கள்ளநோட்டு, கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 2016 -ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு பண மதிப்பிழப்பை அறிவித்தது. அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் புதிய 200, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் வந்ததாக தகவல்கள் பரவின. அத்துடன் 2000 ரூபாய் நோட்டு சார்ந்த பல வதந்திகளும் வந்தன.
அதனால் மக்கள் மத்தியில், 2000 ரூபாய் நோட்டுகள் வாங்குவதில் தயக்கம் ஏற்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் கள்ள நோட்டுகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதுகுறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த அறிக்கையும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், “வங்கி பணப் பரிவர்த்தனைகளிலும் இனிமேல் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது – இந்தியன் வங்கி அறிவிப்பு” – என்ற இந்த தகவல் கடந்த 5 நாட்களாக வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது.