ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. இதனால் திருமணம் செய்து கொள்ள ஆண்களுக்கு பெண்கள் கிடைக்காமல் இருக்கிறது. எனவே மகாராஷ்டிராவில் இருந்து பெண்கள் ராஜஸ்தான் மற்றும் குஜராத்திற்குக் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
இது குறித்து மகாராஷ்டிரா சட்ட மேலவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ’மகாராஷ்டிராவில் இருந்து ஏழைப்பெண்கள் திருமணத்திற்காக ராஜஸ்தான், குஜராத்திற்கு கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. ரூ.1 – 2 லட்சத்திற்காக அவர்கள் விற்பனை செய்யப்படுகின்றனர்.
நடப்பு ஆண்டில் மட்டும் 24 பெண்கள் கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. 2021-ம் ஆண்டு 448 பேர் திருமணத்திற்காக பெண்களை கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். 2022-ம் ஆண்டு 984 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 6,133 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. 1330 மைனர் பெண்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 1097 பேர் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர்.
தவிர 2022-ம் ஆண்டில் 4437 பெண்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 3039 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மும்பையின் ஒவ்வொரு மண்டலத்திலும் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. காணாமல் போன பெண்களை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் நிர்பயா படைகளும் உதவி செய்து வருகின்றன’’ என்றார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு கூட மும்பையை சேர்ந்த பெண் ஒருவரை வேலை வாங்கித்தருவதாக கூறி ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்று கட்டாயத் திருமணம் செய்த சம்பவம் நடந்தது. மும்பை போலீஸார் ராஜஸ்தான் சென்று அவரை மீட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.