பட மூலாதாரம், Getty Images
வியாழக்கிழமை (2025 ஜூன் 12) ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி மற்றும் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
ரூபானிக்கு 68 வயது, அவர் தனது மகளைப் பார்ப்பதற்காக லண்டன் சென்று கொண்டிருந்தார் என அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு மனைவி அஞ்சலி, மகள் ராதிகா மற்றும் மகன் ருஷப் இருக்கின்றனர்.
குஜராத்தில் பெரும் குழப்பம் நிலவியபோது விஜய் ரூபானி முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற பின்னர், நரேந்திர மோதி பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். அதனால் அவர் குஜராத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். நரேந்திர மோதியின் விசுவாசியான ஆனந்திபென் படேல் குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
ஆனால் ஆனந்திபென் குஜராத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஓர் ஆண்டுக்குள், தங்களுக்கு அரசுப் பணிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சக்தி வாய்ந்த பட்டிதார் சமூகத்தைச் சார்ந்த ஒரு பிரிவினர் போராட்டத்தைத் தொடங்கினர்.
போராட்டத்தின் மையக்கரு, “பாரதிய ஜனதா தலைமையிலான அரசு பட்டிதார் இன மக்களுக்கு அநீதி இழைக்கிறது,” என்பதாக இருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஹர்திக் பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் தோற்கடிக்கப்படவேண்டும் என வலியுறுத்தினர்.
இதன் காரணமாக 2015இல் மாவட்ட பஞ்சாயத்துகள், தாலுகா பஞ்சயாத்துகள் மற்றும் நகராட்சிகளுக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தது. அதேநேரம் காங்கிரஸ் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியை ருசித்தது.
பட மூலாதாரம், Getty Images
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் இந்த இயக்கத்தின் தலைவர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டனர்.
இதைப் போன்ற சூழ்நிலையில், 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில் குஜராத் மாநில பாரதிய ஜனதாவின் தலைவராக ஆர்.சி.ஃபால்டுவுக்கு பதிலாக விஜய் ரூபானி நியமிக்கப்பட்டார்.
ஃபால்டு ஒரு பட்டிதார் தலைவர், அதே நேரம் ரூபானி ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் பாஜக அமைப்பின் தலைவர் மாற்றப்பட்டாலும், குஜராத்தின் ஆளும் கட்சியும், அதன் அரசும் , பட்டிதார் இட ஒதுக்கீடு போராட்டத்தை அடக்குவதற்கும் அதன் அரசியல் தாக்கத்தை சமாளிக்கவும் முடியாமல் திணறுவதாகத் தோன்றியது.
இறுதியில் ஆனந்திபென் படேல் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். குஜராத்தின் முதல்வராக பாரதிய ஜனதா கட்சி விஜய் ரூபானியை 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி தேர்ந்தேடுத்தது.
பட்டிதார் சமூகத்தினரின் போராட்டம் ஓய்வதற்கான எந்த அடையாளமும் இல்லாமல், சட்டப்பேரவை தேர்தல்களுக்கு ஒன்றரை வருடமே இருந்த நிலையில் ரூபானிக்கு குஜராத்தின் தலைமைப் பதவி அளிக்கப்பட்டது.
“பாரதிய ஜனதாவின் மாநில மற்றும் தேசிய தலைவர்களின் எண்ணத்திற்கு எதிராக, ஆனந்திபென் படேல் எந்தக் காரணத்திற்காகவும் பதவி விலகத் தயாராக இல்லை. இறுதியாக ஒரு கட்டத்தில், ஒன்று 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றியை உறுதி செய்ய வேண்டும் அல்லது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஆனந்தி பென் படேலிடம் சொல்லப்பட்டது.
பாரதிய ஜனதாவின் வெற்றியை உறுதி செய்யும் நிலையில் ஆனந்திபென் இருக்கவில்லை. அதனால் அவர் மிகுந்த எதிர்ப்போடு குஜராத் முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தார்,” என முதலமைச்சர் மாற்றத்திற்குப் பிறகு ஒரு மூத்த பாஜக தலைவர் இந்த செய்தியாளரிடம் தெரிவித்திருந்தார்.
விஜய் ரூபானியை முதலமைச்சர் ஆக்கிய பின்னர், பாவ்நகர் மேற்கு தொகுதி எம்எல்ஏ ஜிட்டு வஹானியை புதிய பாஜக மாநிலத் தலைவராக நியமித்தது பாரதிய ஜனதா கட்சி.
ஆனந்திபென் மற்றும் ஃபால்டுவை போல வஹானியும் பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். பட்டிதார் சமூகத்தினர் குஜராத் அரசியலில் கடந்த 25 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் ஆன பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ரூபானி, தான் ஒரு 20-20 போட்டியில் விளையாட வந்திருப்பதாகவும், இறங்கி ஆடப் போவதாகவும் கூறினார்.
பட்டிதார் இடஒதுக்கீடு போராட்டத்தின் நிழலில் நடைபெற்ற 2017 சன்றமன்றத் தேர்தலில், விஜய் ரூபானியை தனது முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி பாரதிய ஜனதா கட்சி களம் கண்டது.
மோதியும், பிற தலைவர்களும் தீவிரமாகப் பிரசாரம் செய்தனர். ஆனால், குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க இது காங்கிரஸுக்கு சிறந்த சந்தர்ப்பம், இதைத் தவறாவிட்டால் அதற்குப் பிறகு மீண்டும் இதுபோன்ற ஒரு வாய்ப்பு எப்போது கிடைக்கும் எனச் சொல்ல முடியாது என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் பரேஷ் தனானி இந்த செய்தியாளரிடம் தெரிவித்திருந்தார்.
கடினமான காலகட்டத்தில் பாஜகவை வெற்றிக்கு இட்டுச் சென்றார்
கடந்த 2015ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி மற்றும் பட்டிதார் இயக்கம் அதற்கு ஆதரவாக இருப்பதாகத் தோன்றிய நிலையில், 2017 டிசம்பரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு எதிர்க்கட்சி கடுமையான போட்டியைக் கொடுத்தது.
இருப்பினும் ரூபானியின் தலைமையில் பாஜக குஜராத்தில் அதிகாரத்தை தக்க வைத்துக்கொண்டது. ஆனாலும் 182 தொகுதிகளில் அந்தக் கட்சியால் 99 தொகுதிகளில்தான் வெற்றி பெற முடிந்தது.
கடந்த 1995ஆம் ஆண்டு குஜராத்தில் ஆட்சியைப் பிடித்த பிறகு பாஜக வென்ற மிகக் குறைந்த தொகுதிகள் அவைதான். காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது, அதன் கூட்டணிக் கட்சியான பாரதிய டிரைபல் பார்டி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அப்போது காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானியும் வெற்றி பெற்றார். அதே போல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கந்த்லால் ஜடேஜாவும் குட்டியானா தொகுதியில் இருந்து வெற்றி பெற்று எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கையை 81 ஆக உயர்த்தினார். இது பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையைவிட 11 தான் குறைவு.
தேர்தலில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, பாஜக விஜய் ரூபானியை மீண்டும் முதலமைச்சர் ஆக்கியது. ரூபானி இரண்டாவது முறையாக முதலமைச்சரான பிறகு அவர் கட்சியைப் பலப்படுத்த முயற்சி மேற்கொண்டு காங்கிரஸ் கட்சியின் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குன்வார்ஜி பவ்லியா மற்றும் ஜவஹர் சவ்தா போன்ற பெரிய தலைவர்களை கட்சிக்குள் கொண்டு வந்து அவர்களைத் தனது அமைச்சரவையிலும் சேர்த்துக்கொண்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளையும் தக்கவைத்துக் கொண்டு 2014 தேர்தல் முடிவை மீண்டும் கொடுத்தது. 2015ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் சந்தித்த தோல்விகளில் இருந்தும் 2021இல் காவிக் கட்சி மீண்டு வந்தது.
முதலமைச்சராக பதவி வகித்த ஆண்டுகள்
பட மூலாதாரம், Getty Images
ரூபானி முதலமைச்சராக இருந்த காலத்தில் பாஜக அரசு குஜராத் முறைப்படுத்தப்பட்ட குற்றங்கள் மற்றும் பயங்கரவாத கட்டுப்பாட்டு சட்டம் (Gujarat Control of Terrorism and Organized Crime (GujCTOC) Act மற்றும் குஜராத் நில ஆக்கிரமிப்பு (தடுப்பு) சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றியதுடன் மதுவிலக்கு சட்டம் மற்றும் பசுப் பாதுகாப்பு சட்டம் ஆகிவற்றை மேலும் கடுமையாக்கியது.
மாணவர்களிடம் இருந்து தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கான சட்டதையும் அந்த அரசு கொண்டு வந்து ஒரு புதிய முன்னெடுப்பைச் செய்தது.
“அவர் முதலமைச்சராக இருந்தபோது நர்மதா நதியின் வெள்ள நீரை தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள செளராஷ்டிராவில் உள்ள 115 அணைகளுக்கு ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு செல்லும் மோதியின் கனவுத் திட்டமான செளராஷ்ட்ரா நர்மதா அவதாரம் பாசன(சானி) திட்டத்தின் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, செளராஷ்டிராவின் தண்ணீர் பிரச்னை ஓரளவு தீர்ந்தது.
அதேபோல் ராஜ்கோடில் எய்ம்ஸ் கட்டப்பட்டது. அவரது ஆட்சிக் காலத்தின்போது தற்போது ராஜ்கோட் சர்வதேச விமான நிலையம் என அழைக்கப்படும் புதிய விமான நிலையத்திற்கான பணிகள் ராஜ்கோட்டின் புறநகர் பகுதியான ஹிராசர் கிரமத்தில் தொடங்கி அதன் பெரும்பகுதி வேலைகள் முடிக்கப்பட்டன, ராஜ்கோட்டில் இருந்து, ஆமதாபாத் வரையான நெடுஞ்சாலையை ஆறுவழிச் சாலையாக மாற்றும் பணிகளும் தொடங்கின.
கடந்த 2017இல் நர்மதா ஆற்றின் நீரை ராஜ்கோட்டின் ஆஜி அணைக்கு பம்ப் செய்து அனுப்புவதற்காக சுரேந்திரநகர் மற்றும் ராஜ்கோட் இடையே போர்க்கால அடிப்படையில் குழாய் அமைக்கப்பட்டு ராஜ்கோட்டின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டது.
குஜராத்தின் செளராஷ்ட்ரா பகுதிக்கு நியாயம் செய்த முதலமைச்சர்களின் பட்டியலை எடுத்தால் அதில் விஜய் ரூபானியின் பெயர் முன்னாள் குஜராத் முதலமைச்சர் கேஷுபாய் படேலின் பெயருக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக இடம்பெறும். செளராஷ்டிராவுக்கு அதிகம் சாதகமாகச் செயல்படுகிறார் என்ற விமர்சனங்களையெல்லாம் பொறுத்துக்கொண்டு அவர் இந்தத் திட்டங்களை நிறைவேற்றினார்,” என்கிறார் ராஜ்கோட்டை சேர்ந்த மூத்த பத்திரிகையாயளர் கெளசிக் மேத்தா.
முதலமைச்சர் பதவியிலிருந்து மொத்தமாக நீக்கம்
பட மூலாதாரம், Getty Images
இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பதவியில் இருந்து 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி ரூபானி பதவி விலகினார். அவருக்குப் பதிலாக பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்த புபேந்திர படேல் முதலமைச்சரானார்.
இந்த செய்தியாளருக்கு 2022ஆம் ஆண்டி அளித்த நேர்காணலில், பாஜகவின் தேசிய அளவிலான தலைவர்களில் ஒருவர் செப்டம்பர் 10ஆம் தேதிதான் பதவி விலக வேண்டும் எனக் கூறியதாகவும், கட்சி மேலிடத்தின் உத்தரவை மதித்து அடுத்த நாள் ராஜினாமா செய்ததாக ரூபானி தெரிவித்திருந்தார்.
“எனது ராஜினாமாவுக்கு எனக்கு எந்தக் காரணமும் சொல்லப்படவில்லை, நானும் எந்தக் காரணமும் கேட்கவில்லை,” என ரூபானி சொல்லியிருந்தார்.
பதவி விலகிய ஒரு வாரத்திற்குப் பிறகு ராஜ்கோட்டில் உள்ள பிரமுக் சுவாமி அரங்கில் பாஜக தொண்டர்களிடம் உரையாற்றிய ரூபானி, “நான் முதல்வராக இல்லாதபோதும் நான் ஒரு சராசரி மனிதனாக இருந்தேன், நான் முதல்வராக இருந்தபோதும் நான் சராசரி மனிதனாக இருந்தேன், இன்றும் நான் சராசரி மனிதனாக இருக்கிறேன். நான் தொண்டர்களாகிய உங்களில் ஒருவன், தொண்டன் கட்சி கொடுக்கும் எந்தப் பணியையும் செய்து முடிக்க வேண்டும், என்ன செய்யப்பட வேண்டுமோ அது செய்யப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒரு நொடியில் ராஜினாமா செய்தேன்.
ராஜ்கோட்டில் இருந்து வரும் தொண்டர்களால் மட்டும்தான் அது முடியும். மறைந்த அர்விந்த்பாய் (மனியர் ராஜ்கோட்டின் முன்னாள் மேயர்). மறைந்த சிம்மன்கக்கா(மறைந்த மாநிலங்களவை உறுப்பினர்), மறைந்த கேஷுபாய் (படேல்), மறைந்த பிரவேன்காகா, வாஜுபாஜ் (குஜராத் முன்னாள் நிதியமைச்சர், கர்நாடகாவின் முன்னாள் ஆளுநர்) என எல்லோரும் நமக்குள் நன்னெறிகளை விதைத்துள்ளனர். இல்லாவிட்டால் (அதிகாரத்தை) ராஜினாமா செய்வது கடினம். நாங்கள் பதவிக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்காததால் இதைச் சொல்கிறோம்,” எனக் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் ரூபானி உரையாற்றியபோது, அரங்கில் இருந்த பல பாஜக தொண்டர்களின் கண்களில் இருந்து கண்ணீர் தாரைத் தாரையாக வழிந்துகொண்டிருந்தது. ரூபானி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியது பாஜகவின் முரட்டுத்தனமான வெளியேற்றம் என்கிறார் கெளஷிக் மேத்தா.
பட மூலாதாரம், Getty Images
“விஜய் ரூபானி மிகக் கடினமாக உழைக்கும் ஓர் அரசியல்வாதி. ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்து ஏபிவிபியில் இணைந்து பின்னர் பாஜகவுக்கு வந்தார். செளராஷ்டிராவில் பாஜகவை வலிமைப்படுத்தியதற்கு யாருக்காவது பெயர் தரவேண்டும் என்றால் அது விஜய் ரூபானியாகத்தான் இருக்க முடியும்.
அவர் அவ்வளவு கடினமாக உழைத்தும் அதற்கு அவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பலன் மிகத் தாமதமாகவே கிடைத்தது. 2014ஆம் ஆண்டுதான் அரசாங்கத்தில் அவர் அமைச்சர் ஆனார். ஆம் அவருக்கு முதலமைச்சர் பதவி எதிர்பாராமல்தான் கிடைத்தது. அப்போதைய துணை முதல்வர் நிதின் படேலுடனான அவரது உறவில் விரிசல் மற்றும் அரசியல் காரணங்களால் அவரது அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அதுபோன்ற குற்றச்சாட்டுகள் அரசுகளுக்கு எதிராகத் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. பாஜக அவரை கெளரவமாக வழியனுப்பி வைத்திருக்க வேண்டும்,” என்கிறார் கெளஷிக்.
விஜய் ரூபானி 1956ஆம் ஆண்டு மியான்மர் தலைநகர் ரங்கூனில் (இப்போது யாங்கான்) பிறந்தார். அவரது தந்தை ரசிக்லால் ரூபானி அங்கு ஒரு தானிய வியாபாரியாக இருந்தார். ஏழு சகோதரர்களில் விஜய் ரூபானி இளையவர்.
விஜய் ரூபானி பிறந்த சில மாதங்களில் மியான்மரில் இருந்த நிலையற்ற தன்மையால் ரூபானியின் குடும்பம் ராஜ்கோட்டிற்கு இடம் பெயர்ந்தது. ரசிக்லால் ஒரு பால் பேரிங் வியாபாரத்தைத் தொடங்கினார். விஜய் ரூபானி ஏபிவிபியில் 1973இல் சேர்ந்தார்.
ராஜ்கோட் மேயராக அவர் 1996ஆம் ஆண்டு தேர்வானார். 2006ஆம் ஆண்டில் அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வானார். அதன் பின்னர் அவர் பாஜகவின் குஜராத் மாநில பொதுச் செயலாளராகவும் செய்தித் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2012ஆம் ஆண்டு அவர் குஜராத் முனிசிபல் நிதி வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு ஜுனாகத் முனிசிபல் மாநகராட்சி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர், அவர் அந்தத் தேர்தலில் பாஜகவை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
அந்த நேரத்தில் ஜுனாகத் முனிசிபல் மாநகராட்சி மட்டும்தான் குஜராத்தில் பாஜக ஆட்சியில் இல்லாத அந்த வகை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பாக இருந்தது. அதன் பின்னர் 2014 மக்களவைத் தேர்தலில், செளராஷ்டிரா – கட்ச் பகுதியில் இருக்கும் 8 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றதில் ரூபானி ஒரு முக்கியப் பங்காற்றி தனது அரசியல் அந்தஸ்தை உயர்த்திக்கொண்டார்.
அரசியல் பயணம்
பட மூலாதாரம், Getty Images
கடந்த 2014இல் ராஜ்கோட் மேற்குத் தொகுதியில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக ஒரிம்த வாஜுபாய் வாலா கர்நாடகாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் வாலா எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ராஜ்கோட் மேற்கு தொகுதி காலியானது. அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக ரூபானிக்கு வாய்ப்பளித்து அவர் தனது முதல் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றார்.
அவரது வெற்றிக்குப் பிறகு ஆனந்திபென் அரசில் ரூபானி குடிநீர் விநியோக அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் விரைவிலேயே, அவர் குஜராத் மாநில பாஜக தலைவராகவும் பின்னர் மாநில முதல்வராகவும் நியமிக்கபட்டார்.
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, ரூபானியை பஞ்சாப் மாநில பொறுப்பாளராக பாஜக நியமித்தது. 2022 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ரூபானி போட்டியிடவில்லை. 2024 மக்களவைத் தேர்தலில் டெல்லியில் மூன்று தொகுதிகளின் பொறுப்பை பாஜக ரூபானியிடம் அளித்தது.
“ஆனால் முதலமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை அவரால் ஜீரனிக்கமுடியவில்லை என நான் நினைக்கிறேன். கட்சிக்காக இவ்வளவு கடினமாக உழைத்து இவ்வளவு தியாகங்கள் செய்த ஒருவர் இதுபோல் நீக்கப்பட முடியும் என்பதை அவரால் நம்ப முடியவில்லை,” என்கிறார் மேத்தா.
தனிப்பட்ட வாழ்க்கை
பட மூலாதாரம், Getty Images
ரூபானி ஒரு பங்குச் சந்தை தரகராக இருந்ததுடன், செளராஷ்டிரா- கட்ச் பங்குச் சந்தை தலைவராகவும் இருந்திருக்கிறார். அவரது மனைவி அஞ்சலி ரூபானியும் பாஜகவின் மகளிர் பிரிவில் தலைவராக உள்ளார்.
அவரது மகன் ரிஷப் மற்றும் மகள் ராதிகா வெளிநாட்டில் குடியேறிவிட்டனர். அவரது இன்னொரு மகன் புஜித்தின் அகால மரணத்திற்குப் பிறகு அவர் புஜித் ருபானி நினைவு அறக்கட்டளையைத் தொடங்கினார்.
இந்த அறக்கட்டளையின் மூலம் வசதியற்ற குழந்தைகள் கல்வி பெறுவதற்காக அவர் உழைத்தார்.
ரூபானிக்கு பட்டம் விடுவது மிகவும் பிடிக்கும், முதலமைச்சரான பின்னரும்கூட அவர் ஒவ்வொரு உத்ராயணத்தின் போதும் ராஜ்கோட் வந்து தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தனது வீட்டு மாடியில் இருந்து பட்டங்களை விடுவார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு