கர்நாடக இசைப் பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ ஐக்கிய ராஜ்ஜியத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது ரத்தக் கசிவு நோயால் (அன்யூரிசம்) பாதிக்கப்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதனை அடுத்து, அவரது குடும்பத்தார் ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், பாம்பே ஜெயஸ்ரீக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்தது என்றும் அவர் தேறிவருகிறார் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் தற்போது தனது இசை நிகழ்ச்சிகளுக்காக சுற்றுப்பயணம் செய்துவந்த நிலையில், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலால் அவரது ரசிகர்கள் பலரும் வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பாம்பே ஜெயஸ்ரீக்கு சங்கீதா கலாநிதி விருதுக்கு முன்மொழிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மியூசிக் அகாடமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நலன் குறித்து குடும்பத்தார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஐக்கிய ராஜ்ஜியத்தில் பாம்பே ஜெயஸ்ரீக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்தது. தற்போது அவர் நலமாக உள்ளார், தேறிவருகிறார். அவருக்கு சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது,” என்று தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நலன் குறித்து வெளியாகும் போலி செய்திகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்யூரிசம் என்றால் என்ன?
பாம்பே ஜெயஸ்ரீ ரத்தக் கசிவு நோயால் (அன்யூரிசம்) பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து, அன்யூரிசம் என்றால் என்ன என்றும் அன்யூரிசம் வராமல் தற்காத்துக் கொள்வது எப்படி என்று பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர். இது குறித்து அரசு ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்த நாளத்துறை தலைவர், பேராசிரியர் இளஞ்சேரலாதனிடம் பேசினோம்.
அன்யூரிசம் பற்றி விவரித்த அவர், அன்யூரிசம் என்பது, மூளையில் உள்ள ரத்த நாளங்கள், இதயம் மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள பெருந்தமனி, உடலின் மற்ற உறுப்புக்களுக்கான ரத்த நாளங்கள் ஆகியவற்றில் , ஏற்படும் வீக்கங்களும் , அதனால் ரத்த நாள வெடிப்பு காரணமாக ஏற்படும் ரத்தக் கசிவு நோய்கள் போன்றவற்றைக் குறிக்கும் என்கிறார்.
”ரத்த நாளங்களில் ஏற்படும் சேதம் அல்லது இரத்தக் குழாயின் சுவர் பல வகை நோய்களால் அரித்து ,பலவீனமடைவதால் ஏற்படும் வீக்கத்தை அன்யூரிசம் என்கிறோம்.
அதாவது உடலில் பல உறுப்புகளுக்கு ரத்த நாளங்கள் வழியாக ரத்தம் செல்கிறது. நல்ல ரத்தத்தை பல உறுப்புகளுக்குக் கொண்டு செல்லும், தமனி(arteries)யில் வீக்கம் ஏற்பட்டால், சில சமயம் அது வெடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு உறுப்பிலும் அது வெவ்வேறு விதத்தில் அது தாக்கத்தை ஏற்படுத்தும். மூளையில் அன்யூரிசம் ஏற்பட்டால், அது மூளை பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டு , உயிருக்கு ஊறு விளைவிக்கிறது . அதே இதயம் அல்லது பிற பகுதிகளில் ஏற்பட்டால், அந்த உறுப்பில் உள்ள தமனி வீங்கி, வெடித்துப்போகும் நிலை ஏற்படலாம்,” என்கிறார் மருத்துவர் இளஞ்சேரலாதன்.
அன்யூரிசம் ஏற்படாமல் தற்காத்து கொள்வது எப்படி?
அன்யூரிசம் என்ற நிலை ஏற்படுவதற்கு சில அறிகுறிகள் ஒருசில சமயத்தில் தென்படும் என்கிறார் அவர்.
தொடர் தலைவலி , வயிற்று வலி , வலி முதுகுப்பகுதிக்கு பரவுதல் , வயிற்றில் இரத்த நாடித்துடிப்புடன் வீக்கம்,
தொடர்ந்து ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது,
நாள்பட்ட நீரிழிவு நோய் பாதிப்பு,
குடும்ப உறுப்பினர் வகையில், யாரவது இளம் பருவத்தில் இதய நோய் உள்ளிட்ட வியாதிகளால் இறந்தது,
பாதிக்கப்பட்டவர் அதிகமாக புகைபிடிக்கும் பழக்கத்தில் இருப்பது ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் ஆராயவேண்டும் என்கிறார் மருத்துவர்.
தொடர்தலைவலி இருந்தால் அதனை புறக்கணிக்காமல், சிகிச்சை எடுத்துக்கொள்வதும், உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அதனை சரிசெய்ய தொடர் முயற்சிகள் எடுப்பதும் அவசியம் என்கிறார் மருத்துவர் இளஞ்சேரலாதன்.
”50 வயதுக்கு மேற்பட்டவர்கள், தொடர் தலைவலியைப் புறக்கணிக்கக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் பரிசோதனை செய்துகொண்டால், ஆரம்பக்கட்டத்தில் பல வியாதிகளை அடையாளம் காணமுடியும்.
அதேபோல, உயர்ரத்த அழுத்தம் இருப்பவர்கள், முறையான மருத்துவ உதவிகளை எடுத்துவருவது தேவை. அன்யூரிசம் ஏற்பட்டால், ரத்தகுழாயின் அளவு பெரிதாகிக்கொண்டே வரும். அதனை தடுக்க மருந்துகள் கிடைக்கின்றன.
மருத்துவம் மிகவும் நவீனமாகிவிட்ட காலத்தில் நாம் இருக்கிறோம். அன்யூரிச இரத்த நாள வீக்கங்களுக்கான , நுண்துளை (Endovascular)ரத்த நாள சிகிச்சைகளும் உள்ளன. அதனால் தீவிர நிலையில் சிகிச்சைக்கு செல்வதற்கு பதிலாக, ஆரம்பக்கட்டத்தில் கண்டறிவது சிறந்தது,”என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: