முருங்கையும் நெய்யும்:
நெய்யைக் காய்ச்சும்போது, முருங்கை இலைகளைச் சேர்த்துக் காய்ச்சும் வழக்கம் நமது பாரம்பர்யத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. உணவு வகைகள் கெடாமலிருப்பதற்கு, முருங்கை இலைகளைச் சேர்த்து சமைக்கும் வழக்கம் பெரும்பாலான கிராமங்களில் இன்றும் தொடர்கிறது.
உங்களுக்கு ஒரு வரலாற்றுச் செய்தி. உலகப் புகழ்பெற்ற கியூபாவின் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ தனக்கு ஏற்பட்ட நோயைக் குணப்படுத்திக்கொள்ள முருங்கையை மருந்தாக பயன்படுத்திய வரலாற்றுச் செய்தி புகழ்பெற்றது. முருங்கைக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றியும் இணையத்தில் இப்போதே படித்து தெரிந்துகொள்ளுங்கள். மருத்துவமும் புதுமையான சிந்தனையும் உங்களுக்குள் துளிர்விடும்.
முருங்கை மரம் வளர்க்க ஆசையா? விதைகளை விதைத்தாலும் வளரும் அல்லது முருங்கைக்கொம்பை எடுத்து வந்து மண்ணில் புதைத்து, கொம்பின் நுனியில் மாட்டுச் சாணம் வைத்து தினமும் நீர் ஊற்றிப் பராமரித்தாலும் வளரும். நீங்கள் உயிர்கொடுத்த முருங்கைக்கொம்பு விரைவில் நீங்கள் ஆசைப்பட்ட முருங்கை மரமாக வளர ஆரம்பித்துவிடும். அதன் பின் விரும்பிய நேரத்தில் முருங்கை மரத்தின் பயன்களை அனுபவிக்கலாம்.
தாவரவியல் பெயர்:
Moringa oleifera
குடும்பம்:
Moringaceae
கண்டறிதல்:
ஓரளவு உயரமாக வளரும் மரம். தண்டு சொரசொரப்புடன் காணப்படும். தண்டிலிருந்து பிசின் சுரக்கும். சிறகு கூட்டிலை அமைப்பு. மலர்கள் வெண்மை நிறம். காய்கள் நீண்டிருக்கும். உள்ளிருக்கும் விதையில் சிறகு போன்ற அமைப்பு காணப்படும். முருங்கையின் தண்டு வலுவற்றதாய் இருக்கும். வேகமாக வீசும் காற்றுக்கே வளையும் தன்மை கொண்டது.
தாவர வேதிப் பொருள்கள்:
Beta – carotene, Moringine, Cysteine, Vitamin – C, Zeatin
முருங்கை… வலிமை கொடுக்கும் மூலிகை நண்பன்.