
பட மூலாதாரம், STR/AFP via Getty Images
கோப்புப் படம்
ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த ஏழு பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை ஆன நிலையில், சாந்தன், முருகன், நளினி ஆகியோர் வேலூர் சிறையிலும் ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் புழல் சிறையிலும் இருந்தனர்.
பேரறிவாளனைப் போலவே தங்களையும் விடுவிக்க வேண்டுமென அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களை விடுதலை செய்வதாக நேற்று அறிவித்தது.
இந்த ஆறு பேரில் நளினியும் ரவிச்சந்திரனும் ஏற்கனவே சிறைவிடுப்பில் இருந்தனர். நளினி வேலூரிலும் ரவிச்சந்திரன் அருப்புக்கோட்டையிலும் தங்கியிருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு இன்று வெளியானது. இதையடுத்து நளினி, தான் அடைக்கப்பட்டிருந்த வேலூர் சிறைக்கு வந்து தன்னுடைய சிறை விடுப்பை ஒப்படைத்து, முறைப்படி விடுதலையானார். அதேபோல, அதே சிறையில் இருந்த சாந்தன், முருகன் ஆகியோரும் விடுவிக்கப்பட்டனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர்
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோரும் விடுவிக்கப்பட்டனர். ரவிச்சந்திரன் தன்னுடைய சிறைவிடுப்பை ஒப்படைப்பதற்காக அருப்புக்கோட்டையிலிருந்து மதுரை சென்றுகொண்டிருக்கிறார். அவர் இன்று இரவுக்குள் விடுதலை ஆவார் என நம்பப்படுகிறது.
இன்று விடுதலை ஆனவர்களில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் திருச்சி சிறப்பு முகாமிற்குக் கொண்டுசெல்லப்படுகின்றனர்.
திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்படும் இவர்களை, அவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்ல அனுமதிக்கவோ, விரும்பினால் இலங்கையராக பதிவுசெய்துகொண்டு தமிழ்நாட்டிலேயே வசிக்க அனுமதிக்கவோ அரசிடம் கோரப்போவதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதில், முருகன், ஜெயக்குமார் ஆகியோர் இந்தியர்களைத் திருமணம் செய்துள்ளனர். அந்த அடிப்படையில், அவர்கள் தங்களை இங்கேயே வசிக்க அனுமதிக்கக்கோரலாம் எனத் தெரிகிறது.
தாய்மார்கள் உடலுக்கு உகந்த சீரா மீன்: என்ன காரணம்? எங்கே கிடைக்கிறது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: