சென்னை காவேரி மருத்துவமனையில், ரோபோ தொழில்நுட்ப உதவியுடன் 24 வயது நபருக்கு சிறுநீரக உறுப்புமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், சில முன்னணி மருத்துவமனைகளில் மட்டுமே ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யும் வசதி உள்ளது. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையிலும் இந்தத் தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
காவேரி இன்ஸ்டிடியூட் ஆஃப் ரோபோட்டிக் சர்ஜரி (Kauvery Institute of Robotic Surgery) என்ற பெயரில் இயங்கி வரும் அறுவை சிகிச்சை சிறப்பு மையத்தில், உயிருள்ள நபரிடமிருந்து பெறப்படும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் தொடர்பான அறுவை சிகிச்சைகள், ரோபோ உதவியுடன் நவீன முறையில் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி, காவேரி மருத்துவமனையில் ரோபோ தொழில்நுட்ப உதவியுடன் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. மூன்று ஆண்டுகளாகவே சிறுநீரகக் கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்த 24 வயது இளைஞருக்கு, வெற்றிகரமாக இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.