வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
வெயில் காலம் வந்தாலே ஆர்வமும் காய வைக்க இடவசதியும் உள்ளவர்கள் வடகம் இடும் வேலையில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். திருச்சியில் ஜவ்வரிசி வடகம் வீட்டுக்கும் மற்றும் அலுவலக நண்பர்களுக்கும் பொரித்து எடுத்துச் செல்லவும் மேலும் பகிரவும் கிட்டத்தட்ட எட்டு கிலோ வரை விதம் விதமாக இடுவேன்.
ஆனால் மிகக் கடுங்கோடை மாதங்களில் விட பனி முற்றிலும் விலகிய உடனேயே சில தினங்களில் போட்டு முடித்து விடுவதே சிறந்தது. ஆரம்ப நாட்களில் வெயில் நின்று அடிக்கும். நாளாக ஆக வெப்பம் அதிகரித்தாலும் அனல் காற்றும் அதிகம் வீசுமாதலால் ஈர வடகத்தில் காற்றில் பறக்கும் மண் தூசுகள் மற்றும் காய்ந்த இலைகள் போன்றவை ஒட்டிக் கொள்ளும்.
மேலும் மிக அதிகமான வெயிலில் வடகம் சில சமயங்களில் நடுவில் கோடுகளுடன் விரிந்து கொள்ளும். வடகத்துக்குக் கிளறிய மாவையும் பாதி காய்ந்த வடகத்தையும் விரும்பிப் பலர் சாப்பிடுவார்கள்.
அதன் மிளகாய்ச் சாற்றுக் காரம் வெயில் மிக உக்கிரமான நாட்களில் வயிற்று உபாதைகளும் தந்து விடும். ஜவ்வரிசி வடகம் விரிந்து போவதற்கு பயன்படுத்தும் ஜவ்வரிசியின் தரமும் முக்கியக் காரணம். நான் பின் பற்றிய எளிய வழியைப் பகிர்ந்து கொள்கிறேன்.