புது டெல்லி: ரிஷப் பந்த் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்பியது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் ஸ்விங் பவுலிங் கிங்குமான வாசிம் அக்ரம் தன் அபரிமிதமான மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ரிஷப் ஆட்டத்தைப் பாருங்கள். பெரும் துன்பத்திலிருந்து மீண்டெழுந்த அதிமனிதன் அவர். திரும்பி வந்த கையோடு சதம் விளாசிய அதிசய மனிதனும் கூட. அவருக்கு நடந்த கார் விபத்தைக் கேள்விப்பட்டதும், அது நடந்த விதம் குறித்து அறிந்ததும் பாகிஸ்தானில் நாங்கள் உண்மையில் கவலையடைந்தோம். நானும் கவலைப்பட்டேன், கவலையை ட்வீட்டாகப் பதிவிட்டேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஆடும் விதமே அலாதியானது. ஆஸ்திரேலியாவில் சதம் அடித்து எங்களையெல்லாம் வியப்படையச் செய்தார். இங்கிலாந்துக்கு எதிராக அவர் பேட் செய்த விதம், அதுவும் ஜேம்ஸ் ஆண்டர்சனை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடியது, ஏன் பாட் கமின்ஸை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடியது அனைத்தும் அவரை ஒரு தனி ரகத்தில் கொண்டு போய் சேர்க்கிறது. ரிஷப் பந்த் ஒரு ஸ்பெஷல்.
அதுவும் ஒரு பயங்கரமான விபத்தில் இருந்து மீண்டு வந்து இப்படி ஆடுகிறார் என்றால், என்ன ஒரு மனவலிமை இருந்தால் இப்படி செய்ய முடியும்?! தலைமுறை தலைமுறையாக இந்தக் கதை நிச்சயம் பரவும். அதாவது வீரர் ஒருவரை, சாதாரண மனிதர் ஒருவரை உத்வேகப்படுத்தி உற்சாகப்படுத்தி செயலூக்கம் பெற வைக்க ரிஷப் பந்த் மீண்டெழுந்த கதை நிச்சயம் பெரிய அளவில் உதவும். மீண்டும் வந்தார், ஐபிஎல் தொடரில் 40 என்ற சராசரியைத் தொட்டார். 446 ரன்களை 155 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார். ஓ! என்ன ஒரு அதிசயக் குழந்தை இந்த ரிஷப் பண்ட்” என புகழ்ந்துள்ளார் வாசிம் அக்ரம்.