`விகடன் வீடியோ வைரலானது; பாராட்டுல வாயடைச்சுப் போனேன்" – சிலம்பத்தில் சாதிக்கும் ரூபிணி உற்சாகம்!

Share

`சிலம்பம்தான் என் உயிர்; என் வெற்றிக்கு அம்மாதான் காரணம்’ என்று, 14 ஆண்டுகளாக சிலம்பம் சுழற்றி வருபவரும், தேசிய போட்டிகளில் சாதனை படைத்து வருபவருமான ரூபிணி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆண்டுகளாக சிலம்பம் பயிற்சி பெற்றதன் மூலம் 4 தேசியப் போட்டிகளில் பங்கேற்று முத்திரை பதித்துள்ள ரூபிணி, புடவை கட்டி சிலம்பம் ஆடிய வீடியோ, விகடன் மூலம் வைரலானது. சிலம்பம் மீது எப்படி ஆர்வம் வந்தது… ஊக்கப்படுத்தி உறுதுணையாக நின்றவர்கள் யார்… சிலம்பம் கற்றதன் பின்னணி என்ன… நம்மிடம் விவரிக்கிறார் ரூபிணி…

ரூபிணி

“நாங்க விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. என் அப்பா சற்குணம், அம்மா வாசுகி, என்னோட அண்ணன் யுவராஜ். நான் யுகேஜி படிக்கும்போதே அப்பா தவறிட்டார். நான் சென்னை குயின்மேரிஸ் காலேஜ்ல உடற்கல்வி, சுகாதாரக்கல்வி, விளையாட்டுத் துறைல, பி.எஸ்ஸி செகண்டு இயர் படிச்சிட்டு இருக்கேன். நான், 14 வருஷமா சிலம்பம் பண்ணிட்டு இருக்கேன், போட்டிகள்ல கலந்துகிட்டு பரிசுகள் வாங்கி இருக்கேன். அதுமட்டுமல்லாம ஹேண்ட் பால் விளையாடுவேன். கராத்தே போட்டியில் மஞ்சள் பெல்ட் வாங்கி இருக்கேன். நிறைய கலைகள் இருந்தாலும் சிலம்பம் மேல எனக்கு தனி ஆர்வம் இருக்கு.

சின்ன வயசுல ஒருமுறை எங்க ஊர்ல சிலம்பம் மாஸ்டர் ஒருத்தர், சிலம்பம் டெமோ காட்டினார். அப்பலேருந்தே சிலம்பம் மேல தனி இன்ட்ரெஸ்ட் வந்துடுச்சு. ஒருமுறை, சிலம்பம் விளையாடிப் பார்க்கலாம்னு போனேன். அப்போலேருந்து சிலம்பம் எனக்கு உயிராயிடுச்சு. அந்தச் சிலம்பம் மாஸ்டர்கிட்டயே சிலம்பம் கத்துக்கலாம்னு கிளாஸுக்கும் போனேன். அப்போ, நான் மூணாவது படிச்சுகிட்டு இருந்தேன். நான் அஞ்சாவது படிக்கும் போதுதான் சிலம்பம் போட்டிகள்ல கலந்துக்க ஆரம்பிச்சேன். மாவட்ட அளவில போட்டியில நான் ஜெயிச்சு மெடலும் வாங்கினேன்.

மெடல்களுடன் ரூபிணி

நான், 10வது வரை மதன்லால் கேம்மணி விவேகானந்தா வித்யாலயா ஸ்கூல்லதான் படிச்சேன். ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ கும்மிடிப்பூண்டி அரசுப் பள்ளியில படிச்சேன். ஸ்கூல்ல சிலம்பம் ஆட நிறைய சப்போர்ட் பண்ணாங்க. ஸ்கூல் படிக்கும்போதும் நிறைய சிலம்பம் போட்டிகள்ல கலந்துகிட்டு ஜெயிச்சு இருக்கேன். SGFI நடத்துற விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை கலந்துகிட்டு சிலம்பம் பண்ணி இருக்கேன்.

அம்மாவோட சப்போர்ட்தான் காரணம்…

சிலம்பம்ல நிறைய பரிசுகள் வாங்கி இருக்கேன். நிறைய போட்டிகள்ல கலந்துகிட்டு இருக்கேன். தேசிய அளவிலான போட்டிக்கு நான் தமிழ்நாட்டில் இருந்து தேர்வானதுக்கு திருவள்ளூர் கலெக்டர் நேர்ல பாராட்டினார்; ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் பாராட்டி சான்றிதழையும் மெடலையும் எனக்கு கொடுத்தார். சமீபத்தில, சி.எம் டிராபி (CM TROPHY) தொடக்க விழாவில, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்பு சிலம்பம் சுத்திக் காட்டினேன். என்னோட இந்த வெற்றிக்கும், பெருமை எல்லாத்துக்குமே என்னோட அம்மாதான் முழு காரணம்.

கல்லூரி உடற்கல்வி ஆசிரியருடன் ரூபிணி

நான் சிலம்பம் கத்துகிட்டது, பி.கே முத்துராமலிங்கம் சிலம்பம் கலைக்கூடம். இது கும்மிடிப்பூண்டி பக்கம் பெத்திகுப்பம்ல இருக்கு. என்னுடைய மாஸ்டர் கண்ணன், கார்த்திக் இவங்க ரெண்டு பேரும் சிலம்பம் பண்றதுக்கு நிறையவே மோட்டிவேட் பண்ணாங்க. என் மாஸ்டருடைய ஆசான் சுப்பிரமணியன். இவங்க எல்லாருடைய சப்போர்ட்தான் இந்த அளவுக்கு நான் வர காரணம். தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் மூன்று முறை கலந்துட்டு, இரண்டு முறை ஜெயிச்சிருக்கேன். நாலாவது முறையா தேசிய சிலம்ப போட்டியில விளையாட தேர்ச்சியும் பெற்றிருக்கேன்.

போலீஸ் ஆகணும்னு ஆசை!

சிலம்பத்துல கை சிலம்பம், போர் சிலம்பம், ஆயுத சிலம்பம், அலங்காரச் சிலம்பம், விளையாட்டு சிலம்பம்னு நிறைய வகைகள் இருக்கு. இதுல விளையாட்டு சிலம்பம்தான் போட்டிகள்ல கலந்துகிட்டு விளையாடக்கூடியது. ஆயுத சிலம்பம்ங்கிறது கத்தி, மான் கொம்பு அந்த மாதிரியான ஆயுதத்தை வெச்சு விளையாடுறது.

ரூபிணி

விளையாட்டுல சிறந்துவிளங்கவும், உடலை கட்டுக்கோப்பா வச்சிக்கவும் சிலம்பம் பயன்படும். தற்காப்பு கலையாகவும் சிலம்பம் இருக்கு. எனக்கு போலீஸ்ல சப் இன்ஸ்பெக்டர் ஆகணும்னு ஆசை. அதனாலதான் சிலம்பத்தையும் கராத்தேவையும் தெரிஞ்சு வெச்சுக்கிட்டேன்.

விகடன் வீடியோவும் பாராட்டும்!

எனக்கு ரொம்ப சர்ப்ரைஸா இருந்த விஷயம்னா, என் காலேஜ் பொங்கல் செலிப்ரேஷன்ல புடவை கட்டிக்கிட்டு நான் சிலம்பம் ஆடினேன். அந்த வீடியோ அவள் விகடன் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்துல வெளியாகி ரொம்பவே வைரலானது. அந்த பெர்ஃபாமன்ஸுக்காக நான் எந்தப் பயிற்சியுமே எடுக்கல. திடீர்னு என்னுடைய ஆசிரியர் சிலம்பம் பண்ணுனு சொன்ன உடனே நான் பண்ணேன். ஆனா, அந்த வீடியோ வைரலாகும்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கல. வீடியோவை பார்த்துட்டு என் அம்மா, அண்ணா, மாஸ்டர்ஸ், ஆசிரியர்கள், நண்பர்கள்னு எல்லாருமே ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. கமென்ட்ஸ்ல பாராட்டுகளைப் பார்த்தபோது, என்ன சொல்றதுன்னு தெரியல, சந்தோஷத்துல வாயடைச்சுப் போயிட்டேன்.

பெண்கள் எல்லாருமே சிலம்பம் கத்துக்கணும்னு நான் சொல்லுவேன். சிலம்பம் கத்துக்குறது உடலையும் மனசையும் ரொம்பவே உறுதியாக்கும். இது, என்னுடைய 14 வருஷ சிலம்ப பயிற்சில நான் உணர்ந்த ஒரு விஷயம்!” என்றார் பெருமிதத்துடன்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com