ஆசியாவின் அதி மூத்த யானை என்று கருதப்பட்ட 100 வயதைக் கடந்த வத்சலா யானை மத்திய பிரதேச மாநிலத்தில் உயிர் நீத்தது.
பன்னா புலிகள் சரணாலயத்தில் வாழ்ந்து வந்த வத்சலா, வெறும் யானை மட்டுமல்ல காட்டின் அமைதியைக் காத்துவந்த தலைமுறைகள் கடந்த தோழி என மத்திய பிரதேச முதலமைச்சர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
வத்சலா யானையை முழு மரியாதையுடன் தகனம் செய்துள்ளனர் வனத்துறையினர். சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் யானையாக வத்சலா இருந்துள்ளது.
எந்த ஒரு மூத்த பெண் யானைக்கும் அதன் கூட்டத்தில் பல பொறுப்புகள் இருக்கும். தலைமை தாங்கி வழிநடத்துவது மட்டுமல்லாமல் வத்சலா அங்கே குட்டி ஈனும் இளம் பெண்களுக்கு ஒரு பாட்டியை போல ஆதரவாக இருந்துள்ளது.
வத்சலா தந்தம் இல்லாத ஆசிய பெண் யானை. இது கேரளாவின் நீலாம்பூர் வனப்பிரிவின் அடர்ந்த காடுகளுக்குள் பிறந்தது. 1972-ம் ஆண்டு மத்தியபிரதேசத்துக்கு கொண்டுவரும்போதே அதன் வயது 50 என்கின்றனர்.
நர்மதாபுரத்தில் வசித்துவந்த அந்த யானை 1993-ம் ஆண்டு பன்னா புலிகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்தது முதல் 2004ம் ஆண்டு வரை வத்சலா காடுகளில் பொருள்களை எடுத்துச் செல்ல, கனமான மரங்களைத் தூக்கிவர பயன்படுத்தப்பட்டுள்ளது.