விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், கான்சாபுரம், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது.
சுமார் 6,500 ஏக்கரில் நெல் விவசாயப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது நெல் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், சில பகுதிகளில் கோடை நெல் அறுவடைப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
ஆனால், இன்னும் வத்திராயிருப்பு பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

நெல் கொள்முதல் நிலையத்தை அரசு திறக்காததால், தனியாருக்குக் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட மிகக் குறைவான விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் நெல்லை விற்பனை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.