பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் கான் வங்கதேச வீரர்களின் முழு உடல் தகுதி, வேகப்பந்து வீச்சு, ஃபீல்டிங் போன்றவை இந்திய அணிக்கு ஒரு அச்சுறுத்தல்தான் என்று எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை 2-0 என்று வெற்றி பெற்று வரலாறு படைத்த பிறகு இப்போது இந்தியாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட் பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேசம். நாளை, 19-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்தத் தொடரை வங்கதேசம் வென்றதற்கு பல காரணங்களில் ஒன்று வங்கதேச வீரர்களின் உடல் தகுதியே என்கிறார் பாசித் கான்.
இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அவர்களின் உடல் தகுதி அபாரம், பொதுவாக நாங்கள் ஆகஸ்ட்டில் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதில்லை. காற்றில் ஈரப்பதம் உச்சத்தில் இருக்கும் காலகட்டம் அது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகவும் கடினமான காலமாகும் அது. ஆனால், வங்கதேச வீரர்கள் தங்கள் உடல் தகுதியினால் அவற்றை முறியடித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பொருத்தமில்லாத ஒரு நிலைமையில் வங்கதேசம் உடல் தகுதியுடன் சிறப்பாக ஆடினர்.
இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்துவதெல்லாம் மிக மிகக் கடினம். ஆனால், வங்கதேசத்தின் இந்த அணி வித்தியாசமானது, ஆகவே குறைத்து எடைப் போடக்கூடாது. மெஹதி ஹசன் மிராஸ், ஷாகிப் அல் ஹசன் பெரிய ஆல்ரவுண்டர்கள். இப்போது அந்த அணியின் வேகப்பந்து வீச்சும் அற்புதமாக இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் உலக அணிகளை அச்சுறுத்த முடியும்.
வங்கதேச அணியை தொடர்ந்து பார்த்து வரும்போது ஒரு விஷயம் புலப்படும். மளமளவென கொத்தாக விக்கெட்டுகளை இழக்கக் கூடிய அணி அது. ஆனால், அவர்கள் பெரிய அளவில் கவனம் செலுத்தி ஆடுகின்றனர். முஷ்பிகுர் ரஹிம், 191 ரன்கள் எடுத்த போது எந்த ஒரு கட்டத்திலும் அவர் கவனம் சிதறவில்லை. கவனம் என்பது உடல் தகுதியுடன் தொடர்புடையது.
லிட்டன் தாஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 26 ரன்கள் என்ற நிலையிலிருந்து சதம் எடுத்தது, மெஹதி ஹசன் மிராசுடன் சேர்ந்து ஆடிய இன்னிங்ஸ், பெரிய டெஸ்ட் இன்னிங்ஸ். வெற்றிக்கான இன்னிங்ஸ். அன்றும் கடும் வெயில், ஈரப்பதம் உச்சத்தில் இருந்ததால் வியர்வை கொட்டி களைப்பு ஏற்படும். ஆனால், லிட்டன் தாஸ் அந்த கடினமான நிலையிலும் சிறப்பாக ஆட முடிகிறது என்றால் ஃபிட்னெஸ் தான் காரணம்.
மேலும், அவர்களது வேகப்பந்து வீச்சாளர்களான டஸ்கின் அகமது, நஹித் ராணா, ஹசன் மஹமூது ஆகியோர் 3-வது, 4-வது ஸ்பெல் வீசும்போது கூட களைப்படைவதில்லை, சோர்வு அவர்கள் உடலில் தெரியவில்லை. பந்தின் வேகமும் குறையவில்லை.
ஆலன் டொனால்டிடம் நான் பேசியபோது, வங்கதேசம் வேகப்பந்து வீச்சில் பெரிய அளவில் முன்னேறி வருகிறது என்றார். குறிப்பாக ஹசன் மஹமூதுவை உயர்வாகக் குறிப்பிட்டார். வங்கதேச பவுலிங் முன்னேற்றம் கண்டதற்கு உதாரணம் ராவல்பிண்டி கிரேவ்யார்டு பிட்சிலேயே 10 பாகிஸ்தான் விக்கெட்டுகளை அவர்களது வேகப்பந்து வீச்சாளர்கள்தான் எடுத்தனர். நஹீத் ராணா மணிக்கு 150 கி.மீ வேகம் தொடுகிறார். துல்லியமாக வீசுகின்றனர், எனவே இந்திய அணி இந்த வங்கதேச அணியை துச்சமாக நினைத்தல் கூடாது. இவ்வாறு பாசித் கான் கூறினார்.