புதுடெல்லி: அமலாக்கத்துறையும், சிபிஐயும் எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைக்கும் நிலையில், ஒன்றிய அரசு தனது நண்பனை விடுவித்து விட்டது என மெகுல் சோக்சி விவகாரத்தில் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. குஜராத் வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்தனர். சோக்சி, கரீபியன் தீவுகளில் ஒன்றான ஆன்டிகுவா நாட்டிற்கு தப்பி ஓடினார். அந்தநாட்டின் குடியுரிமை பெற்றுள்ள சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்த சர்வதேச போலீசான இன்டர்போல் உதவியை சிபிஐ நாடியது. இதற்காக கடந்த 2018ம் ஆண்டு சோக்சிக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் விடுத்தது.
இதற்கிடையே, சோக்சி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்டர்போலின் ரெட்கார்னர் நோட்டீஸ் பட்டியலில் இருந்து சோக்சி பெயர் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் இந்தியா தவிர எந்த நாட்டிற்கும் செல்ல முடியும். இது இந்திய புலனாய்வு அமைப்புகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தனது டிவிட்டரில், ‘‘வங்கியிலிருந்து மக்கள் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிய மெகுல் சோக்சியை பாதுகாப்பவர்கள் தேசபக்தி பற்றி பேசுகிறார்கள். அதுதான் மிகப்பெரிய காமெடி. எதிர்கட்சி தலைவர்களை அமலாக்கத்துறை, சிபிஐ குறிவைக்கிறது.
ஆனால் இன்டர்போலிடம் இருந்து மோடியின் நண்பர் மெகுல் சோக்சியை விடுவிக்கிறது. தனது நெருங்கிய நண்பருக்காக நாடாளுமன்றத்தையே முடக்குபவர்கள், 5 ஆண்டுக்கு முன் தப்பிய ஓடிய பழைய நண்பனுக்கு எப்படி உதவாமல் இருப்பார்கள்’’ என விமர்சித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘எதிர்க்கட்சிகளுக்கு அமலாக்கத்துறை, சிபிஐ. நண்பனை விட்டுவிடுங்கள். மோதானி (மோடி-அதானி) மாடல் என்பது முதலில் கொள்ளை அடித்து விட்டு, பின்னர் தண்டனையின்றி தப்புவது’’ என கிண்டல் செய்துள்ளார்.
* சிபிஐ விளக்கம் மெகுல் சோக்சி விவகாரம் தொடர்பாக சிபிஐ தரப்பில் நேற்று விளக்கம் தரப்பட்டது. அந்த அறிக்கையில், ‘ரெட் கார்னர் நோட்டீசை எதிர்த்து இன்டர்போலிடம் சோக்சி கடந்த 2020ல் செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. பின்னர் 2022ல் சிசிஎப் (இன்டர்போலின் ஆவணங்கள் கட்டுப்பாடு) குழுவிடம் மேல்முறையீடு செய்தார். இந்த குழு இன்டர்போலின் கீழ் செயல்படாத, சர்வதேச வழக்கறிஞர்கள் கொண்ட குழு. இதன் முடிவை எதிர்த்து மீண்டும் இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பட்டியலில் சோக்சி பெயரை சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.