உலக வாய் சுகாதார தினம் மார்ச் 20-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் வாய் சுகாதாரத்தைப் பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது.
வீட்டுக்கு வாசல் எப்படியோ, அப்படித்தான் உடலுக்கு வாய். முறையாகப் பராமரிக்காமலிருப்பதென்பது, நோய்களை விலைகொடுத்து வாங்குவதற்குச் சமம்.
பெரும்பாலான நேரங்களில் கிருமிகள் மற்றும் தொற்றுகளுக்குமான நுழைவுவாயிலாகவும் இருக்கிறது வாய்.
பற்களை முறையாகப் பாதுகாப்பது எப்படி, பல் ஆரோக்கியத்தில் எப்படியெல்லாம் கவனம் செலுத்தலாம் என்பது குறித்து அறிய வேண்டியது அவசியம்.
டென்டல் ஃப்ளாசிங்:
தினமும் பல் துலக்கிய பிறகு, டென்டல் ஃப்ளாசிங் முறை மூலமாக, பற்களுக்குள்ளான இடைவெளியைச் சுத்தம் செய்து வந்தாலே, ஈறு ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ளலாம்.
*வருடம் ஒருமுறை டாக்டர் விசிட்:
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து, பற்களை முழுமையாகப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம், வருடம் ஒருமுறையாவது பல் மருத்துவரை அணுகுவது கட்டாயம்.
*அலட்சியம் கூடாது:
ஈறுகளில் ரத்தக்கசிவு, பற்களில் வெள்ளைத்திட்டுகள், கரும்புள்ளிகள் போன்ற பல் தொடர்பான எந்தப் பிரச்னையையும் உதாசீனப்படுத்த வேண்டாம். முதல் நிலையிலேயே குறிப்பிட்ட பிரச்னையைச் சரிசெய்வதன் மூலமாக, பின்னாள்களில் பல பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம்.
*நா தூய்மை கட்டாயம்:
டூத் பிரஷின் பின்புற சொரசொரப்பான பகுதியைக் கொண்டு நாவைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
*மசாஜ்:
பல் துலக்கி முடித்தபின், விரலைக் கொண்டு ஈறுகளுக்கு மசாஜ் கொடுத்து வர வேண்டும். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இது பொருந்தும்.
*டூத் பேஸ்ட் – எது பெஸ்ட்?
ஃப்ளோரைட் ரசாயனம் கொண்ட பேஸ்ட்டை உபயோகிப்பது சிறப்பு. இது பல் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமானது.
8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, என்ன பேஸ்ட் உபயோகிக்கலாம் என்பதை, மருத்துவ ஆலோசனைக்குப் பின் முடிவு செய்யவும்.