ரூட்டு தல தாக்குதல் விவகாரம்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆயுத தடை சட்டம் உட்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது

Share

ரூட்டு தல விவகாரத்தில் இரண்டு தரப்பைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்களாலும் கைகளாலும் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் இரண்டு மாணவர்களை கீழ்ப்பாக்கம் போலீசார் ஆயுத தடை சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள ஹாரிங்டன் சாலையில், நேற்று காலை அக்கல்லூரியின் இரு பிரிவு மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்களாலும் கைகளாலும் ஒருவரை ஒருவர் திடீரென தாக்கிக் கொண்டனர். இதுதொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 6 மாணவர்களை கீழ்ப்பாக்கம் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் பூந்தமல்லியில் இருந்து வரும் பச்சையப்பன் கல்லூரி “பூந்தமல்லி ரூட் தல” மாணவர்களுக்கும், திருத்தணியில் இருந்து வரும் பச்சையப்பன் கல்லூரி “திருத்தணி ரூட் தல” மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது தெரிய வந்தது. மேலும் எந்த ரூட்டு தல கெத்து? என்பதில் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது. இரண்டு ரூட்டு தல கேங்கைச் சேர்ந்த மாணவர்களும் முதல் நாளே சண்டைக்கு திட்டமிட்டுள்ளனர் என்பதும், சண்டையில் ஈடுபடுவதற்காக 8 பட்டாக் கத்திகள், இரண்டு பைகளில் காலி மது பாட்டில்கள் மற்றும் கற்களை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து 8 பட்டாக் கத்திகள் மற்றும் காலி மதுபாட்டில்கள் வைத்திருந்த இடத்திற்குச் சென்ற கீழ்ப்பாக்கம் போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில் பூந்தமல்லி ரூட்டு தல மாணவர்கள், திருத்தணி ரூட் தல மாணவர்கள் மட்டுமல்லாமல் பெரம்பூர் ரூட்டு தல மாணவர்களும் இந்த பிரச்னையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக திருத்தணி ரூட் தல கேங்கைச் சேர்ந்த பிஏ வரலாறு மூன்றாமாண்டு படித்து வரும் திருவள்ளூரை சேர்ந்த கிஷோர் (21), பூந்தமல்லி ரூட்டு தல கேங்கைச் சேர்ந்த பிஏ வரலாறு மூன்றாமாண்டு படித்து வரும் நசரத்பேட்டையைச் சேர்ந்த பிரேம்குமார்(20) ஆகிய இரண்டு மாணவர்களை கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்

கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்கள் மீதும் ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த ரூட்டு தல தாக்குதல் வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற மாணவர்களையும் கீழ்ப்பாக்கம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com