” என்று கூறியுள்ளார்.
“நீ படிப்படியாய் முன்னுக்கு வந்தவன். நகைச்சுவையில் வெற்றிக்கொடி பறக்கவிட்டாய். இன்று விடுதலை திரைப்படத்தில் உனது எதிர்கால லட்சியங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். விடுதலை முதல் பாகத்தினுடைய கதையின் நாயகனாக உன் முகவரி சொல்லும். வெற்றி, வெற்றி” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
“அதேபோல் விடுதலை திரைப்படம் மாபெரும் வெற்றி பெறவேண்டும்,” என்று நடிகர் கார்த்தி ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார்.
படம் வெளியாவதற்குச் சில வாரங்கள் முன்னதாக விடுதலை திரைப்படத்தின் புகைப்படங்களைத் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்த இயக்குநர் சுதா கொங்காரா, “விடுதலை திரைப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு என்று என் நண்பர் சொன்னதால், அதைக் காண வந்திருக்கிறேன்” என்று பதிவிட்டு இப்படம் வெளியாவது குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
சினிமா விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்
விடுதலை திரைப்படம் குறித்து விமர்சித்திருக்கும் ஊடகவியலாளர் பரத்வாஜ்ரங்கன், “விசாரணை திரைப்படம் அளவிற்கு இந்தப் படம் வலிமையாக இல்லை,” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டரில், “விசாரணை திரைப்படத்தில் காணப்பட்ட அந்த வலிமையான சக்தி, விடுதலையில் இல்லை. ஆனால் இது நிச்சயமாக அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் பிரபல யூடியூப் திரைப்பட விமர்சகரான பிரசாத் ரங்கசாமி, “விடுதலை, தமிழ் சினிமாவின் மணி மகுடத்தில் ஏறியிருக்கும் மற்றொரு வைரம். நடிகர் சூரிக்கு எனது அன்பும் மரியாதையும். இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய இதயத்தில் இருப்பதை, சினிமாவின் மூலம் பேசுகிறார்,” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சினிமா ஊடகவியலாளரான கவிதா, “நடிகர் சூரிக்கு சல்யூட். விடுதலை திரைப்படத்தின் குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.
சூரியின் நடிப்பை வியக்கும் ரசிகர்கள்
சூரியின் நடிப்பை சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சூரியின் சினிமா பயணத்தில் விடுதலை திரைப்படம் ஒரு பெரும் மைல்கல்லாக அமைந்துள்ளது என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.
“நடிகர் சூரிக்கு அவரின் மொத்த வாழ்நாளுக்கான வாய்ப்பாக விடுதலை திரைப்படம் அமைந்துள்ளது. விஜய் சேதுபதிக்காக முக்கியமான காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது வெற்றிமாறனின் மிகச் சிறந்த படம் அல்ல. ஆனால் இதுவொரு நல்ல திரைப்படம்,” என்று ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
அதேபோல், ”சூரியின் வெள்ளந்தித்தனமான இயல்பான நடிப்பு, அவரின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. நேர்மையான காவல்துறை அதிகாரியாய் அருமையான நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்,” என்று மற்றொரு ட்விட்டர் பயனர் ஒருவரும் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: