எப்படிக் கண்டுபிடிப்பது?
முதலில் `ஆப்டிகல் கோஹெரென்ஸ் டோமோகிராபி’ என்ற டெஸ்ட் செய்யப்படும். இந்தப் பரிசோதனையில் கண்களைத் தொடாமல் லேசர் கதிர்களை உள்ளே செலுத்தி பயாப்சி போல செய்யப்படும். முன்பெல்லாம் கை நரம்பில் டை போன்ற திரவத்தை உள்செலுத்தி டெஸ்ட் செய்யப்படும். இப்போது டை இல்லாத ஆஞ்சியோகிராபி என்கிற நவீன டெஸ்ட் வந்துவிட்டது. அதன் பெயர் Optical coherence tomography angiography (OCT-A). இந்த நவீன டெஸ்ட்டின் மூலம் விழித்திரையை நான்காகப் பிரித்து அதன் எந்தப் பகுதியில் பிரச்னை இருக்கிறது என்று கண்டுபிடித்து சிகிச்சை செய்யப்படும்.
ஏஜ் ரிலேட்டடு மேகுலர் டீஜெனரேஷன் பிரச்னையில் `டிரை டைப்’ மற்றும் `வெட் டைப்’ என இரண்டு உண்டு.
`டிரை டைப்’ என்பது வயதாவதால் ஏற்படுகிற வறட்சி. அதைக் குணப்படுத்த வழிகளே இல்லை. ஏதேனும் மருந்தை ஊசி வழியே செலுத்தி சரிசெய்ய முடியுமா என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இன்னும் முடிவுகள் வந்தபாடில்லை. இந்தப் பிரச்னைக்கு வைட்டமின் சப்ளிமென்ட்டுகள் பரிந்துரைக்கப்படும். அதனால்தான் சிறுவயதிலிருந்தே கலர்ஃபுல்லான காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிட வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. பொன்னாங்கண்ணிக் கீரை, கேரட், மாம்பழம், பப்பாளி, மீன், பாதாம், வால்நட் போன்றவற்றைச் சாப்பிட வேண்டியது அவசியமாகிறது.
அடுத்தது `வெட் டைப்’. இதில்தான் விழித்திரைக்குள் படலம்போல உருவாகி, அதிலிருந்து தண்ணீரும், ரத்தமும் கசிந்து, விழித்திரை வீங்கி, அதனால் பார்வைத் திறன் குறையும். கேமரா லென்சில் தண்ணீர் இருந்தால் அதன் வழியே பார்க்கிற காட்சிகள் தெளிவாகத் தெரியாதில்லையா, அதுபோலத்தான் இதுவும். இதைச் சரிப்படுத்த அந்தக் காலத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் சற்று சிக்கலானவையாக இருந்தன.