ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக அறிமுகம் ஆகவுள்ளார். இந்த தகவலை மேட்ச்சை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் தொடங்கவுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் விளையாடவுள்ளன. 70 லீக் ஆட்டங்கள் உள்பட மொத்தம் 74 போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஜியோ சினிமா நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இந்த முறை எந்த கட்டணமும் இன்றி ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஜியோ சினிமா ஆப் மற்றும் jiocinema.com என்ற இணைய தளம் ஆகியவற்றில் ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம். தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் உள்பட பிராந்திய மொழிகளில் ஜியோ சினிமா நிறுவனம் கிரிக்கெட் வர்ணனையை வழங்குகிறது.
இதேபோன்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் மிகச்சிறந்த அனுபவம் கொண்ட வீரர்களை வர்ணனையாளர்களாக ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பொறுப்பு வகிக்கும் ஸ்டீவன் ஸ்மித் இந்த ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக களம் இறங்கவுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்திருந்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.